ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது கூறிய எதிர்வு கூறலை போன்றே இந்த வரவு செலவு திட்டத்திலும் ஏராளமான எதிர்வு கூறலை கூறியுள்ளார் ஆனால் அதற்கான தீர்வு எதையும் கூறியதாக எனக்கு தெரியவில்லை. வரவு செலவு திட்டத்தின் படி பாதுகாப்புச் செலவு மட்டும் அதிகளவில் உயர்ந்திருக்கின்றது. கடந்த ஆண்டு வரவு - செலவு திட்டத்திலும் பார்க்க பாதுகாப்புக்குப் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது எனவும் டொலரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் எதுவும் இல்லை எனவும், சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் மக்களை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக தீர்வாக முன்வைக்கப்படவில்லை என்றும் வரவு-செலவு திட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது பா.உ இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,   பொருளாதார நெருக்கடியில் மூழ்கிக் கிடக்கும் நாட்டை மீட்பதற்குச் செலவினத்தைக் குறைக்கும் ஏற்பாடு ஏதுமில்லை.

பொருளாதாரத்தை சீரமைக்க என்ன செய்வோம்? எப்படி செய்வோம்?  என விரிவாக எதையும் இதில் காணவில்லை 

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதற்கும் வருடத்திற்கு 12 ஆயிரம் பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது.

12 ஆயிரம் பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பில் 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,  விவசாயிகளுக்கோ , மீனவர்களுக்கோ, தொழிலாளர்களுக்கோ, அரச ஊழியர்களுக்கோ எவ்வித நன்மையும் வழங்கப்படவில்லை, 

விவசாயிகளுக்கான உரம் தொடர்பில் தெளிவான பதில் இல்லை, 

மீனவர்களுக்கான மண்ணென்னய் மானியம் தொடர்பில் எதுவும் இல்லை,

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக குறிப்பிடப்படவில்லை.

மக்களை வரி என்ற பெயரில் அவர்களின் உள்ளாடைகளையும் உருவும் பாதீடாகவே இது உள்ளது 

இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க வெளிநாடு செல்ல முயற்சித்தால் கடவுச் சீட்டுக்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இந்த நாட்டில் வாழவும் முடியாமல் வெளிநாடுகளுக்கு செல்லவும் முடியாமல் உள்ளனர் 

பொருட்கள் அனைத்தின் பெறுமதியும் மூன்று முதல் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.

உதாரணமாக 1500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாதணி இப்போது 5000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மக்கள் எவ்வாறு இதை தங்கி கொள்வார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், பொருட்களை விலைகளை கட்டுப்படுத்தும் எந்தவொரு திட்டமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.