⏩ பேலியகொடை நகர அபிவிருத்தித் திட்டத்தை மேல்மாகாண அபிவிருத்தித் திட்டத்தில் உள்ளடக்கி அதனைத் தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை...
⏩ டிசம்பர் 31ஆம் திகதிக்குள் அதற்கான முதல் அபிவிருத்தித் திட்ட அறிக்கை தேவை...
⏩ பேலியகொடையில் வீடமைப்பு பிரச்சினை மற்றும் வெள்ள அச்சுறுத்தலுக்கு தீர்வு...
⏩ பேலியகொடை மெனிங் சந்தைக்கு அருகில் பல உணவகங்கள் கட்டப்பட்டு வருகின்றன...
⏩ களனி பூஜா பூமி அபிவிருத்தியிலும் கவனம் செலுத்தியது...
- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
பேலியகொடை நகர அபிவிருத்தித் திட்டத்தை மேல்மாகாண அபிவிருத்தித் திட்டத்தில் உள்ளடக்கி அதனைத் தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் உரிய அபிவிருத்தி திட்ட அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதன் பிரகாரம் பேலியகொடை நகர அபிவிருத்தித் திட்டம் அடுத்த வருட ஆரம்பத்தில் அமுல்படுத்தப்படும் என்றார்.
பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இன்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்புக்கு மிக அருகில் அமைந்துள்ள பேலியகொடை நகரம் கொழும்புடன் இணைந்து விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளது. களனி கங்கையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளதால், தொடர்ந்து வெள்ள அபாயத்தை எதிர்நோக்கி வருகிறது.
மேலும், பேலியகொடை நகரில் அதிக மக்கள் தொகை அடர்த்தி காரணமாக, வீட்டுப் பிரச்சினை மற்றும் பல சமூக மற்றும் சுகாதார பிரச்சினைகள் எழுந்துள்ளன. பேலியகொடை நகரை இனிய நகரமாக மாற்ற மக்கள் எதிர்நோக்கும் வெள்ள அச்சுறுத்தலுக்கு தீர்வு காணப்படுவதுடன் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கும் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி பேலியகொடை நகரில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார். அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டுத் திட்டமாக இதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் பேலியகொடை நகரத்தின் ஊடாக செல்லும் மக்களின் வசதிக்காக பேலியகொடை மெனிங் சந்தைக்கு அருகில் பல உணவகங்களை அமைப்பதற்காக இலங்கை காணி மீட்பு கூட்டுத்தாபனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இரண்டு காணிகளை பேலியகொடை நகர சபை அடையாளம் கண்டுள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், பேலியகொடை மெனிங் சந்தைக்கு அருகாமையில் அமைந்துள்ள அனுமதியற்ற கடைகளை முறையாக நடத்துவதற்கு பொருத்தமான காணியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க களனி ரஜமஹா விகாரைக்கு சொந்தமான பூஜா பூமியின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர், அதற்கான பொருத்தமான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்தார்.
அந்த வேலைத்திட்டங்களை தயாரிப்பதில் களனி ரஜமஹா விகாரையின் பேராசிரியர் கொள்ளுப்பிட்டி மகிந்த சங்கரக்கித நாயக்க தேரரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயகொடி, பிரசன்ன ரணவீர, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய, பேலியகொடை நகர சபையின் செயலாளர் தரங்கா கம்லத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக