அன்பு வைத்தவர்களினதும் , உறவினர்களினதும் இழப்புக்கள் எவ்வளவு வலியை தருமோ.. அந்தளவு வலிக்கிறது. எம்மிடம் தொழில் தேடி வந்து சில காலம் தொழில் புரிந்த   pathum இன் இழப்பும்.  

சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு எறும்பை உதாரணம் காட்டுவோமல்லவா… ஆனால் நாங்கள் pathum ஐ உதாரணம் காட்டுவோம். உழைப்பதில் ஆர்வம் மிக்கவன். சிறந்த உழைப்பாளி , நேர்மையானவன். ஓரளவிற்கு படித்தும் இருக்கிறான் என்பது அவனது பண்பாடுகளில் வெளிப்பட்டது. போட்டியான உலகில் பொறாமை இல்லாது செயல் பட்டான்.   அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது.  பிள்ளைகளுடன் அலாதிப் பிரியம் கொண்டவன்.

36 வயதினைக் கொண்ட pathum நான்கு பிள்ளைகளின் தந்தை, வறிய குடும்பம் தான். சிறிய வீடு தான். ஆனாலும் அவனது முகத்தில் எப்போதும் சிரிப்பிற்கு பஞ்சமே இல்லை. அவனுடன் பேசுவோர் அனைவரின் முகத்திலும் சிரிப்பு தவழும் படி செய்து விடுவான். தவறு செய்ய மாட்டான். வேலைக்கு ஏதும் பொருள் குறைபாடு இருந்தால் அவனே சென்று எடுத்து வருவான். ஏதேனும் தவறுதலாக நிகழ்ந்து விட்டால் அவனை ஏசுவதற்கு கூட மனம் வராது. வயது வித்தியாசமின்றி அனைவருடனும் மரியாதையாய் பழகியவன். நல்ல உள்ளம் கொண்டவன். மதம் வேறாக இருந்தாலும் என்றைக்குமே இன , மத வேறுபாட்டை தனது செயல்பாட்டில் காட்டியதே இல்லை. 

2022 ஏப்ரல் மாதம் அது ஓர் வெள்ளிக்கிழமை (01) காலை வேளை தனக்கு பொறுப்பாகக் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து முடித்து , பகல் போஷணத்தையும் சாப்பிட்டு இரவு வரை வேலை செய்து சம்பளத்தையும் பெற்றுக் கொண்டான் . ரமழான் காரணமாக.. வேலை கொஞ்சம் குறைவாக இருந்தமையால், ஒரு மாத காலம் விடுமுறையை அறிவித்தோம். அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனது வீட்டின் செலவினங்களை சொல்லி கவலைப்பட்டான்..

அதற்குப் பதிலாக Chun paan ஓடுவதாக பேசி அதற்கான ஆயத்தங்களையும் வெகு ஆர்வத்தோடு செய்தான். சித்திரைப் புத்தாண்டை பிள்ளைகளுடன் கொண்டாட இதன் மூலம் நல்ல சம்பளத்தையும் பெறலாம் என்றும் கூறினான். எல்லா வகையிலும் எங்களுக்கு ஆதரவு அளித்த அவனை நாங்கள் எப்போதும் பாராட்ட தவறியதில்லை. அவனது இந்த முடிவிற்கும் நாங்கள் ஒத்துழைப்பதாய் எல்லாம் பேசி முடிவாகி விட்டது. காலையில் கட்டாயம் chun paan போவதற்கு வருகிறேன் என்று சொல்லி இரவு வீட்டுக்குப் போய் விட்டான்.   

நள்ளிரவு நேரம் 2.00 மணியளவில் அழைப்பு… 
அவனது மனைவி அழுகிறாள்…pathum இற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காய் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் சொல்கிறாள். எனக்கும் கணவருக்கும் கொஞ்சம் மன சஞ்சலமடைந்தது. என்னவாக இருக்குமோ என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் இன்னுமொரு மணி நேரத்தில் 3.15 இருக்கும்..  மற்ற அழைப்பு…  “ஹலோ… கியன்ன அக்கே ” என்றேன்.  “Pathum நெதி வெலா அனே…” என்று அழுகை.. pathum இன் பக்கத்து வீட்டுக்காரப் பெண் தகவல் சொன்னாள். இடிந்து விட்டோம் நானும் கணவரும். அதிர்ச்சியல்ல … பேரதிர்ச்சியாக இருந்தது.  இதனை நாம் எதிர்பார்க்கவில்லை. காலையாகும் வரை இருப்புக் கொள்ளவில்லை. விடிந்ததும் கணவர் சென்று பார்த்துவிட்டு வந்தார். வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இருந்தான் pathum. (02) அன்று  மாலை வேளை அவனது பூதவுடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. நாங்களும் சென்று பார்த்தோம். பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதிரையில் அமர்ந்திருந்தனர். சின்ன சின்ன வயதுகளை கொண்டவர்கள்.காணும் போதே கண்கள் குளமாகிவிட்டன. கை நீளமான வெள்ளை சேர்ட் , கழுத்துப்பட்டி , கறுப்பு நிற காற்சட்டை அணிவிக்கப்பட்டு பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது pathum இன் பூதவுடல். அவனது வாழ் நாட்களில் கூட அவ்வாறு அணிந்திருக்க மாட்டான். பிள்ளைகளுக்காகவே உழைத்தவன். போதைப் பழக்கம் இருந்திருக்கிறது. அதனால் உடல் உள் உறுப்புக்கள் பாதிப்படைந்து இருந்திருக்கின்றன. திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. வைத்தியசாலை அறிக்கை இது. இனி என்னதான் செய்ய…. பின், (03) அன்று பிற்பகல் 1.30 மணிக்கு அடக்கத்திற்காக அவனது உடல் கொண்டு செல்லப்பட்டதாக அறியக் கிடைத்தது.அவன் போவதாகக் கூறிய chun paan எமது வீட்டு முற்றத்தில்… அவனோ பயணப்பட்டு விட்டான்.

Pathum no more … 
Rest in peace pathum…

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.