நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களில் டொலர்களைக் கொண்டு வீடுகளை வாங்குவோருக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இந்த வீடுகளை டொலர்கள் மூலம் கொள்வனவு செய்வதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினைக்குத் தீர்வாக இந்தப் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இரண்டு நடுத்தர வருமான வீட்டுத் தொகுதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

தற்போது மேலும் 12 நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட வீட்டுத் தேவை 3,667 வீடுகள் ஆகும்.

குறித்த வீடுகளை இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் கொள்வனவு செய்வதற்கு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வீடுகளை டொலர்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் போது உரிய முறையில் வங்கிகள் ஊடாக வெளிநாட்டுப் பணத்தை அனுப்பிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.