றிப்தி அலி

பிரபல சர்வதேச தொண்டு நிறுவனமான 'கட்டார் சரிட்டி'யினால் இலங்கையில் செயற்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளின் ஊடாக பரிமாற்றப்பட்ட நிதி, எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

"இந்த சர்வதேச தொண்டர் நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலமே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது" என இலங்கை பொலிஸின் கீழுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு தெரிவித்தது.

இலங்கையில் கட்டார் சரிட்டியினால் செயற்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டமை மற்றும் அவ்வமைப்பு தடை செய்யப்பட்டதாக வெளிவந்த ஊடகச் செய்திகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிற்கு கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் கோரிக்கைக்கு கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தகவல் அதிகாரியான அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன டி அல்விஸினால் வழங்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவினால் முன்னெடுக்கப்பட்ட 'சேவ் த பேர்ள்' எனும் அநாதைச் சிறார்கள் பராமரிப்பு நிலையத்திற்கும் கட்டார் சரிட்டியினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த 2021.04.10ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏறபாடுகள்) சட்டத்தின் 27ஆம் பிரிவின் கீழ் சேவ் த பேர்ளின் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதேவேளை, கட்டார் சரிட்டி பயங்கரவாத அமைப்பு எனவும், இந்த அமைப்பின் ஊடாக பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது எனவும்   குற்றப்புலனாய்வு பிரிவு 2020.09.23ஆம் திகதி கோட்டை நீதிமன்றத்தில் தெரிவித்ததது.

இதனையடுத்து, இந்த அமைப்பின் பணிகள் அனைத்தும் இலங்கையில் நிறுத்தப்பட்டது. இதனால், குறித்த அமைப்பின் உதவிகளை நம்பி வாழ்ந்த ஆயிரக்கணக்கான வறிய மக்கள் பல இன்னல்களை இன்றும் எதிர்நோக்கி வருகின்றனர்.

"கொழும்பு மேல் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமையவே இந்த அமைப்பினால் அமானா வங்கியில் செயற்படுத்தப்பட்ட இரண்டு கணக்கிலக்கங்களிலும் காணப்பட்ட 9 கோடி 17 இலட்சத்து 78 ஆயிரத்து 180 ரூபாவும் 46 சதமும் முடக்கப்பட்டது" என தகவலறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் HC (SPL) 05/2020 எனும் குறிப்பின் கீழே மேற்படி வங்கி கணக்கிலக்கங்கள் முடக்கப்பட்டதாக குறித்த விசாரணைப் பிரிவு குறிப்பிட்டது.

"எவ்வாறாயினும், கடந்த ஜுன் 30ஆம் திகதி குறித்த வங்கி கணக்கிலக்கங்களை முடக்கும் உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டு விட்டது. அத்துடன் கட்டார் சரிட்டி ஒருபோதும் இலங்கையில் தடை செய்யப்படவில்லை" எனவும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு தெரிவித்தது.

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டார் சரிட்டியின் நிதி மீதான தடையினை நீக்குவதற்கான தீர்மானத்தினை பாதுகாப்பு அமைச்சு சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது என உத்தியோகபூர்வ செய்தியினை மின் சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர கட்டார் சரிட்டின் உயர் அதிகாரிகளை கடந்த ஜுன் 30ஆம் திகதி டோஹாவில் சந்தித்து தெரிவித்திருந்தார்.

எனினும், கட்டார் சரிட்டின் செயற்பாடுகளை மீண்டும் இலங்கையில் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்பட்டவில்லை. எவ்வாறாயினும், கட்டார் சரிட்டின் பணிகள் அடுத்த வருடம் இலங்கையில் ஆரம்பிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள கட்டார் தூதுவரலாயத்தின் உயர் அதிகாரியொருவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கட்டார் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் 1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தினால் உலகளாவிய ரீதியில் பல நாடுகளுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருவதுடன் அந்நாட்டு அரசாங்கங்களுடன் மிகவும் நெருங்கி செயற்பட்டு வருகின்றது.

அது மாத்திரமல்லாமல், ஐக்கிய நாடுகள் போன்ற பல சர்வதேச நிறுவனங்களுடன் இந்த அமைப்பு நெருங்கி செயற்படுகின்றது. 1997ஆம் ஆண்டு முதல் உலகளாவிய ரீதியில் 77 ஒப்பந்தங்களை மேற்கொண்டு 76 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பல நிகழ்;ச்சித் திட்டங்களை கட்டார் சரிட்டி மேற்கொண்டுள்ளது.

