எமது அன்புக்கும் மரியாதைக்குமுரிய முன்னை நாள் கல்வி அமைச்சர் அல்ஹாஜ் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களது 118வது பிறந்த தினத்தை நினைவு கூரும் வகையில் சில வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இக்கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது.

(முஹம்மத் றஸீன்)

மக்களுக்காகவே வாழ்ந்த மாபெரும் தலைவர்

ஒருவர் இறந்ததும் அவரது பாவங்களும் அவரோடு அடக்கம் செய்யப்பட்டுவிடுகின்றன. எஞ்சியிருப்பது அவர் செய்த நன்மைகளும் நற்கருமங்களும் மட்டுமே என்று கூறப்படுவதுண்டு. அந்த அடிப்படையில் தாம் ஆற்றிய அரும்பணிகள் காரணமாக அழியாப் புகழுடன் நம்முள்ளத்தில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மாமனிதர்தான் முன்னைநாள் கல்வி அமைச்சர் அல்ஹாஜ் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள்.

அவர் மறைந்து இன்றுடன் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு கடந்துவிட்டன. எமது மக்களும் அவரது நற்பணிகளைப் படிப்படியாக மறந்து ஒரு புது வகையான அரசியல்வானில் சிறகடிக்க ஆரம்பித்துவிட்டனர். இன்று அரசியல் லாபம் கருதியே அனைத்து காரியங்களும் தீர்மானிக்கப்படுகின்றன.

ஒருவர் மரணிக்கும்போது ஒன்றில் அவர் அதிகாரத்தில் அமர்ந்திருக்கவேண்டும் அல்லது தனக்கென ஒரு வாரிசை விட்டுச்சென்றிருக்கவேண்டும். அப்போதுதான் அவரைக் கொண்டாட ஆயிரமாயிரம்பேர் அணிதிரள்வர். இது அரசியலில் எழுதப்படாத ஒரு விதி. 1960/1970களில்  ஒரு கல்வி அமைச்சராக நாட்டுக்கும் நமது சமூகத்திற்கும் அவர் ஆற்றிய அரும்பணிகள் எந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாலும் இதுவரை முறியடிக்க முடியாத சாதனையாகும். 

அவர் மறைந்தபோது அவரது வாழ்க்கை வரலாற்றை முன்னெப்போதுமில்லாத வகையில் வெளியிடப்போவதாக செய்திகள் வெளிவந்தன. அவருக்கொரு மணிமண்டபம் அமைப்போம், அவர் பெயரில் ஒரு புலமைப்பரிசில் நிதியம் ஒன்றை உருவாக்குவோம், வருடம்தோறும் அவரது நினைவுப் பேருரைகள் நிகழ்த்த ஏற்பாடு செய்வோம் என்றெல்லாம் பலர் முழக்கமிட்டனர். ஆனால் ஒரு முத்திரை வெளியிட்டதோடு அனைத்துக்கும் ஒரேயடியாக முத்திரை குத்திவிட்டார்கள்!

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியும் அலிகார் பல்கலைக் கழகமும் ஒரு புடம் போட்ட தங்கமாக அவரை நமது சமூகத்திற்கு அளித்தன. பல்கலைக் கழக விரிவுரையாளராக செல்லவிருந்த அவர் தனது குருநாதர் டீ.பி. ஜாயா அவர்களது வேண்டுகோளை சிரமேற்கொண்டு ஒரு ஓலைக் கட்டடத்தையும் ஒரு சில மாணவர்களையும் கொண்டிருந்த கம்பளை ஸாஹிராப் பாடசாலையைப் பொறுப்பேற்றார். இவ்வாறு தமது கல்விப் பணியை ஆரம்பித்த பதியுத்தீன் அவர்கள் பாடசாலையை முன்னேற்றுவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டார். அதற்காக 1956இல் தன்னை நாடி வந்த அமைச்சர் பதவியையும் நிராகரித்தார். அதன்பின் மிகக் குறுகிய காலத்தில் அக்கல்லூரியை நாட்டின் ஏனைய பாடசாலைகளின் தரத்திற்கு உயர்த்துவதில் வெற்றி கண்டார். 

அமரர் பண்டாரநாயக்கவுடனான அவரது நட்பு அவரை அரசியல் அரங்கினுள் இழுத்துவந்து பல உயர் பதவிகளை அலங்கரிக்கச் செய்தது என்பதைவிட அவர் பிரதிநிதித்துவப்படுத்திய சமூகத்தினதும் நாட்டினதும் கல்வி கலாசார மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது என்பதே யதார்த்தமானதாகும்.  இவருடைய காலத்திலேயே பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டு கல்வித் துறையிலிருந்த ஏற்றத் தாழ்வுகள், தனியார் ஆதிக்கம் என்பன அகற்றப்பட்டு இலவசக் கல்வியை அனைவரும் ஆக்கபூர்வமாக அனுபவிக்கும் வண்ணம் ஒரு தேசிய கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டது. இக்காலத்திலேயே யாழ்ப்பாண பல்கலைக் கழகமும் உருவாக்கப்பட்டது.

எவ்வாறு 1956இல் நாட்டில் குறிப்பாக சிங்கள மக்களிடையே ஒரு சமூகப் புரட்சி ஏற்பட அமரர் பண்டாரநாயக்க வழி வகுத்தாரோ அதேபோல பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் 1960க்குப் பின் முஸ்லிம் சமூகத்தில் கல்வித் துறையிலும் ஏனைய துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கு அவசியமான அடித்தளத்தை அமைப்பதில் வெற்றி கண்டார். ஆனால் 1977 பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்த ஒரு தொகுதியில் அவர் அடைந்த தோல்வி தீவிர அரசியலில் இருந்து அவரை ஒதுங்க வைத்தது. 

அரசியலில் நிலைத்து நின்ற காலம்வரை தனது கட்சி செயற்பாடுகளுக்கும் நேர்மையான அரசியலுக்கும் கட்டுப்பட்டவராகக் கடமையாற்றிய அவர் தான் செயற்படுத்திய எந்த ஒரு விடயத்திலும் அரசியலைப் புகுத்தி அதனை மாசுபடுத்தவோ விளம்பரப்படுத்தவோ விரும்பவில்லை. 

தனது கூரிய அறிவு, நாவன்மை, செயற்திறன், அரசியல் சாணக்கியம் என்பவற்றை உள்ளடக்கிய ஆளுமை மூலம் அனைவரையும் ஆட்கொண்டு வாழ்ந்த பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் இறுதிவரை தனக்கென ஒரு வாரிசை உருவாக்கிக்கொள்வதில் அக்கறை காட்டவில்லை. அவர் அரசியலில் சேர்த்துவைத்ததெல்லாம் மங்காத புகழையும் மாறாத அன்பையும் மட்டும்தான்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.