எப்போது பார்த்தாலும் தலைவலி, கால்வலி எனத் தொடரும் வலிகளின் பட்டியல். தன்னை நினைக்கும் போதே வெறுப்பாக இருந்தது பாத்திமாவுக்கு.
எவ்வளவு முயன்றாலும் உடல் எடையைக் குறைக்கவே முடியவில்லை பௌஸியாவால். எப்போதும் ஸிலிம்மாய் இருக்கும் அடுத்த வீட்டு நதாவைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்குப் பற்றிக் கொண்டு வரும். தலைமுடி உதிரும் பிரச்சினையும் அவளைத் தூங்க விடாமல் தடுத்தது.
எல்லோரும் உழைத்துக் குவிக்கும் போது தான் மட்டும் குறைந்த சம்பளத்துக்கு தொழில் செய்வது பாஹிமின் மனதைப் பாடாய்ப்படுத்தியது.
எல்லோரும் பயன்படுத்துவது போன்ற உயர்ரக போனொன்று வாங்க வேண்டுமென்ற அவனது கனவு இன்னும் கனவாகவே இருக்கிறது.
எப்படித் தாங்கிக் கொள்வது? துள்ளிக் குதித்தான் ஆமிர். புலமைப் பரிசில் பரீட்சைக்காக அடுத்த வீட்டு ரஸா ஓடியோடிப் படிக்கும் போது அவன் மகனோ எந்த அக்கறையுமில்லாமலிருந்தான்.
எத்தனை பேர் ஓயாது டியூசன் கொடுத்து வசதியாக வீடு கட்டி வாழ்கிறார்கள்! இவர் மட்டும் பாடசாலையில் கற்பிப்பதோடு நிறுத்திக் கொள்கிறாரே! என புலம்பிக் கொண்ருந்தாள் நஸீரா.
இப்படி ஒவ்வொருவரும் பிரச்சினைகளில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.
அவன்
வறுமையில் வளர்ந்தவன். அறைகள் இல்லாத சிறிய வீடு அவனுடையது. அதற்குள் பெற்றோருடன் சேர்த்து பத்து ஜீவன்கள்.
நடக்கவோ ஓடவோ முடியாதவன் அவன்.
படுக்கையில் ஆண்டுக்கணக்கில் முகம் குப்புறப் படுத்துக் கிடந்தான் அவன் அவனால் அசைய முடியாது. கடிக்கும் நுளம்பைத் துரத்த முடியாது.
மற்றவர்களைப் போல ஆனந்தமாய்க் குளிக்க முடியாது.
மற்றவர்களைப் போல விதம்விதமாய் உடையணிய முடியாது.
இயற்கைத் தேவைகளைக் கூட பிறரின் உதவியோடு முகம் குப்புறப்படுத்த நிலையிலேயே நிறைவேற்ற வேண்டியிருந்தது.
உடலில் வந்த புண்களின் தாளமுடியாத வேதனை.
அவனது வயது இளைஞர்கள் திருமணம் செய்து குடும்பம் நடத்துவதை அவனும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியொரு வாழ்வு அவனுக்கு இவ்வுலகில் இல்லை என்பது நிச்சமாய்த் தெரிந்திருந்தது.
விரக்தியின் விளிம்பில் வாழ வேண்டிய அவன் இறைவனை மிகப் பெரும் கருணையாளனாய்க் கண்டான்.
கிடைத்தற்கரிய பெற்றோர்
தியாகத்தின் வடிவான உடன் பிறப்புகள்
அன்பான குடும்ப உறவுகள்
இணையம் வழியாய் கிடைத்த அன்புள்ளங்கள்
சுயமாய்க் கற்றுக் கொள்ளும் ஆற்றல்
ஊற்றாய்ப் பொங்கும் எழுத்தாற்றல்
என இறையருளைப் பட்டியலிட்டான் அவன்.
இறைவா! என் உயிர் பிரியுமுன் நிலத்தில் நெற்றி பதித்து ஒருமுறை உன்னை வணங்க வேண்டும் என மனமுருகிப் பிரார்த்தித்தான்.
இர்பான் ஓயாது சொன்னான் அல்ஹம்துலில்லாஹ் (புகழனைத்தும் இறைவனுக்கே) என்று.
-ஷாறா-
கருத்துகள்
கருத்துரையிடுக