⏩ நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டுடன் பாடசாலை அபிவிருத்தி ஆரம்பமாகிறது...

⏩ இம்முன்னோடித் திட்டம்  கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடை  கல்வி வலயத்தில் உள்ள 34 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு  நடைமுறைப்படுத்தப்படும்...

⏩ அடிப்படைத் திட்டமும் மேல் மாகாண ஆளுநரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது...

                                      - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

நவீன உலகிற்கு ஏற்றவாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டுடன் பாடசாலைகளின் அபிவிருத்தி ஆரம்பமாகின்றது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை கல்வி வலயத்தில் உள்ள 34 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த முன்னோடித் திட்டத்துக்கான அனுமதியை மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்கவிடம் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மினுவாங்கொடை வலயக் கல்வி அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற மினுவாங்கொடை கல்விக் கட்டமைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.

மினுவாங்கொடை கல்வி வலயத்தில் தற்போது பாழடைந்த நிலையில் உள்ள பாடசாலை கட்டிடங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

மினுவாங்கொடை கல்வி வலயத்தில் 160 பாடசாலைகள் உள்ளன. நகர அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்புடன் தெரிவு செய்யப்பட்ட 34 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னோடித் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதற்கான அனைத்து திட்டங்களும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பட்டயப் பொறியாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்களின் மூலம் தயாரிக்கப்படும்.

பாடசாலை அபிவிருத்திக்கான ஆரம்பத் திட்டம் தனியாரால் மேற்கொள்ளப்படுமாயின் அதற்காக 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலவிட நேரிடும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

பாடசாலைகளுக்கோ அல்லது வலயக் கல்வி அலுவலகங்களுக்கோ இவ்வளவு பெரிய தொகையை சுமப்பது கடினம் என்பதால், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பட்டய பொறியியலாளர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்களை தொடர்பு கொண்டு பாடசாலைகளின் அபிவிருத்திக்கான அடிப்படைத் திட்டங்களை தயாரிக்குமாறும் அவர் குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திட்டம் தொடர்பில் பாடசாலை அபிவிருத்திக் குழு, ஆதிசிஷ்ட சங்கம், பாடசாலை முகாமைத்துவக் குழு என்பனவற்றுடன் கலந்தாலோசித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தில் மேலும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிபர்களுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.

அந்த திருத்தங்களை உள்ளடக்கி அடுத்த மாதம் அடிப்படை திட்டம் தயாரிக்கப்பட்டு முடிக்கப்படும் என்றார்.

இந்தத் திட்டங்களின் அடிப்படையிலேயே பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி அமைய வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அதிபர்களுக்கு வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தன, மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் கபில ரணராஜா பெரேரா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானராச்சி உள்ளிட்ட அதிகாரிகள், மினுவாங்கொடை பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.