2 வது டி20 ஆட்டத்தில் நிறைய நோ பால்களை வீசிய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் கேப்டன் பாண்டியா.
புணே நகரில் நடைபெற்ற 2 வது டி20 ஆட்டத்தில் இலங்கை அணி, 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் 52, தலைவர் தசுன் ஷனகா 56 ஓட்டங்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. அக்‌ஷர் படேல் 65, சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்கள் எடுத்தார்கள்.
இந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், 5 நோ பால்களை வீசினார். இந்திய அணி 7 நோ பால்களையும் 4 வைட்களையும் வீசியது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அர்ஷ்தீப் வீசிய நோ பால் காரணமாக 19 வது ஓவரில் கேட்ச் கொடுத்தும் தப்பித்தார் ஷனகா.
டி20 கிரிக்கெட்டில் ஓர் ஆட்டத்தில் அதிக நோ பால்களை வீசிய பந்துவீச்சாளர் ஆனார் அர்ஷ்தீப். நோ பால்கள், ஃப்ரீ ஹிட்களால் இந்திய அணி 27 ஓட்டங்களைக் கொடுத்தது. கடைசியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் அர்ஷ்தீப் சிங் மீது அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் தலைவர் பாண்டியா கூறியதாவது:
நோ பால்கள் வழியாக இலவசங்களை வாரி வழங்கக் கூடாது. ஓட்டங்கள் கொடுக்கலாம். முன்பும் அர்ஷ்தீப் சிங் சில நோ பால்களை வீசியுள்ளார். அவர் மீது பழி சுமத்தவில்லை. கிரிக்கெட்டின் இயல்பான விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். எந்தவொரு கிரிக்கெட்டிலும் நோ பால் வீசுவது குற்றமாகும். அவர் மீது கடினமான விமர்சனங்களை வைக்க விரும்பவில்லை. அவர் மீண்டும் பயிற்சிக்குச் சென்று தன் தவறுகளைச் சரி செய்ய வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் இத்தகைய தவறுகளைச் செய்யக்கூடாது என்றார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.