இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பெற்றோலிய குழாய்!


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரு நாள் உத்தியோகபூர்வ இந்திய பயணத்தின் போது ஊடகங்களுக்கு இன்று (21) கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை பொருளாதார சீர்திருத்தங்களை சீராக அமுல்படுத்தி வருவதாகவும், இந்தியப் பிரதமருடனான தூதுக்குழு மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான சாதகமான பெறுபெறுகளை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி விக்ரமசிங்க, எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மூலம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வழிவகுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்திய ஊடகங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

“பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் புதுடெல்லிக்கு வருவதை கௌரவமாக கருதுகிறேன். கடந்த ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நான் இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்திருக்கும் நிலையில், இந்த பயணம் எனக்கும், எனது அரசுக்கும் மிக முக்கியமான பயணம் என்றே கூறவேண்டும். இந்த பயணத்தின் போது எனக்கும், எனது குழுவினருக்கும் உபசரிப்புக்களை வழங்கிய பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டிய ஜனாதிபதி, இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும்.

கடந்த வருடம் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார, சமூக, அரசியல் ரீதியிலான அசாதாரண சவால்கள் மற்றும் அந்தச் சவாலைகளை வெற்றிகொள்வதற்காக தன்னால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பிலும் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்திருந்தேன்.

எமது அண்மைய வரலாற்றில் மிக சவாலான காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி அவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் மனப்பூர்வமாக நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கையின் அண்மைக்கால நிலைமைகளை மீளாய்வுச் செய்யும் போது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் இலங்கையர்களின் அனைத்து சமூகங்களுக்கும் பலன் கிட்டும் வகையில், நீதி, நியாயத்துடனான நிலையான, ஸ்திரமான அபிவிருத்தியை நோக்கிய பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான எனது அர்ப்பணிப்புக்களை பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்துள்ளேன்.

இதற்கு அப்பால் சென்று இலங்கையை பாரிய பொருளாதார மறுசீரமைப்பு பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதையும், இந்த செயற்பாடுகளின் நிலையான பிரதிபலன்களை இலங்கை தற்போது அடைந்துள்ளதாகவும், நாட்டின் முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நம்பிக்கை மீள கட்டியெழுப்பப்பட்டுள்ளதையும் நான் தெளிவுபடுத்தியுள்ளேன்.

மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு, அதிகார பரவலாக்கம், வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பலதரப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் முன்னேடுத்துச் செல்வதற்காக நான் முன்வைத்த பரந்துபட்ட யோசனை குறித்து கருத்துக்களையும் நான் அவருடன் பகிர்ந்துகொண்டேன். இந்த பணிகள் குறித்து இணக்கப்பாட்டுடன், தேசிய ஒற்றுமைக்காக பணியாற்றுமாறு நான் பாராளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். இந்த முயற்சிகளின் போது, பிரதமர் மோடி அவர்கள், தனது ஒத்துழைப்பையும், ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நாம் தற்போது எமது பொருளாதாரத்தை, நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருவதும், நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் மேம்படுத்தப்பட்ட முதலீட்டு வாய்ப்புக்களை வழங்குவதற்கும் அவசியமான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும்.

இந்த நோக்கத்தை வெற்றிகொள்வதற்காக, பலமான பங்களிப்பை அடித்தளமாகக் கொண்டு மேம்படுத்தப்பட்ட தொடர்புகள் ஊடாக எதிர்கால இலங்கை – இந்திய பொருளாதார கூட்டிணைவுக்காக ஒருங்கிணைந்த நோக்கத்திற்காக ஒன்றுபட வேண்டும்.

எமது இருதரப்பு இராஜதந்திர தொடர்புகளில் 75ஆவது வருடத்தைப் பூர்த்திசெய்யும் போது, அடுத்த சில தசாப்தங்களில் எமது எதிர்கால சந்ததியினருக்காக வழங்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் மேலதிக வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான உள்ளக செயற்பாடுகள் ஊடாக மிகவும் பாதுகப்பான எதிர்காலத்தை நோக்கி செல்வதற்கான இயலுமை பற்றியும் ஆராய்தோம்.

இரு நாடுகளுக்கும் இடையில், பல தசாப்தங்கள் பழமையான நாகரிகம், கலாசார, மானிட மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் போதான உள்ளகச் செயற்பாடுகள், வாயிலாக எமது ஒன்றிணைந்த நோக்குக்கான அடித்தளம் உருவாகியுள்ளது.

எமது உறவுகள் என்ற நூள் வரலாற்றிலிருந்தே பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. எமது எதிர்கால இலக்குகளுக்கான ஆரம்பத்திற்கு நிகழ்காலமே மிகச் சிறந்த தருணமாகும்.

பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது. அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுகிறது. அது சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தும்.

தலைமன்னார் – ராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் – காங்கேசன்துறை ஆகிய பகுதிளுக்கிடையிலான படகு சேவை இரு நாடுகளுக்கான கடல்வழிப் போக்குவரத்துக்கு வலு சேர்க்கும். இலங்கை மற்றும் இந்திய உறவுகளுக்கான வேறு வழிமுறைமைகள் தொடர்பில் ஆராய்வதும் பொருளாதார வளர்ச்சிக்கு மற்றுமொரு வலுவாக அமையும்.

