வட கொரியாவின் பாணியில் தென் கொரிய ராணுவமும் முன் அறிவிப்பு இல்லாமல் ஏவுகணை சோதனை செய்து அந்நாட்டு மக்களை மிரட்டியுள்ளது.

வட கொரியாவில் அதிபர் கிம் ஜோங் உன்னின் சர்வாதிகார ஆட்சியில் அந்நாட்டின் அண்டை நாடுகளான தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் அடிக்கடி பாதுகாப்பு அச்சுறுதல் ஏற்படுகிறது. அவ்வப்போது பயங்கர அணு ஆயுத சோதனைகள் செய்தும் ஏவுகணை சோதனை நடத்தியும் வட கொரியா தன் ஆயுத பலத்தைக் காட்டிக்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தென் கொரியாவில் அந்நாட்டு ராணுவம் முன் அறிவிப்பு ஏதும் செய்யாமல் ஏவுகணை பரிசோதனையை நிகழ்த்தியிருக்கிறது. திடீரென பெரும் சத்தத்துடன் தீப்பிழம்பைக் கக்கியபடி வானில் சீறிச் சென்ற ஏவுகணையை பொதுமக்கள் பலர் பார்த்துள்ளனர்.

மூன்று ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்பட்டன என்றும் இரவு 8 மணி அளவில் இச்சோதனை நிகழ்ந்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அளிக்கும் தகவல் மூலம் தெரியவருகிறது.

தென் கொரியாவைச் மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தாங்கள் பார்த்த மர்மான காட்சி பற்றி அச்சத்துடன் பதிவிட்டுள்ளனர். வழக்கம்போல வட கொரியாதான் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு அச்சுறுத்துகிறது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


பொதுமக்கள் மிரண்டு போன நிலையில், தென் கொரிய ராணுவம் ஏவுகணை சோதனையைத் தாங்கள்தான் நடத்தினோம் என்று அறிவித்தது. பாதுகாப்புக் காரணங்களுக்கான முன்கூட்டிய அறிவிப்பு வெளியிடவில்லை என்றும் தென் கொரிய ராணுவம் சொல்கிறது. ராணுவக் கண்காணிப்பின் வலுவைச் சோதித்துப் பார்க்கவும் வலுப்படுத்திக் கொள்ளவும் இந்த சோதனையை மேற்கொண்டதாகவும் ராணுவம் விளக்கம் கொடுத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமைதான் வட கொரிய ட்ரோன்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள் வட்டமிடுவதாக தென் கொரியா குற்றம் சாட்டியது. அந்நிய ட்ரோன்கள் உலவியதை கண்டுபிடித்தபோதும் தென் கொரிய ராணுவம் அவற்றைச் சுட்டு வீழ்த்தவில்லை. இது அந்நாட்டில் ராணுவச் செயல்பாடுகள் குறித்த கவலையை தூண்டிவிட்டது. எப்போதும் இல்லாத வகையில், ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தாமல் விட்டதற்கு ராணுவம் பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.

இந்தப் பின்னணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னறிவிப்பு இல்லாத ஏவுகணை சோதனை தென் கொரிய ராணுவம் தங்கள் பலத்தை சொந்த நாட்டு மக்களுக்கே காட்டிக்கொள்வதற்காக நிகழ்த்தப்பட்டதுதான் என்று கருதப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.