இந்த ஊடாக பாகிஸ்தான், யெமன், சூடான், ஈராக், நைஜீரியா, சிரியா, பலஸ்தீன், பங்களாதேஷ் மற்றும் சோமாலிய போன்ற பல நாடுகளில் குடிநீர், விவசாயம், உணவு, சுகாதாரம், வாழ்வாதார உதவி, பாடசாலை நலன்புரி, சமூக நலன், மீள்குடியேற்றம், மற்றும் அகதிகளுக்கான உதவி போன்ற பல மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்துடன் 32 ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கும், அகதிகளுக்கும்  தேவையான நிதி தொடர்பான மனிதாபிமான செயற்திட்டங்களை கட்டார் சரிட்டி மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் கடந்த 1976ஆம் ஆண்டு முதல் இராஜதந்திர உறவு பேணப்பட்டு வருகின்றது. அது மாத்திரமல்லாமல், பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு கட்டார் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் கைகொடுத்து உதவியுள்ளது. இதனால், கட்டார் சரிட்டி, அதன் தொண்டுப் பணிகளை கடந்த 1993ஆம் ஆண்டு முதல் இலங்கையில் முன்னெடுத்து வருகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தில் FL162614 எனும் இலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த தொண்டர் அமைப்பினால் கடந்த 2018ஆம் வரை சுமார் 14 மில்லியன் கட்டார் ரியால்கள் பெறுமதியான உதவிகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 30 வருடங்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்காக ஐந்து பல்தேவை கட்டிடங்கள் இந்த நிறுவத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஓட்டமாவடி, ஏறாவூர், கிண்ணியா மற்றும் பொலநறுவை மாவட்டத்தின் அதுகல ஆகிய பிரதேசங்களில் கட்டார் சரிட்டியினால் நான்கு வீடமைப்பு திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

நான்கு மில்லியன் கட்டார் ரியால் பெறுமதியான இந்த வீட்டுத் திட்டத்தில் 22 வீடுகள், சுகாதார மையம், முன்பள்ளி, பள்ளிவசால், கிணறு மற்றும் நான்கு கடைககள் ஆகியன காணப்படுகின்றன. அது மாத்திரமல்லால், சுமார் 1,000க்கும் மேற்பட்ட அநாதைச் சிறார்களுக்கு கட்டார் சரிட்டியினால்; அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல், கட்டாரின் தலைநகரான டோஹாவிலுள்ள இலங்கை தூதுவராலயமும் கட்டார் சரிட்டியும் இணைந்து கொவிட் காலத்தில் டோஹாவில் நிர்கதியான இலங்கையர்களுக்கு உலருணவுப் பொருட்கள் விநியோகிக்கும் செயற்திட்டமொன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இலங்கையில் பல மில்லியன் ரியால்களை செலவிட்டு தொண்டுப் பணிகளை முன்னெடுத்த கட்டார் சரிட்டி நிறுவனத்தினை தீவிரவாத முத்திரை குத்தி, அதன் வங்கிக் கணக்குகளை முடக்கி அசௌகரியத்துக்குள்ளாக்கியமையானது இலங்கை அரசாங்கத்தின் முட்டாள் தனமான நடவடிக்கையாகும்.

இதன் காரணமாக இலங்கைக்கு எரிபொருள் உள்ளிட்ட அத்தியவசிய உதவிகள் தேவைப்பட்ட காலத்தில் குறித்த நிறுவனத்தினால் இலங்கையில் இயங்க முடியாமல் போனது.

அத்துடன் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அப்பாவி இலங்கை மக்களுக்கு உதவும் வாய்ப்புகளும் இதன் மூலம் மறுக்கப்பட்டன. கடந்த அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளுக்கு இனவாத செயற்பாடுகளால் நாட்டுக்கு ஏற்பட்ட ஏற்பட்ட பாதிப்புக்களில் கட்டார் சரிட்டிக்கு எதிரான போலியான குற்றச்சாட்டுக்களும் ஊடகப் பரப்புரைகளும் முக்கிய பங்கு வகித்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

கட்டார் சரிட்டி விரைவில் தனது பணிகளை இலங்கையில் ஆரம்பித்து தொண்டுப் பணிகளை தொடர வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.