சிரியாவில் பதற்றம் : இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 15 பேர் பலி-!

இயற்கையின் கோர முகம் மற்றும் பயங்கரவாதிகளின் வெறிச்செயலை தொடர்ந்து, சிரியாவின் அண்டை நாடான இஸ்ரேல் அங்கு வான்தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிரியா-இஸ்ரேல் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடிக்கிறது.

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. 

ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் இராணுவ நிலைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது. 

குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டம் இந்த நிலையில் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை இஸ்ரேல் இராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. 

டமாஸ்கஸ் அருகே மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிறைந்த இராணுவ வளாகங்களின் தாயகமாக விளங்கும் கபர் சூசா நகர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. 

அதிக மக்கள் தொகை கொண்ட நகர் மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டதில் அங்குள்ள ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகின. 

இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வான்தாக்குதலால் சிரியா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.