நாட்டு முஸ்லிம்களுக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை உருக்கமான வேண்டுகோள்!
இலங்கையில் மீண்டும் ஐ.எஸ் அடிப்படைவாதத்தைப் பரப்பும் வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான Voice of Khurasan எனும் இலத்திரனியல் சஞ்சிகை சமூக வலைத்தலங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் விரைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பொலிஸ்மா அதிபரைக் கோரியுள்ளது.
Voice of Khurasan எனும் இலத்திரனியல் சஞ்சிகையின் இலத்திரனியல் பிரதியொன்றும் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட ஆபத்தான நிலைமை தொடர்பில் விரிவாக விசாரணை நடாத்தி குறிப்பிட்ட இலத்திரனியல் சஞ்சிகையை வெளியிட்டவர்கள், மற்றும் விநியோகிப்பவர்கள், சம்பந்தப்பட்டவர்களை இனங்கண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உலமா சபை பொலிஸ்மா அதிபரைக் கோரியுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகார பிரிவின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் நுஸ்ரத் நவுபல் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். கடிதத்தின் பிரதிகள் கொழும்பு குற்றவியல் விசரணை பிரிவுக்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி மற்றும் செயலாளர் அர்கம் நூராமித் ஆகியோர் கையொப்பமிட்டு உலமாக்களுக்கும் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும் மற்றும் சமூக தலைவர்களுக்கும் வேண்டுகோளொன்றினையும் முன்வைத்துள்ளனர்.
குறிப்பிட்ட வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சமீப காலத்தில் ஆங்கில மொழியில் இஸ்லாத்துக்கு முரணான தீவிரவாத மற்றும் பயங்கரவாத சிந்தனைகளை வரவேற்கக் கூடியதாகவும் அதனை மேற்கொண்டவர்களை புகழக்கூடிய விதத்திலும் ஓர் இலத்திரனியல் சஞ்சிகை பரவி வருவதை அவதானிக்க முடிகிறது. சில தீய சக்திகள் இதனைப்பரப்பி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துவதற்கும், முஸ்லிம்களும், இஸ்லாமும் இலங்கைக்கு எதிரானவர்கள் என சித்தரிக்கவும் முயற்சிக்கிறார்கள். இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான காலகட்டத்தில் எமது சமூகத்தையும் நாட்டையும் பாதுகாப்பது எமது கடமையாகும். அதனால் இந்த நாட்டில் எமது முன்னோர்கள் முஸ்ஸிம் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு மேற்கொண்ட பங்களிப்புகள் போன்று இன்றும் நாம் பங்களிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். இஸ்லாத்துக்கு முரணான இஸ்லாத்தின் பெயரில் பகிரப்படும் கருத்துக்களிலிருந்து அனைவரும் மிக ஜாக்கிரதையாகவும், ஒற்றுமையாகவும் செயற்பட்டு நாட்டுக்கும் மனித சமுதாயத்துக்கும், இஸ்லாத்துக்கும் பங்களிப்பு செய்யக்கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப உதவி புரியுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.