போதைப்பொருள் பாவனையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் - விதுர விக்கிரமநாயக்க
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் போதைப்பொருள் பாவனையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.போதைப் பொருளிலிருந்து முஸ்லிம் இளைஞர்களை மீட்டெடுப்பதற்கு பள்ளிவாசல்கள் ஒத்துழைக்க வேண்டும். நாடெங்குமுள்ள பள்ளிவாசல்களில் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவேண்டும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தன்னைச் சந்தித்த அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பு கடந்தவாரம் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்து முஸ்லிம் சமூகத்தின் சமகால விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியது. சந்திப்பில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. யின் தேசிய தலைவர் இஹ்ஸான் ஏ.ஹமீட், வை.டப்ளியு. எம்.ஏ.யின் தலைவி பவாசா தாஹா, வை.எம்.எம்.ஏ. யின் முன்னாள் தலைவர் சஹீட் எம்.ரிஸ்மி மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
சந்திப்பின்போது அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; ‘நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு அனைத்து மதஸ்தலங்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். பள்ளிவாசல்கள் மாத்திரமல்ல பெரும்பான்மை சமூக இளைஞர்களுக்கு பன்சலைகளிலும், தமிழ் சமூக இளைஞர்களுக்கு கோயில்களிலும் விழிப்புணர்வு ஊட்டப்படவேண்டும். பள்ளிவாசல்கள் மூலமே முஸ்லிம் இளைஞர்களை நேர்வழிப்படுத்த முடியும். இந்த செயற்திட்டத்திற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வை.எம்.எம்.ஏ.போன்ற அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் அரபுக்கல்லூரிகளின் பாடத்திட்டங்கள், இஸ்லாமிய பாடநூல்களில் திருத்தங்கள், இஸ்லாமிய நூல்கள், குர்ஆன் இறக்குமதி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்விவகாரங்கள் தொடர்பில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பு கடந்த காலங்களில் முன்னெடுத்த செயற்பாடுகள் தொடர்பிலான ஆவணங்கள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
நாடெங்கும் 25 மாவட்டங்களில் 169 வை.எம்.எம்.ஏ. கிளைகள் இயங்கி வருவதாகவும் இந்த வலையமைப்பின் ஊடாக பள்ளிவாசல்களுடன் இணைந்து போதைப்பொருளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பதற்கு வை.எம்.எம்.ஏ. ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் வை.எம்.எம்.ஏ.யின் முன்னாள் தலைவர் அமைச்சரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக செயற்றிட்டமொன்றினைத் தயாரித்து இவ்வருட இறுதிக்குள் அமைச்சரிடம் கையளிப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை ஐ.நாவின் உலகளாவிய நிதியத்தின் (Global Fund) உதவியின் கீழ் கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எயிட்ஸ் நோய் தொடர்பான விழிப்பூட்டல்களை மக்கள் மத்தியில் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கண்டி வைத்தியசாலையில் இக்காரியாலயம் இயங்கிவருகிறது. இக்காரியாலயத்தின் கீழ் இப்பணியில் 25பேர் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுக்கான கொடுப்பனவு ஐ.நா.வின் உலகளாவிய நிதியத்தின் மூலம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட 25 பேரில் 20பேர் போதைப்பொருள் பாவனையிலிருந்தும் மீட்டெடுக்கப்பட்டவர்களாவர். இக்குழு போதைப்பொருள் பாவனையாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அவர்களை நேர்வழிப்படுத்துகிறது. போதைப்பொருள் பாவனையிலிருந்தும் மீட்டெடுக்க முடியாதவர்கள் அரசின் புனருத்தாபன முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.- Vidivelli
கருத்துகள்
கருத்துரையிடுக