கம்பஹா ஸ்ரீ போதி மைதானம் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்


கம்பஹா ஸ்ரீ போதி விளையாட்டு மைதானம் வேகமாக அபிவிருத்தி செய்யப்படும். அதற்காக ஒரு முன்னுரிமைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதோடு அதனை செயற்படுத்த ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சஹன் பிரதீப் விதான இதன் தலைவராகவும் மேல் மாகாண சபை பிரதம செயலாளர், கம்பஹா மாவட்ட செயலாளர், கம்பஹா மாநகர சபை செயலாளர் மற்றும் கம்பஹா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இதன் ஏனைய உறுப்பினர்களாவர்.

கம்பஹா ஸ்ரீ போதி விளையாட்டரங்கின் அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தலைமையில் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  

இந்த விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திக்கான சகல பொறுப்புகளும் குழுவிடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு வலியுறுத்தினார்.

விளையாட்டுத்துறை அமைச்சும் மாகாண சபையும் ஒன்றிணைந்து இந்த மைதானத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மேல் மாகாண சபையின் பிரதம செயலாளர் திரு.பிரதீப் யசரத்னவிற்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி கம்பஹா ஸ்ரீ போதி மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆம்பிக்கப்பட்டன. 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மைதானம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் இரண்டு வருடங்களாக கம்பஹா பிரதேச  செயலக மாவட்ட விளையாட்டு அதிகாரியின் கட்டுப்பாட்டில்  இருந்தது. அதன் பின்னர் அங்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக கம்பஹா மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் கம்பஹா மாநகர சபை தனது நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக மாகாண சபைக்கு வழங்கியுள்ளது. 

இக்கலந்துரையாடலில் கம்பஹா பிரதேச செயலாளர் கே.ஏ.எஸ்.எல். குணதிலக, கம்பஹா கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் ஜனக லக்மால் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஒன்றும் கலந்து கொண்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.