திருகோணமலை மாவட்டம் என்பது மீனவர்களை அதிகமாக கொண்டுள்ள மாவட்டம் எனவும் தற்போது நாடு இருக்கின்ற நிலைப்பாட்டின் காரணமாக அவர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்வதற்கு கூட மண்ணெண்ணெய் இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய்யை உடனடியாக பெற்றுக்கொடுக்குமாறும் புதன்கிழமை (5) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இம்ரான் எம் பி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், குறிப்பாக கிண்ணியா பிரதேசத்திற்கு சுமார் 260 க்கு மேற்பட்டு OFRP படகுகள், 40 க்கு மேற்பட்ட சுருக்குவலை படகுகள் அணுமதி பெற்று மீன்பிடி நடடிக்கையில் ஈடுபடுவதாகவும் சுருக்குவலை படகுக்கு மாத்திரம் நாளொன்றிற்கு 4800 லீற்றர் மண்ணெண்ணெய் தேவைப்படுவதாகவும் ஏனைய படகுகள் மற்றும் கடல்தொழிற்பாடுகளுக்கு மொத்தமாக நாளொன்றிற்கு 12000 லீற்றர் தொடக்கம் 13000 லீற்றர் தேவைப்படுகின்ற நிலையில் சுமார் ஒரு மாதமாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை எனவும்,
இறுதியாக செப்டம்பர் 10 ம் திகதி மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதாகவும் அதன் பிற்பாடு தற்போது வரை வழங்கப்படாததால் மக்கள் அனைவரும் பல்வேறு சிக்கல்களையும் சவால்களையும் எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார். எனினும், தற்போது கறுப்புச்சந்தையில் மண்ணெண்ணெய் ரூபா 800.00 முதல் 1200.00 வரை விற்கப்படுவதாகவும் எவ்வாறு இந்த கறுப்பு சந்தை வியாபாரிகளுக்கு கிடைக்கிறது எனவும் கேள்வியெழுப்பினார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் டீசல் தட்டுப்பாடு காரணமாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள இயந்திரங்களை பயன்படுத்த முடியாமல் இருப்பதால் மீனவர்களை போல் விவசாயிகளும் மிகவும் பாதிக்கக்கப்படுவதாகவும் இதனை கருத்திற்கொண்டு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.