கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியாகிய பின்னரே தீர்வு காண்பது என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இன்று (31) புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனா மற்றும் கலையரசன் ஆகியோருக்கும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த விடயத்திற்கு தீர்வினை பெற்றுத் தருவதாக இந்த சந்திப்பின் போது பிரதமர் உறுதியளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனா ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இன்று பிரதமரை சந்தித்துள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம், எம்.எஸ். தௌபீக், எம்.எம். முஷாரப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதற்கு மேலதிகமாக முன்னாள் அமைச்சர்களான வஜிர அபேயவர்த்தன மற்றும் நிமால் லன்சா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிற்கு இந்த விடயம் தொடர்பில் தெளிவான விளக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய குழு தற்போது செயழிந்துள்ளமையினால் புதிய குழுவொன்றினை உடனடியாக நியமிக்க பிரதமர் இதன்போது இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியாகிய பின்னரே தீர்வு காண்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.