மேற்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பமாகும் - அமைச்சர் பிரசன்ன 

⏩மேற்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பமாகும்...

⏩ தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்றவாறு இது புதுப்பிக்கப்படும்...

⏩ ஜூன் மாதத்தில் அதன் இறுதி மதிப்பாய்வை மேற்கொள்வதற்கான வழிமுறைகள்…

- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

மேற்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார். இத்திட்டத்தின் இறுதி மதிப்பாய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட பணிகளை 3 மாதங்களுக்குள் மேற்கொள்ளவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேற்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். குறித்த கலந்துரையாடல் நேற்று (22) நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது, மேற்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தை மீள அமுல்படுத்துவதற்கான பணிகளை ஆரம்பிக்குமாறு அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அதன்படி, இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த கலந்துரையாடலை நடத்தினார்.

மேற்கு பெருநகர அபிவிருத்தித் திட்டம் 2016 இல் தயாரிக்கப்பட்டது. இது சிங்கப்பூர் நகர வடிவமைப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய 3 மாவட்டங்களுக்காக இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது, இதன் கீழ் இந்த மாவட்டங்கள் பொருளாதார, வணிக, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக அபிவிருத்தி செய்யப்படும்.

இங்கு, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்றவாறு இந்த அபிவிருத்தித் திட்டத்தை மேம்படுத்தி, அதன் இறுதி மீளாய்வை அடுத்த மாதத்திற்குள் விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த அபிவிருத்தித் திட்டத்தை வர்த்தமானி மூலம் வெளியிடும்.

இத்திட்டத்தின் கீழ், மீரிகம மற்றும் ஹொரணை கைத்தொழில் நகரங்களாகவும், மாலப்பே மற்றும் ஹோமாகம தொழில்நுட்ப நகரங்களாகவும், பதுரலிய மற்றும் அவிசாவளை பெருந்தோட்ட நகரங்களாகவும், நீர்கொழும்பு மற்றும் வத்தளை கரையோர சுற்றுலா நகரங்களாகவும், கட்டான மற்றும் கட்டுநாயக்கவை போக்குவரத்து மற்றும் விமான நகரங்களாகவும், கஸ்பேவ சொகுசு வீட்டு நகரங்களாகவும், முத்துராஜவெல சுற்றுச்சூழல் வலய நகரங்களாகவும் அபிவிருத்தி செய்யப்படும். கொழும்பு வர்த்தக நகரமாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர நிர்வாக நகரமாகவும் அபிவிருத்தி செய்யப்படும்.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நகர அபிவிருத்தி அதிகாரசபையானது, நகர அபிவிருத்தி பிரதேசமாக அறிவிக்கப்பட்டும் எந்தவொரு பிரதேசத்திற்கும் நகர அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்தக் கடமைப்பட்டுள்ளது. இது 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா, மேலதிகச் செயலாளர் (வீடமைப்பு) டபிள்யூ. எம். ஆனந்த, உதவிச் செயலாளர் (நகர அபிவிருத்தி) டபிள்யூ. பி. யு. காவிந்த்யா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதி பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல் வலயம் 2) லலித் விஜயரத்ன மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.