உள்ளூராட்சி சபையின் வரிப்பணத்தை அந்தப் பிரதேசங்களில் உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதியிடம் அமைச்சர் பிரசன்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபையினால் சேகரிக்கப்படும் வரிப்பணத்தைப் பயன்படுத்தி அந்தப்   பிரதேசங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அந்த சபைகளுக்கே சந்தர்ப்பம் வழங்குமாறு நகர மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆளுங் கட்சிக் குழுக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். நிதியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றங்கள் தமது வரிப்பணத்தில் தமது பிரதேசங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இது தொடர்பில் பல உள்ளூராட்சி மன்றங்கள் தம்மிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், அந்த கோரிக்கைகளுக்கு அமையவே இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார். அனுமதி வழங்கினால் உள்ளூராட்சி மன்றங்கள் தமது பிரதேசங்களின் அபிவிருத்திக்காக திறைசேரியிலிருந்து பணத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இதனிடையே அபிவிருத்தித் திட்டப் பணிகள்  இறுதிக்கட்டத்தில் உள்ளவைகளை விரைவில்  முடிக்கவும் அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் துரித கதியில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த திட்டங்களை விரைவில் மீள ஆரம்பிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முனீரா அபூபக்கர்
2022.09.06

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.