பெருக்கு மரம் - Baobab Tree 

பெருக்கமரம் பாவோபாப் மரம் என்று சர்வதேச நாடுகளில் அழைக்கப்படுகிறது. இவ்வகை மரங்கள் மடகஸ்கார் ஆப்பிரிக்க அரேபியா ஆஸ்திரேலியா போன்ற  நாடுகளுக்குச் சொந்தமானவையாக காணப்பட்டாலும் இலங்கைக்கு இம்மரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் அரேபிய வணிகராகும். கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.16ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால இலங்கையின் அயல்நாட்டு வாணிபத்தில் அரேபிய வணிகர் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்கள் வணிகத்தின் பொருட்டு இலங்கையில் தங்கியிருந்த கடற்கரை நகரங்கள் துறைமுகங்களில் இம்மரத்தை நாட்டியுள்ளனர். இவ்வரலாற்றுப் பின்னணி கொண்ட இடங்களிலேயே பிற்காலத்தில் போத்துக்கேயர் ஒல்லாந்தர் தமது கோட்டைகளையும் அமைத்தனர். இதற்கு நெடுந்தீவு மன்னார் காலி முதலான இடங்களில் உள்ள கோட்டைகளும் அவற்றின் அருகேயுள்ள பெருக்கு மரங்களும் சான்றாகும்.

 கி.பி 1630 ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி போர்த்துக்கேயருக்கும் இரண்டாம் ராஜசிங்க மன்னனுக்கும் இடையில் மெனராகலை மாவட்டத்தில் உள்ள வெல்லவாய பகுதியில் யுத்தம் இடம்பெற்றது. இதில் இலங்கை முஸ்லிம்களும் அரபிகளும் ஓட்டகத்தில் ஏறி போர்த்துக்கேயருக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். இந்தப் படை ஒட்டு பலகாய ඔටු හමුදාව  (ஒட்டகப் இராணுவம்) என்று அழைக்கப்பட்டது. இவர்கள் அரேபியாவில் இருந்து ஒட்டகங்களை மன்னார் துறைமுகத்திற்கு எடுத்துவந்ததாகவும்  இதன் போது பெருக்கமரம் எனப்படும் ஒட்டகங்கள் சாப்பிடும் baobab என்ற மரத்தை மன்னார் நகரில் நாட்டினார்கள் என்றும் வரலாற்று ஆசிரியர் ஹென்ரி கொரயா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பழமையான பெருக்க மரம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இது அடன்சோனியா எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த மரமாகும். இது ஐந்து முதல் முப்பது மீற்றர் உயரத்திற்கு வளரக்கூடியவை. ஏழு முதல் பதினொரு மீற்றர் விட்டம் கொண்டவை. தமது உடற் பகுதியில் சுமார் 120000 லீட்டர் நீரை சேமித்து வைத்து கடுமையான வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்டது.  

படம் - யாழ்ப்பாணம் புங்குடுதீவில் காணப்படும் பழமையான பெருக்க மரம்

தொகுப்பு : இப்ஹாம் நவாஸ் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.