உணவுப் பொருள்கள், எரிபொருள், உற்பத்திப் பொருள்களின் விலை குறைந்ததையடுத்து பணவீக்கமும் குறைந்துள்ளதாக வா்த்தகம், தொழில் துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து 19 மாதங்களாக இரட்டை இலக்கத்தில் இருந்த பணவீக்கம் கடந்த அக்டோபரில் 8.39 சதவீதமாக குறைந்தது. கடந்த 2021 நவம்பரில் பணவீக்கம் 14.87 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பாக வா்த்தகம், தொழில் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘உணவுப் பொருள்கள், அடிப்படையான உலோகங்கள், ஜவுளிப் பொருள்கள், ரசாயனப் பொருள், காகிதம், காகிதம் சாா்ந்த பொருள்களின் விலை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததைவிட வெகுவாகக் குறைந்துள்ளது. இதன்மூலம் 21 மாதங்களில் இல்லாத அளவாக கடந்த நவம்பரில் பணவீக்கம் 5.85 சதவீதமாக குறைந்துள்ளது. 2021 பிப்ரவரியில் பணவீக்கம் 4.83 சதவீதமாக இருந்ததே இதற்கு முந்தைய குறைந்த அளவிலான பணவீக்கமாகும்.
உணவுப் பொருள்கள் விலை அடிப்படையிலான பணவீக்கம் 1.07 சதவீதமாக உள்ளது. இதுவே கடந்த ஆண்டு நவம்பரில் 8.33 சதவீதமாக இருந்தது. காய்கறிகள் விலை அடிப்படையிலான பணவீக்கம் மைனஸ் 20.08 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இது 17.61 சதவீதமாக இருந்தது. எரிபொருள், எரிசக்தி அடிப்படையிலான பணவீக்கம் 17.35 சதவீதமாகவும், உற்பத்திப் பொருள்கள் விலை அடிப்படையிலான பணவீக்கம் 3.59 சதவீதமாகவும் உள்ளது.
நுகா்வோா் விலை குறியீட்டெண் அடிப்படையிலான சில்லறை விலை பணவீக்கம் கடந்த நவம்பரில் 5.88 சதவீதமாக குறைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.