விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட விந்தணுவுக்கு என்ன நடந்தது..?
விண்வெளி வீரர்களைப் போல் பிற மனிதர்களும் எதிர்வரும் காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குப் பயணிக்கலாம் என்பதுடன், அங்கு வாழவும் செய்யலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சர்வ சாதாரணமாகக் கூறுகிறது.


பூமிப் பந்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சுதந்திரமான ஒரு வாழ்க்கையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட, செவ்வாய் கிரகத்தை நோக்கிய மனிதனின் விண்வெளிப் பயணத்திற்கான அனைத்து அறிவியல், தொழில்நுட்ப முயற்சிகளையும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே மேற்கொண்டு வருகின்றனர்.விஞ்ஞானத்தின் வியக்கத்தக்க வளர்ச்சியால் பூமியிலிருந்து பல்லாயிரம் மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள செவ்வாய் கிரகத்திற்கும் மனிதன் இன்னும் சில, பல ஆண்டுகளில் சென்றுவிட வாய்ப்புகள் உள்ளன.அப்படியோர் அற்புதம் நிகழ்ந்து, செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் குடியேறினாலும், தற்போது பூமியில் இருப்பதைப் போன்றே அங்கும் சிக்கலின்றி இனப்பெருக்கம் செய்ய இயலுமா என்பதுதான் அறிவியல் உலகத்தின் முன் தற்போதுள்ள சவால் நிறைந்த கேள்வி.அப்படி செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் மனிதன் அங்கு குழந்தைப் பேற்றை அடைய முடியாதபட்சத்தில், அதற்காக அவன் மீண்டும் 225 மில்லியன் கிமீ என்னும் நீண்ட நெடிய தொலைவைக் கடக்க, ஏழு மாதங்கள் பயணித்து பூமிக்கு வந்தாக வேண்டும்.இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம். ஆகையால் விண்வெளியிலேயே மனிதன் இனப்பெருக்கம் செய்து கொள்ள வேண்டிய நிலை வரும்.ஆனால், அதிக கதிர்வீச்சு போன்ற காரணங்களால், விண்வெளியில் மனித உடலுக்கு எதிரான சூழலே நிலவுகிறது. அத்துடன் அங்கு மனிதர்களின் விந்தணுக்களும் கருமுட்டைகளும் அதிக செயல்திறன் கொண்டவையாக இருப்பதும் குழந்தை பிறப்பில் பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.ஆனாலும், விண்வெளியில் மனிதனின் இனப்பெருக்கத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் முயற்சிகளில் நாசா இறங்கியுள்ளது.இந்த ஆய்வின் முக்கிய அம்சமாக, மனிதனின் உறைந்த நிலையிலான விந்தணுக்களின் முதல் மாதிரியை அண்மையில் நாசா விண்வெளிக்கு அனுப்பியது.அங்கு அவை மீண்டும் திறன்மிக்கவையாகச் செயல்பட்டாலும், அவற்றின் இயக்கம் வழக்கத்தில் இருந்து மாறுப்பட்டு இருந்ததுடன், மரபணுக்களிலும் (DNA) சேதம் ஏற்பட்டிருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.விந்தணுக்களின் இதுபோன்ற எதிர்மறை மாற்றங்கள், அவை கருமுட்டையுடன் இணைந்து கரு உருவாவதற்கான வாய்ப்பைக் குறைத்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.ஆனால் இதற்கு நேர்மாறாக, விண்வெளியில் பல மாதங்கள் உறைந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த மனித விந்தணுக்களை மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்து, அவற்றை பெண்ணின் கருமுட்டைகளுடன் இணைத்தபோது, கரு உண்டாகி ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் அதிசயத்தையும் விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.அத்துடன் விண்வெளியில் இருந்தபோது விந்தணுக்களில் ஏற்பட்ட மரபணுக்கள் சிதைவும், பூமியில் அது கருமுட்டையுடன் இணையும்போது அந்தச் சிதைவு இயற்கையாகவே சரியாகும் விந்தையையும் விஞ்ஞான உலகம் கண்டு உணர்ந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.