தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 07 வீடுகள் முற்றாகவும், 05 வீடுகள் பகுதியளவிலும் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த வீடுகளில் இருந்த 49 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளிலும், தமிழ் மகா வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் மின் கசிவின் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் அபயக்குரல் எழுப்பியதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்து இடம்பெற்ற பகுதிக்கு நேற்று (17) சென்ற பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அரவிந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு அவரின் ஊடாக பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.