கடன் செலுத்துகை தாமதிக்கப்பட்டால் அரச ஊழியர்களுக்கு ஊதியமில்லை; அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல சுட்டிக்காட்டு !
 
நாட்டின் மார்ச் மாதத்துக்கான செலவாக 196 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்திருந்தபோதும், 173 பில்லியன் ரூபாவே வருமானமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இம்மாதத்தில் மீள் செலுத்தவேண்டிய 500 பில்லியன் ரூபா கடன் தொகையும் எம்மிடம் இல்லை. அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அரச ஊழியர்களுக்கு அடுத்த ஒரு வருடத்துக்கான கொடுப்பனவுகளை செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். 

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வருமானமின்மை மற்றும் வரவு செலவுத்திட்டத்திலுள்ள வரவுக்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளி என்பன எமது நாட்டில் நீண்டகாலமாக இருந்துவரும் நிதி முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளாகும். புறக்காரணியாக இறக்குமதி செலவை நிரப்புவதற்குத் தேவையான வருமானம் இல்லாததால் மீள் செலுத்துகை பிரிவுக்குரிய வர்த்தக கணக்கு, வருமான கணக்கு, சேவை கணக்கு, நடைமுறை கணக்கு என்பவற்றில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்காக ஒவ்வொரு அரசாங்கமும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடனைப் பெற்றுக்கொண்டது. அந்த கடனினூடாகவும் செலவை ஈடுசெய்ய முடியாத சந்தர்ப்பங்களில், நிவாரண அடிப்படையிலான கடனை பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச சந்தையில் சென்று அதிக வட்டி வீதத்தில் கடன்களை பெற்றுக்கொண்டுள்ளோம்.

இதுதொடர்பில் முறையான வேலைத்திட்டங்கள் கையாளப்படாததால் இந்தப் பிரச்சினை மேலும் உக்கிரமடைந்தது. கொரோனா நிலைமையினால் எமது நிலைமை மேலும் சிக்கலானது. அதனைத் தொடர்ந்து பெற்றுக்கொண்ட கடன்களை மீள செலுத்தாமையினால், வெளிநாட்டு அரசுகள் எமது நாட்டின் மீது வழக்கு தொடர ஆரம்பித்தன. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் உதவியை பெற்றுக்கொண்டோம்.

நாம் எண்ணுவதுபோன்று தேசிய மட்டத்தில் இந்த பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது. அந்தளவுக்கு நிபுணத்துவம் எம்மிடம் இல்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருசில அரச தலைவர்களுடனும், நிறுவனங்களுடனும் தனிபட்ட ரீதியில் கலந்துரையாடியே நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொடுத்துள்ளார். இதற்கு ஒரு வருட காலம் தேவைப்பட்டது. இதற்கு முன்னரும் சர்வதேச நாணய நிதியத்துடன் பல்வேறு உதவிகளை பெற்றுக்கொண்டிருந்தாலும், அவர்களின் பரிந்துரைகளை முறையாக பின்பற்றாமையினால் சர்வதேச மட்டத்தில் எமது நாடு நம்பிக்கையை இழந்துள்ளது.

அந்த நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காகவே நாணய நிதியத்தினால் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், ஏற்படும் இடைவெளியை நிரப்புவதற்கான வசதிகள் எம்மிடம் இல்லை.

இன்னும் எமது கடன் மறுசீரமைப்பு செய்யப்பட வில்லை. நாணய நிதியத்தின் ஒப்பந்தத்துடன் கைச்சாத்திட்டதனூடாக சர்வதேச மட்டத்தில் ஒரு அங்கீகாரம் எமக்கு கிடைத்துள்ளது. நாணய நிதியத்துடன் பொது இணக்கப்பாட்டுக்கு வராவிட் டால் இரண்டு வாரங்களுக்கு மேல் எமது நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது. இதுதொடர்பில் எத்தனை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், இதற்கப்பால் மாற்று தீர்வு எமக்கு இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடாகும்.

இவ்வளவு காலமும் நாணய நிதியத்திடமிருந்து எமக்கு கிடைத்த நிதி நேரடியாக மத்திய வங்கியின் செயற்பாடுகளுக்கே பயன்படுத்தப்பட்டது. ஆனால், இம்முறை வரவுசெலவுத் திட்டத்தின் இடைவெளியை நிரப்புவதற்கும் இந்த நிதியை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மார்ச் மாதத்தின் செலவுகளுக்காக 196 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்திருந்தோம். ஆனால், 173 பில்லியன் ரூபாவே வருமானமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி இம்மாதத்தில் 500 பில்லியன் ரூபா கடன் தொகை மீள் செலுத்தவேண்டியுள்ளது. இம்மாதத்துக்கு தேவையான அந்த 500 பில்லியன் ரூபா எம்மிடம் இல்லாத நிலைமையே நிலவுகிறது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அரசாங்க ஊழியர்களுக்கு அடுத்த ஒரு வருடத்துக்கான கொடுப்பனவுகளை செலுத்த முடியாத நிலை ஏற்படும். சம்பள கொடுப்பனவுக்கான உதவித் தொகையாகவும் இதனை எம்மால் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.