அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக வை.எல்.எஸ். ஹமீடை மீண்டும் நியமிக்க அக்கட்சி இன்று (21) செவ்வாய்க்கிழமை கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இணக்கம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமன விவகாரத்தில் அக்கட்சியின் ஸ்தாபக செயலாளர் நாயகமான வை.எல்.எஸ் ஹமீட்  மற்றும் அக்கட்சியின் தலைவரான றிசாத் பதியுதீன் ஆகியோருக்கு இடையில் பிளவு ஏற்பட்டது.

இதனையடுத்து, செயலாளர் பதவியிலிருந்து வை.எல்.எஸ் ஹமீட், கட்சித் தலைவர் றிசாத் பதியுதீனால் நீக்கப்பட்டார். இந்த நீக்கத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வை.எல்.எஸ் ஹமீட், மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார்.

மன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை அடுத்து, கடந்த ஏழு வருடங்களாக இடம்பெற்ற குறித்த மனு மீதான விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

செயலாளர் நாயகம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வை.எல்.எஸ் ஹமீடினை அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடைபெறவுள்ள கட்சியின் போராளார் மாநாட்டில் மீண்டும் கட்சியின் செயலாளர் நாயகம் நியமிக்கப்படுவார் என்ற உறுதிமொழி அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மனுவினை வை.எல்.எஸ் ஹமீட், வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். இன்றைய விசாரணையின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன், தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி, செயலாளர் நாயகம் எம்.சுபைர்தீன், முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் சட்ட ஆலோசகர் றுஸ்தி ஹபீப் ஆகியோர் மன்றில் சமூகமளித்திருந்தனர்.

நன்றி - Vidiyal.lk 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.