புதிய மற்றும் முன்னுரிமை வழங்க வேண்டிய துறைகளுக்கு இருதரப்பு பொருளாதாரம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை மற்றும் – இந்தியா பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை மிகவும் முக்கியமானது என்ற விடயத்திற்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக சேவை வழங்கல் மற்றும் தனி நபர்களை மையப்படுத்திய சேவைகளுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள இலங்கை ஆர்வமாக உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் மேம்படுத்தப்படும் தொடர்பாடல், சுற்றுலாத்துறை, மனிதர்களுக்கிடையிலான பரிமாற்றங்கள் மற்றும் கலாசார தொடர்பாடல்கள் உள்ளிட்ட துறைகளை வலுவூட்டுவதற்கான முக்கியமான விடயங்களுக்கு நாம் இணங்கியுள்ளோம். தொற்றுநோய் பரவலுக்கு பின்னராக காலப்பகுதியில், இலங்கையின் சுற்றுலாத்துறை தனது வருமானத்தை மேம்படுத்திக்கொள்ளும் நோக்குடன் இருக்கின்ற நிலையில், இந்தியர்களின் இலங்கைக்கான சுற்றுலா மிகப்பெரிய சந்ததையாக மாறியுள்ளது. அதனால், Unified Payments Interface (UPI) முறைமையை அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் முறைமையை வலுவூட்டுவதால், ஏனைய துறைகளையும் பலப்படுத்த முடியும்.

பசுமை பொருளாதாரத்திற்கு இலங்கையின் தேசிய முக்கியத்துவம் உலக அர்பணிப்புக்களுக்கு இணங்க வலுசக்தி பாதுகாப்பை உறுதி படுத்துவதற்காகவும், பசுமை மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுவூட்டலுக்கான இந்தியாவுடன் கைகோர்த்துக்கொள்வது பெறுமதியான வாய்ப்பு என இலங்கை கருதுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திக்கான துறைசார் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலும் வலியுறுத்துகிறேன். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான அதிக வலுவுடனான மின் பரிமாற்ற தொடர்பு கட்டமைப்பு ஒன்றை நிறுவினால் இருநாடுகளுக்கும் இடையிலான இருவழிப்பாதை மின் வர்த்தகத்திற்கான வழியை ஏற்படுத்தும்.

இந்தியாவின் ஒத்துழைப்போடு, திருகோணமலை இலங்கையின் வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்தல் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலான மையமாகவும் திருகோணமலையை மேம்படுத்துவது தொடர்பிலான இலங்கையின் இலக்கு முக்கியமானதாகும்.

பிரதமர் மோடி மற்றும் நான் நம்பிக்கை கொண்டுள்ள வகையில், இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்து இலங்கை வரையிலான பல்துறைசார் பெற்றோலிய குழாய் கட்டமைப்பொன்றை உருவாக்குவதால், இலங்கையினால் வழங்கக்கூடிய உறுதியான வலுசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதே பிரதமர் மோடியினதும் எனதும் எதிர்பார்ப்பாகும்.

சமூக – பொருளாதார அபிவிருத்தியின் அதிகமான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான எமது பொது முயற்சியை வெற்றிகொள்வதற்காகவும், எமது மக்களின் போஷாக்கு நிலைமையை மேம்படுத்துவதற்கான பால் உற்பத்தி மற்றும் கால்நடை துறைகளில் எமது ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்வது தொடர்பிலும் கலந்தாலோசித்தோம்.

கல்வித்துறையின் ஒத்துழைப்பு எமது இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சமாக காணப்படுகிறது. இந்திய உதவியுடன் இலங்கைக்குள் புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவது முக்கியமானதென நம்புகிறோம். இதனால் எமது இளைஞர், யுவதிகளில் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த முடியும் என்பதோடு அவர்களை தேசிய அபிவிருத்தி பொறிமுறைக்குள் உள்வாங்கப்படுவர்.

எமது இருதரப்பு தொடர்புகளை மீளாய்வுச் செய்றவதற்காகவும், உலக மற்றும் கலாசார தொடர்புகளை வலுவாக பயன்படுத்திக்கொள்ளவும் நவீன உலகத்தில் எமது எதிர்கால எதிர்பார்ப்புக்களுக்கான நம்பிக்கையை உறுதிப்படுத்த எனது இந்திய விஜயம் வாய்ப்பளித்துள்ளது என நம்புகிறேன்.

இன்று நாம் நடத்திய கலந்துரையாடல் இலங்கை – இந்தியாவின் அடுத்த 25 வருடங்களுக்கான அடித்தளத்தை இடும் என்றும், இலங்கை அனைத்து சமூக குழுக்களினதும் நிலையான அபிவிருத்தி மற்றும் தேசிய ஒருமைப்பாடு இலங்கையின் அனைத்து சமூகத்தினர் மத்தியிலுமான நல்லிணக்கம் மற்றும் இலங்கை மக்களுக்கு சுபீட்சமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எனது நோக்கத்திற்கு உதவும் என நம்புகிறேன்.’’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.