21, 22 திருத்தங்கள் மூலம் ஜனாதிபதியின் மனதை வென்று அமைச்சுப் பதவியொன்றைப் பெறுவதே விஜேதாசவின் எதிர்பார்ப்பாகும்

Rihmy Hakeem
By -
0

தற்போதைய அரசாங்கமானது, தமக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் ஆணையை புறக்கணித்து ஆட்சியை நடாத்தி செல்வதாக ஜேவிபியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பத்தரமுல்ல, பெலவத்த பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், விஜேதாச ராஜபக்ச அவர்கள் அரசியலமைப்பின் 21 மற்றும் 22 ஆவது திருத்தங்களை பாராளுமன்ற உறுப்பினரின் தனிநபர் பிரேரணையாக கொண்டு வர இருக்கிறார். அது யாருடைய தேவைக்காக என்று தேடிப்பார்க்க வேண்டும்.
21 ஆவது திருத்தம் மூலம் அவர்கள் எதிர்பார்ப்பது பல்வேறு தரப்பினரின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்துவதாகும். தற்போது அது 5% ஆக இருக்கிறது. (திருத்தம் மூலம் 12.5% ஆகும்). இது மோசமான விடயமாகும்.

22 ஆவது திருத்தம் மூலம் அவர்கள் எதிர்பார்ப்பது, அரசியலமைப்பு சபைக்கு இருக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு பெற்றுக் கொடுப்பதாகும்.

நிறுவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பழைய நிலைக்கு செல்ல முயற்சிப்பது சந்தர்ப்பவாத அரசியலாகும்.

இதன் மூலம் ஜனாதிபதியின் மனதை வென்று அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக் கொள்வதே விஜேதாசவின் எதிர்பார்ப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)