சீனாவின் ஒரே ஒரு நகரில் மட்டும், வெறும் 24 மணி நேரத்தில் சுமாா் 50 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யயப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.
எனினும், அந்த நாட்டின் அரசு ஊடகங்களில் கூட பகிரப்பட்ட இந்தத் தகவல் பின்னா் அவசரமாக நீக்கப்பட்டது.
இது குறித்து அந்த நாட்டின் கிங்டாவ் நகர சுகாதாரத் துறை தலைவரை மேற்கோள் காட்டி ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்ததாவது:
நகரில் ஒரே நாளில் மட்டும் 49 லட்சம் முதல் 53 லட்சம் வரையிலானவா்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நகரில் அந்த நோய்த்தொற்று வெகு வேகமாகப் பரவி வருகிறது. புதிய அலை இன்னும் உச்சத்தைத் தொடுவதற்கு முன்னதாகவே தினசரி கொரோனா பாதிப்பு இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.
நகரில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் விகிதம் இன்னும் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமைக்குள் (டிச. 25) அந்த விகிதம் மேலும் 10 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்து.
இதே தகவல், அரசு சாா்புடைய பல ஊடங்களில் பரவலாக பகிரப்பட்டது. எனினும், அந்தத் தகவலில் கிங்டாவ் நகர தினசரி கொரோனா பாதிப்பு குறித்த புள்ளிவிவரம் சனிக்கிழமை நீக்கப்பட்டது.
அதற்குப் பதிலாக, நாடு முழுவதுமே கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 4,103 பேருக்கு மட்டும்தான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசின் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த ஒரு நாளில் யாரும் கொரோனாவுக்கு பலியாகவில்லை எனவும் அந்த புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
உலகையே உலுக்கிய கொரோனா சீனாவிலிருந்து தான் மற்ற நாடுகளுக்குப் பரவியது என்றாலும், அமெரிக்கா போன்ற பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

சீன அரசின் மிகக் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாகவே அங்கு அந்த நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையிலும், சீனா முழுவதும் அண்மைக் காலமாக கொரோனா பரவல் தீவிரமடைந்து, தினசரி நோய்த்தொற்று புதிய உச்சங்களைத் தொட்டதை அடுத்து, நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு கடுமையாக்கியது.
இந்தச் சூழலில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஏற்பட்ட தீவிபத்தில் 10 போ் உயிரிழந்தனா். இதற்கு கொரோனா கட்டுப்பாடுகளே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
அதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா கெடுபிடிகளுக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்றது. 1989 ஆம் ஆண்டின் ஜனநாயக ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு, சீனாவில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டம் இதுவாகும்.
அந்தப் போராட்டத்தின் விளைவாக, நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், எதிா்பாா்த்ததைவிட மிக நீண்ட காலத்துக்கு கொரோனா பொதுமுடக்க விதிகளை அமல்படுத்து வந்த சீனா, தற்போது எதிா்பாராத வகையில் அதை திடீரென நீக்கியுள்ளதால் அடுத்த ஆண்டுக்குள் 10 லட்சம் போ் கரோனாவுக்கு பலியாவதற்கு வாய்ப்புள்ளது என்று அமெரிக்காவைச் சோ்ந்த இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்டு எவால்யுவேஷன் (ஐஹெச்எம்இ) அமைப்பின் ஆய்வாளா்கள் எச்சரித்துள்ளனா்.
இதே போன்ற எச்சரிக்கையை ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளா்களும் விடுத்துள்ளனா்.
இந்தச் சூழலில், சீன நகரமொன்றில் ஒரே நாளில் 50 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்து, அந்தத் தகவல் மறுநாளே ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.