⏩ அருவக்காடு குப்பை திட்டத்தை மீண்டும் முறைப்படி விரைவில் ஆரம்பிக்கத் திட்டம்....

 ⏩ அருவக்காடு மற்றும் களனி குப்பை அகற்றும் தொகுதி 90% நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன....


அருவக்காடு குப்பைத் திட்டத்தை முறையாக விரைவாக மீள ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அருவாக்கலு குப்பைத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் எதிர்காலத்தில் திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு  எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடல் இன்று (22) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 40 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கான வீடுகள் அழிந்தன. இதன் காரணமாக கொழும்பு நகரில் கழிவுகளை அகற்றுதல் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் முறையான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் கொழும்பு நகரில் நாளாந்தம் சேகரிக்கப்படும் சுமார் 1200 மெற்றிக் தொன் குப்பைகள் களனி, வனவாசல இருந்து சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் உள்ள புத்தளம், அருவக்காலு குப்பைத் தளத்திற்கு புகையிரதம் மூலம் கொண்டு செல்லப்படும்.

தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் அருவக்கால குப்பைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கான மதிப்பிடப்பட்ட தொகை 130 மில்லியன் டொலர்கள் ஆகும். அருவக்காலு கழிவு அகற்றும் தொகுதி மற்றும் களனி, வனவாசல கழிவுப் பரிமாற்ற நிலையத்தின் 90% நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி என்ற சீன நிறுவனம் இங்கு கட்டுமான பணிகளை செய்து வருகிறது.

தனிப்பட்ட இலாபத்திற்குப் பதிலாக மனித தேவைகளை கருத்தில் கொண்டு செயற்படுவதன் மூலமே முறையான கழிவு முகாமைத்துவத்தை அடைய முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எனவே அரசியல் கருத்து எதுவாக இருந்தாலும் இது போன்ற நல்ல திட்டங்கள் தொடர்ந்தும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெர்னாண்டோ மற்றும் தேனுக விதானகமகே, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் அனில் விஜேசிறி, அருவக்காலு குப்பை திட்டப் பணிப்பாளர் சரத் பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழு  கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்

2022.11.22

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.