இலங்கையானது நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்டுள்ள போதிலும், நாம் டொலர்களை செலவழித்து வெளிநாடுகளிலிருந்து டின் மீன்களை இறக்குமதி செய்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகளால் நாம் கடலால் மாத்திரமல்ல கடனாலும் சூழப்பட்டுள்ளோம். நம்மை விட நமது அயல் நாட்டு மீனவர்கள் நமது கடல் வளத்தினை நன்கு அறிந்து வைத்துள்ளார்கள், அதனால்தான் அவர்கள் நமது கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்து நமது மீன்வளத்தினை கொள்ளையடித்து செல்கின்றார்கள் என குழுநிலை விவாதத்தில் பாராளுமன்றில் உரையாற்றும் போது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்  தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை தொடக்கம் வெருகல் வரையான பகுதி கடல் வளமும், ஏரிகளும் நிறைந்த நீண்ட பிரதேசமாகும். தற்பொழுது சுருக்கு வலையினை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலை மேற்கொள்வோர் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக பல மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன எனவும், தற்போதைய எரிபொருள் பிரச்சினை காரணமாக மீனவர்களால் அதிக தூரம் பயணம் செய்து மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது. எனவே, இவ்விரு விடயங்களையும் கருத்திக்கொண்டு சுருக்கு வலைக்கு விதிக்கப்பட்டுள்ள ஏழு கடல் மைல் என்ற கட்டுப்பாட்டினை நான்கு கடல் மைல்களாக தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ அமைச்சர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,  மீனவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் மண்ணெண்ணெய் கிடைப்பதற்கு எரிபொருள் அமைச்சருடன் பேசி மீன்பிடி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மீனவர்களின் இயந்திரங்களுக்கு எரிபொருள்  பிரச்சினை பாரிய பிரச்சினையாக  இருப்பதினால், எரிபொருளை பயன்படுத்தும் இயந்திரஙக்ளுக்கு பதிலாக மின் சக்தியில் இயங்கும் இயந்திரங்களை அறிமுகப்படுத்த  வேண்டும். இவ்வகையான இயந்திரங்கள் தாய்லாந்தில் பிரபலமானவை, இதன் மூலம் கடல் மாசுபடுவதும் குறைவடையும், மண்ணெண்ணைக்கான கேள்வியும் குறைவடையும் என்றும், 

திருகோணமலை மாவட்டத்தில் ஒரேயொரு மீன்பிடித் துறைமுகமே காணப்படுகின்றது, கிண்ணியா மூதூருக்கு இடையில் மற்றுமொரு துறைமுகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாது பிடிபடும் மீன்களை பழுது படாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு பிராந்திய ரீதியாக குளிரூட்டி அறைகள் (Cool Rooms)  அமைக்கப்பட வேண்டும் எனவும் உரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.