சென்ற வாரம் சகோதரி ஒருவர் தனது 17வயது மகனையும் அழைத்துக் கொண்டு வந்தார்.  

‘கொஞ்ச நாளாகவே இவனுடைய நடத்தை நல்லதாக இல்லை மெளலவி. 
முன்னரெல்லாம் நல்லா படிப்பான். இப்ப ஏதோ ஜின் பிடித்தாற்போல் இருக்கிறான். 
முன்னரெல்லாம் நல்லா கல கலப்பாக பேசுவான், சிரிப்பான். 
இப்ப ரூமுக்குள்ள போய் தனியாகத்தான் இருக்கிறான். 
எதை சொன்னாலும் சரியான கோபம் வருகுது.  எனக்கு என்ன செய்றதென்றே தெரியல்ல. 
இவன்ட வாப்பாவும் இங்க இல்ல.’
என்று தனது மகனின் மாறுபட்ட நிலையை ஒன்றும் விடாமல் சொல்லி முடித்தாள் அந்த சகோதரி. 

அவளிடம் இன்னும் சில விடையங்களை கேட்டுத் தெரிந்து கொண்டாலும் அந்த பையனுடனும் தனியாக பேசவேண்டியிருந்தது. 

ஆயினும் எனக்கு அவசரமாக பொளன்னறுவை செல்ல வேண்டியிருந்ததால் அந்த சகோதரியின் அனுமதியோடு  அந்த பையனையும் கூட்டிக் கொண்டு சென்றேன். 

நாவலடியை தாண்டியதும் சொன்னேன்.  ‘மகன் எனக்கு பெரியளவில் தூரமாக ரைவிங் செய்து பழக்கம் இல்லை. ரைவரோடுதான் போவது வழக்கம். அதனால் ஏதாவது பேசிக் கொண்டே வரவேண்டும்’ என்றேன். அவனும் சரி என்று தலையசைத்தான். ஆனாலும் நாம் ரெதிதன்னையை நெருங்கியும் அவன் எதுவுமே பேசவில்லை.

‘உனக்கு இந்த பழக்கம் எப்படி மகன் வந்தது என்றேன்.’ 
‘எந்தப் பழக்கம்?’ என்றான். 
‘நீ என்ன தம்பி பாவிக்கிறாய்?’ என்றேன். 
‘ஒன்னுமில்லையே’ என்றான் 

மெதுவாக ரெதிதன்னை சோதனைச் சாவடியில் காரை நிறுத்திவிட்டு எனக்கு தெரிந்த பொலிஸ் ஒருவரை சந்திக்கச் சென்றேன். 

சற்று நேரத்தின் பின்னர் மீண்டும் காரில் ஏறிக் கொண்டேன். 
தொடர்ந்தும் ‘சொல்லு தம்பி என்ன பாவிக்கிறாய்? உன்னை பார்த்தால் நல்ல பிள்ளை போல இருக்கிறாய். ஆனால் இந்த பழக்கம் எப்படி வந்தது? நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். சொல்லு.’ என்றேன்.   

அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. 
நான் தொடந்தும் பேசினேன்.  
அவனது மனதை ஒரு நிலைப்படுத்தி, எண்ணங்களை சிதறவிடாமல் உள்ளத்தை தொடும்படியாக பேசவேண்டியிருந்தது. 

அவனுக்குப் பிடித்தமான பலது குறித்தும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 

அவனது நண்பர்கள் பற்றியும் அவனுக்கு விளையாட்டில் உள்ள ஆர்வம் குறித்தும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அவனுக்கு படிப்பில் உள்ள ஆர்வத்தை அறிந்து கொண்டேன். 

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் அதிக பெறுபேற்றை பெற்றிருந்தான்.  
ஆனால் O/L பரீட்சையில் தோற்று விட்டான். அதற்கு காரணம் அவன் போதைக்கு அடிமையானது என்று தோன்றியது. 

O/L பரிட்சையில் ஏன் நல்ல மார்க் எடுக்க வில்லை. படிக்க வில்லையா? என்று கேட்டேன். அதுக்கு பதில் இல்லை. 

தோற்றுப் போனது நீ மட்டுமல்ல எதிர்பார்ப்போடு இருந்த உனது பெற்றோர்கள் உற்றார்கள் உறவினர்கள் அத்துணை பேரும்தான் தெரியுமா? என்றேன்.

உன்னை உருவாக்க வேண்டும் என்று உனக்காக உழைத்த ஒட்டுமொத்த உறவுகளும் தோற்றுப்போயிருக்கிறார்கள். 

உன்னால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கையோடு உனக்காகவே உழைத்து உழைத்து ஓடாய் போன உனது தந்தையின் நம்பிக்கையை நீ உடைத்திருக்கிறாய்.

உனது பெற்றோருக்கு நீ அடையாளமாக இருக்க வேண்டும்.

உனது பெயரை சொல்லும் போது உனது பெற்றோர் தலை நிமிர்ந்து நடக்க  நீ காரணமாய் இருக்கவேண்டும்.

உனது உழைப்பை உண்டு மகிழ முன்னர் உன்னை பிள்ளை என்று சொல்வதில் உனது பெற்றோர் பெருமை கொள்ளும்படி நீ நடந்து கொள்ள வேண்டும். 

உன்னை எனது மாணவன் என்று சொல்வதில் உனது ஆசிரியர்கள் மகிழ்ச்சிடைய வேண்டும். 

உன்னை சொந்தம் என்று சொல்வதில் உனது உறவுகள் பெருமை கொள்ள வேண்டும். 

