ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் நல்ல உற்சாகத்தை தந்திருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.


முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இணைந்து கொண்ட நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) ஓட்டமாவடி – காவத்தமுனையில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,       

ஹிஸ்புல்லாஹ்வின் மீள் இணைவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் பலமடங்கு வெற்றிகளை ஈட்டுவதற்கான ஒரு நல்ல ஆரம்பமாக அமைகிறது என்பதையிட்டு என்னுடைய மகிழ்ச்சியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அத்தோடு, எந்தக் கட்சிகளிடமிருந்தும் அல்லது சுயேட்சைக் குழுக்களிடமிருந்தும் கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்ற அறிவுறுத்தல் வெளிவந்துள்ளமை எங்களைப் பொறுத்தமட்டில் முற்றிலும் சட்ட விரோதமான ஒரு விடயமாகவுள்ளது.

எதிர்வரும் தேர்தலை மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்ட அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது என்பதை முதலில் நாங்கள் சொல்லியாக வேண்டும்.

இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்காக வங்குரோத்து நிலைக்கு வந்திருக்கும் அரசாங்கத்தின் மிக மோசமான நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது தொடர்பாக ஏனைய கட்சி தலைவர்களோடு இணைந்து பலத்த கண்டனத்தையும், எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்க இருக்கிறோம்.

உடனடியாக அரசு இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து விடுபடவேண்டும். அதை மீளப்பெற வேண்டும் என்று நாங்கள் அழுத்தம் செலுத்த விரும்புகிறோம்.

குறிப்பாக அமைச்சரவைப் பத்திரத்தில் என்ன காரணங்களை முன்னிட்டு இவ்வாறான ஒரு நடவடிக்கையை அரசாங்கம் எடுத்து இருக்கிறது என்பது சம்பந்தமாக ஒரு விளக்கத்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறோம்.

அதேநேரம் அது எவ்வாறாக இருந்தாலும் கூட கடந்த ஒருசில வாரங்களாக ஜனாதிபதி உட்பட ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் இந்த விவகாரம் சம்பந்தமாக சொல்லி வந்த செய்திகள் இந்த நடவடிக்கைகள் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதன் மூலம் ஜானாதிபதியும், அரசாங்கமும் ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்க தயங்குகிறார்கள் என்ற விஷயம் வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது.

இவ்வாறான வங்குரோத்து அரசியல் இந்த நாட்டின் ஜனநாயகத்தை மீண்டும் ஒருமுறை குழி தோண்டி புதைப்பதற்கான ஒரு முயற்சி என்பதை நாங்கள் சொல்ல விரும்புகிறோம்.

இதற்கு முன்னாலும் பல தடவைகள் இவ்வாறு இந்த அரசாங்கங்கள் தேர்தல்களை நடத்தாமல் தவிர்ப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளையும் நேரடியாக சட்டமாற்றம் கொண்டு வந்து செய்த நடவடிக்கைகளையும் இட்டு நாங்கள் அவ்வப்போது எங்களுடைய கண்டனங்களை தெரிவித்திருக்கிறோம்.

ஏற்கனவே மாகாண சபைகள் முடங்கிப்போய் இருக்கின்றன. குறித்த ஒரு சட்டத்தை அமுலுக்கு கொண்டுவர முடியாமல் மாகாண சபைகள் வேண்டுமென்று முடக்கப்பட்டிருக்கின்றன.

இப்பொழுது உள்ளுராட்சி சபைகளை முடக்குகிறார்கள். அடுத்து பாராளுமன்றத்தை இவர்கள் முடக்க நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். 

எனவே, இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக எங்களது சிநேக கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு சட்டப் போராட்டத்தை நாங்கள் நீதி மன்றத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். என்பதை மிகத் திட்டவட்டமாக சொல்லி வைக்கின்றோம்.

இந்த கட்சியிடம் ஹிஸ்புல்லாஹ் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. அதேபோன்று ஹிஸ்புல்லாஹ்விடம் எமது கட்சி  எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. இந்தக் கட்சியில் சகலரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்தக் கட்சியின் வெற்றியே ஒற்றுமையில் தான் தங்கி இருக்கிறது. அந்த ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான சகல முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடளை செய்தோம் அது மிக உன்னதமாக நடந்திருக்கிறது. 

அதில் மிகப்பெரிய விட்டுக் கொடுப்புகளை செய்து கட்சிக்குள் ஹிஸ்புல்லாஹ் இணைக்கப்பட்டுள்ளார். என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.   

இது தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் நானும் எனது ஆதரவாளர்களும் இணைவதை இட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 

முஸ்லிம் காங்கிரஸ் என்பது எமது தாய் வீடு ஆகவே, அந்த தாய் வீட்டிலேதான் மீண்டும் போக வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருந்து வந்துள்ளேன்.

