ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டெஸ்ட் வீரரை தேர்வு செய்து விருது வழங்கிவரும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, அந்த விருதை இனிமேல் ஷேன் வார்ன் பெயரில் வழங்குவதாக அறிவித்துள்ளது.
 

ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகளை வழங்கி அங்கீகரித்துவருகிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் சிறப்பாக செயல்பட்ட வீரருக்கு ஆலன் பார்டர் பெயரில், ஆண்டின் சிறந்த வீரர் என்ற விருது வழங்கப்படுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய வீரரை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு  வருகிறது. இனிமேல் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை மறைந்த முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் ஷேன் வார்ன் பெயரில் வழங்குவதென்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவெடுத்துள்ளது.


சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த ஸ்பின்னர் ஷேன் வார்ன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 708 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்திய 2 பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 10வது ஸ்டம்ப்பில் பந்தை பிட்ச் செய்து ஆஃப் ஸ்டம்ப்பை கழட்டும் வித்தைக்காரர். நூற்றாண்டின் சிறந்த பந்தை வீசியவர் வார்ன். 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 708 விக்கெட்டுகளையும், 194 ஒருநாள் போட்டிகளில் ஆடி 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக ஜொலித்தவர். 

லெஜண்ட் ஸ்பின்னரான ஷேன் வார்ன், தாய்லாந்துக்கு இன்பச்சுற்றுலா சென்ற நிலையில் கடந்த மார்ச் 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில், அவர் ஆஸ்திரேலிய அணிக்கு செய்த பங்களிப்பிற்கு அவரை கௌரவிக்கும் விதமாக அவரது பெயரில் ஆண்டுதோறும், ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது வழங்கப்படும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.