உனது ஊரே உன்னால் சந்தோசப்பட வேண்டும்.  

உன்னை சொந்தம் என்று சொல்லவும் நண்பன் என்று சொல்லவும் யாரும் சங்கடப்படக் கூடாது. 

வாழ்வில் நீ சின்னச் சின்ன தடைகளை சந்திக்கவில்லையானால் உன்னால் எதையும் சாதிக்க இயலாமல் போகும். 

ஆரம்பத்தில் நீ தடுக்கி விழுந்து எழுந்து பழக்கப்பட்டால் மட்டுமே பின்னர் பெரிய குழியில் விழுந்துவிடாமல் கவனமாய் இருக்க முடியும். 

ஒருவர் இதுவரை எதிலும் தோற்றுப் போக வில்லை என்றால் எப்போதேனும் பெரியளவில் தோற்றுப்போக வாய்ப்பிருக்கிறது. 

தோழ்வியை ஏற்றுக் கொள்ளும் இதயம் இருந்தால் மட்டுமே எப்பொழுதும் எதையும் சாதிக்கலாம் மகன். 

உனது திறமையை நீ பயன்படுத்து. 
மீண்டும் நன்றாக படி. மீண்டும் பரீட்சை எழுது. 

இப்படி நிறையவே பேசினேன். 
சற்று நேரத்தின் பின்னர் கல்லலை ஹோட்டல் வந்தது. காரை நிறுத்திவிட்டு நானும் அவனும் தேணீர் அருந்திவிட்டு மீண்டும் காரில் ஏறிக் கொண்ட போது அவனது கண்கள் சற்று கலங்கியதை அவதானித்தேன். 

என்ன நினைத்தானோ தெரியாது டிரவ்ஸர் பக்கட்டுக்குள் கையை விட்டு மடித்த பேப்பர் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினான். 

என்ன அது என்று வாங்கிப் பிரித்தேன். ஒரு சிவிங்கம் சுற்றும் பேப்பரில் ஏதோ இருந்தது. கூடவே ஒரு ஐந்து மாத்திரைகளும் இருந்தது. இவைதான் நான் பாவிப்பது என்றான். ‘இவை எப்படி உனக்கு கிடைக்கிறது?’ என்றேன். சொல்வதற்கு சற்று தயங்கினான். ‘பயப்படாமல் சொல்லு தம்பி’ என்றேன். அப்போது சொன்னான். 

‘எங்க சாச்சா வெளிநாட்டுல இருக்கிறார். நான் சாச்சிக்கு காவலுக்காக சாச்சி வீட்டுக்கு தூங்க போவேன் . அங்கு சாச்சாவின் நண்பர் ஒருவர் அடிக்கடி வருவார். அவர்தான் இவற்றை கொண்டுவந்து தருவார்’ என்றான். 

‘இது உங்க சாச்சிக்கு தெரியுமா?’ என்றேன். ‘ஆமாம் தெரியும்’என்றான். 
‘இதெல்லாம் பாவிக்க கூடாது என்று உன்னை கண்டிக்கவில்லையா?’ என்று கேட்டேன். 
‘ இல்லை. ஆனால் சாச்சாவின் நண்பர் அங்கு வருவதை யாரிடமாவது சொன்னால் உம்மாவிடம் சொல்லிக் கொடுப்பேன் என்று மட்டும் சொன்னா’.
நான் இதை பாவித்து விட்டு ஒரு அறையில் தூங்கிவிடுவேன். என்றான். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. 

சில போதைப்பொருட்கள், திடீர் மனநிலை மாற்றங்கள், குறைக்கப்பட்ட உந்துதல், உடல் மற்றும் மன செயல்திறன் குறைதல், தனிமைப் பரவசம் ஆகியவற்றை உண்டாக்கும்.  

தனது தவறான உறவை தொடர்வதற்காகவும் சுயநலத்திற்காகவும் ஒரு சிறுவனின் வாழ்க்கை இங்கு சீரழிக்கப்பட்டுள்ளது. 

அவனது திறமைகளுக்கு இந்த போதைப் பழக்கத்தால் திரையிடப்பட்டுள்ளது.  

சிலரின் சுயநலம்தான் பலரின் வாழ்க்கையை பாழாக்கிக் கொண்டிருக்கிறது.  

இப்பொழுது எப்படியும் அவனை அதிலிருந்து மீட்டாக வேண்டும். அதற்கான வழியை  அவனுக்கு காட்டியாக வேண்டும்.  

ளுஹர் தொழுகையை பொளன்னறுவை பள்ளிவாசலில் தொழுதுவிட்டு அவனுடன் நீண்ட நேரம் பேசினேன். அதுதான் அவனுக்கான நல்ல கவுன்ஷிலிங்.

கண்ணை மூடி இரண்டு நிமிடங்கள் நான் சொல்வதை கற்பனை செய்யுமாறு கூறினேன். 

அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி இதன் பின்னர் எக்காரணம் கொண்டும் பாவிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்யச் சொன்னேன்.  அல்ஹம்து லில்லாஹ்  அவனது முகத்தில் மாற்றத்தை அறிந்தேன். 

நேற்றைய தினம் அவனாக என்னை சந்திக்க வேண்டும் என்று தொலை பேசி அழைப்பை எடுத்தான். சந்தித்தேன்.  அவனது மாற்றம் மகிழ்ச்சியளித்தது.

ஹாறூன் (ஸஹ்வி) 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.