எப்பொழுதுமே இன்னுமொரு கட்சியை தொடங்க வேண்டும் என்று பலர் என்னிடத்தில் சொல்லுகின்ற போதெல்லாம் நான் ஒருபோதும் அதற்கு அனுமத்தித்தது கிடையாது. 

ஏனென்றால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிளவுபட்டு கட்சிகளை உருவாக்கி முஸ்லிம் சமூகத்திடையில் ஒரு ஒரு பிளவை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் நாம் மிகக் கவனமாக இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில், தலைவரின் கரங்களை முழுமையாக பலப்படுத்தி கட்சியை பலப்படுத்தி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற மூன்று முஸ்லிம் பிரதேச சபைகளையும் நூறு வீதம் கைப்பற்றி அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேச சபைகளை கைப்பற்ற தலைவரும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அனைவரும் எடுக்கும் முழுப் பணிக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்கி, தலைவரோடு இணைந்து இந்தக் கட்சியை முழுமையாக பலப்படுத்தி இந்த மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்தின் பேரம் பேசுகின்ற ஒரு சக்தியாக முஸ்லிம் காங்கிரஸை ஒரு குறுகிய காலத்துக்குள் மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானத்தை நான் எடுத்துள்ளேன்.

கட்சியோடு நான் மீண்டும் இணைய வேண்டும் என்று கல்குடா தொகுதியின் அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சமூகத்தின் நலன் கருதியும் கட்சியின் நலன் கருதியும் நானும் எனது ஆதரவாளர்களும் இணைய வேண்டும் என்பதில் இரவு பகலாக பாடுபட்டார்கள்.

கட்சியின் தலைமைத்துவம் அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டு என்னை மீண்டும் கட்சியோடு இணைத்து இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்ததற்காக இந்த மாவட்ட மக்கள் சார்பிலும் எனது ஆதரவாளர்கள் சார்பிலும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது இறுதி மூச்சு இருக்கும்வரை இந்தக் கட்சியில் இருந்து கட்சியை பலப்படுத்தி கட்சிக்காக எனது முழு பங்களிப்பையும், எனது அனுபவத்தையும் வழங்குவேன்.என்று எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார் 

இந்நிலையில், அலி ஸாஹிர் மௌலானா கருத்துத் தெரிவிக்கையில், ஒரு வாக்குப் பலமுள்ள ஒருவரான ஹிஸ்புல்லாஹ் கட்சியில் சேர்ந்தால் எனக்கு அது பாதிப்பு வருமே என்று நான் நினைக்க வில்லை. கட்சியின் வளத்தை, பலத்தை கூட்டுவதற்காக நல்லெண்ணத்துடன் இணைகின்றார் என்ற அடிப்படையில் சந்தோசமாக மனமார அவரின் இணைவை ஏற்றுக் கொண்டுள்ளேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து ஆதரவாளர்களையும் ஒன்றிணைத்து ஒற்றுமையான முறையில் எங்களது வெற்றியை நோக்கி செல்லவுள்ளோம். 

ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் காங்கிரஸில் இருந்த போது எப்போதும் வெற்றியை அடைந்தவர்தான். அவர் மீண்டு முஸ்லிம் காங்கிரசுக்கு வந்துள்ளார். அவருக்கு எதிர்வரும் காலங்களிலும் நிச்சயம் வெற்றியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஊடாக நேர்மையாகவும், நியாயமாகவும், அனைத்து இன மக்களுக்கு நாங்கள் பல்வேறு சேவைகளை செய்யவுள்ளோம். என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாகிர் மௌலானா தனது கருத்தினை தெரிவித்தார்.

ஹபீப் றிபான் கருத்துத் தெரிவிக்கையில்,

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் ஆரம்பித்த இந்தக் கட்சியில் ஆரம்பத்தில் இருந்த முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீண்டும் இன்று இணைந்திருப்பது இந்த மாவட்டத்தில் மட்டுமல்லாது நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்கள் பெரும் சந்தோசத்தை அடைந்துள்ளனர்.

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை மீண்டும் கட்சியில் கொண்டு வருவதற்கு பல தியாகங்கள், பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசியல் பயணத்தில் கல்குடா, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய மூன்று பகுதிகளும் ஒற்றுமையாக செயற்பட்டு இந்த மாவட்டத்துக்கு எமது ஒற்றுமையைக் காட்டி சமூகத்தின் நலனுக்காக பயணிக்கவுள்ளோம். என்று கல்குடா தொகுதி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இணைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்ட இந்நிகழ்வில் கல்குடா, ஏறாவூர், காத்தான்குடி பகுதி உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.