சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து மோசடியான முறையில் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மோசடி செய்யப்படும் முறைகள்:
சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக வேலைவாய்ப்புகள் வழங்குவதாகவோ, பரிசுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதாகவோ அல்லது உங்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளதென மிரட்டியோ பொதுமக்களிடமிருந்து பணம் பறிக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
குறிப்பாக, வங்கி ஊழியர்களாக நடித்து அழைப்பை மேற்கொள்ளும் மோசடிக்காரர்கள், வாடிக்கையாளர்களின் கணக்கு விபரங்களைப் பெற்றுக்கொண்டு, "உங்கள் கணக்கிற்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களால் பணம் அனுப்பப்பட்டுள்ளது" என அச்சுறுத்துகின்றனர். பின்னர், சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தாங்கள் கூறும் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுமாறு வற்புறுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக மிரிஹானை விசேட குற்ற விசாரணைப் பிரிவிற்கும், பாதுக்கை பொலிஸ் நிலையத்திற்கும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மேலும், போலியான இணைய இணைப்புகள் (Links) மற்றும் ஸ்கேன் குறியீடுகள் (QR Codes) மூலம் பொதுமக்களின் வங்கிக் கணக்கு இலக்கங்கள், கடவுச்சொற்கள் (OTP) போன்ற இரகசியத் தகவல்களைத் திருடி மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளாக பொலிஸார் அறிவுறுத்துவது:
உத்தியோகபூர்வ கணக்குகளை உறுதிப்படுத்தல்: சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மையை அறிய Verified Badges அல்லது Official Pages உள்ளதா என சரிபார்க்கவும்
தகவல்களைப் பகிர வேண்டாம்: வங்கி விபரங்கள், தேசிய அடையாள அட்டை எண், Login விபரங்கள், OTP, கடவுச்சொல் (Password), PIN மற்றும் புகைப்படங்களை யாருக்கும் வழங்க வேண்டாம்.
சந்தேகம்: சந்தேகத்திற்கிடமான Links எவற்றையும் பயன்படுத்த வேண்டாம்.
பணம் வைப்பு: பணத்தை வைப்பிலிடும் போது பெறுநரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:
இவ்வாறான மோசடிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் அல்லது நீங்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- மிரிஹானை விசேட குற்ற விசாரணைப் பிரிவு: 011-2852556
- பொறுப்பதிகாரி (மிரிஹானை விசேட பிரிவு): 075-3994214
- பிரதிப் பணிப்பாளர் (கணினி குற்ற விசாரணைப் பிரிவு): 011-2300638
- தனிப்பட்ட உதவியாளர் (கணினி குற்ற விசாரணைப் பிரிவு): 011-2381375
- பொறுப்பதிகாரி (கணினி குற்ற விசாரணைப் பிரிவு): 011-2381058
பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுவதன் மூலம் இத்தகைய மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

