இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகளுக்கு சாதகமானது!


இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டினார்.

இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு ​செல்லும் முதல் விஜயம் இதுவாகும். இதன்போது இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் கடினமான காலங்களில், இந்தியா வழங்கிய உறுதியான ஆதரவுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கம், இந்திய மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையில் அனைவரும் பொருளாதார மறுமலர்ச்சி, நிலையான அபிவிருத்தி, நீதி ஆகியவற்றை அடைவதற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தினார்.

நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இந்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடி தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்தார்.

இலங்கை பொருளாதார சீர்திருத்தங்களை சீராக அமுல்படுத்தி வருவதாகவும், இந்தியப் பிரதமருடனான தூதுக்குழு மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான சாதகமான பெறுபெறுகளை வெளிப்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார். எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மூலம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வழிவகுத்துள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய-இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல் என்று சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுவதாகவும், அது சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர். இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி விக்ரமசிங்கவின் இந்திய விஜயம், இரு தரப்பு நம்பிக்கையை வலுப்படுத்துவதையும், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதையும், இலங்கை - இந்திய உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும். புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதிக திறன் கொண்ட மின் கட்டமைப்பு, ஒன்றோடொன்று இணைக்கப்படுவதால், தடையற்ற இருவழி மின்சார வர்த்தகத்தை எளிதாக்குகிறது. அத்துடன், இது பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நிலையான வளர்ச்சியையையும் ஊக்குவிக்கும்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தவும், தனது இந்திய விஜயம் நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது என்று ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார். போட்டிமிகு உலகில் பரஸ்பர சுபீட்சத்தை நோக்கமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான புவியியல் மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.