“முஸ்லிம்கள் ஒருபோதும் இந்நாட்டிற்கு துரோகம் செய்தது கிடையாது” - கலாநிதி ரோசன் ஷா ஜாபிர்

Rihmy Hakeem
By -
0

கலாநிதி மொஹொமட் ரோசன் ஷா ஜபீர் அவர்கள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொட்டகலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியை கம்பளை சாஹிரா கல்லூரியில் கற்றுள்ளார். வளங்கள் மாற்றீடு முகாமைத்துவம் (Supply Change Management)  தொடர்பில் டிப்ளோமா பட்டத்தை பூர்த்தி செய்துள்ள இவர், பெருந்தோட்டப் பகுதியில் மூடப்பட்டிருக்கும் தேயிலைத் தொழிற்சாலைகள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் கலாநிதிப் பட்டத்தைப் (Doctor of Business) பெற்றுள்ளார். முஸ்லிம் சமூகத்தின் வர்த்தகத்துறை சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட அனுபவம் உள்ள ரோசன் ஷா ஜபீர் அவர்கள் மீள்பார்வை பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

நீங்கள் பெற்றுள்ள கலாநிதிப் பட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுங்கள்
பெருந்தோட்டப் பகுதியை சுற்றிப் பார்க்கச் செல்கின்ற போது அதிகமான தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. ஒரு காலகட்டத்தில் அரசாங்கம் நட்டம் ஏற்படுகின்றபோது தேயிலைத் தொழிற்சாலைகளை தனியார் துறைக்கு வழங்கியது. தனியார் துறை அவற்றைப் பொறுப்பேற்று பெருந்தோட்டப் பயிர் உற்பத்திக்குப் பயன்படுத்தியது. இவ்வாறு 20 அல்லது 30 தொழில்சாலைகளை பெற்று பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையெனப் பெயரிட்டது.

ஆனால் தனியார் துறையினராலும் இவற்றை நடத்திச் செல்ல முடியாமல் போனது. எனவே பூட்டுப் போடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை சிறந்த முறையில் நடாத்திச் செல்ல முடியும் என்ற சிந்தனை என்னுள் உதித்தது. தேயிலை உற்பத்தித் தொழிற்சாலையைப் பொறுப்பேற்றிருந்த நிறுவனமொன்றை நாடி ஒரு திட்டத்தைச் சமர்ப்பித்து,  ஒரு தொழிற்சாலையை எனக்கு வழங்குங்கள் என்றதும், எனது திட்டத்தைப் பொறுப்பேற்ற அவர்கள், அதனை ஆராய்ந்து பார்த்து விட்டு 8 மாதங்களின் பின் எனக்கு ஒரு தொழிற்சாலையை வழங்கினார்கள்.

பெருந்தோட்டப் பகுதியில் இன்று அநேகமான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவை எமது நாட்டின் சொத்துக்களாகும். இன்றைய மதிப்பில் ஒரு தொழிற்சாலை 10 கோடி ரூபாய் தேறும். புதிதாக ஒரு தொழிற்சாலையை நிர்மாணித்தால் அதற்கு அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு 2 கோடிக்கு மேல் செலவாகும். இந்நிலையில் எனக்கு வழங்கப்பட்ட தொழிற்சாலையைப் பொறுப்பெடுத்து உள்ளே நுழைந்து பார்த்தால் அங்கு நிறைய பொருட்கள் உடைந்து காணப்பட்டன. இயந்திரங்கள் தவிர்ந்த திருத்த  வேலைகளுக்கு மாத்திரம் 9 மில்லியன் ரூபா செலவானது. 20 வருடங்களாக அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கப்படாதிருந்ததால் தற்போது இந்தத் தேயிலைத் தொழிற்சாலைக்கு புதிதாக அனுமதிப் பத்திரம் பெற வேண்டியிருந்தது. அதற்கு நான் விண்ணப்பித்தேன். குறுகிய காலத்தில் எனக்கு அனுமதிப் பத்திரமும் கிடைத்தது.

இதே சிந்தனையில் பெருந் தோட்டப் பகுதியில் தொழிற்சாலைகள் ஏன் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன? அவற்றை திறப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? மூடப்பட்டிருக்கும்போது இதன் பெறுமதி என்ன? திறந்தால் இதன் பெறுமதி எப்படியிருக்கும்? இந்தத் தொழிற்சாலைகளில் எவ்வளவு தேயிலையை உற்பத்தி செய்யலாம்? ஏற்றுமதிச் செலவுகள் எப்படியிருக்கும்? எத்தனை பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கலாம்? வருமான வரி எவ்வளவு இருக்கும்? இதனால் நாட்டுக்கு எத்தகைய நலன் கிட்டும்? என்கின்ற பல்வேறு வினாக்களை எனது திட்டத்தில் சமர்ப்பித்தேன். அத்தோடு மூடியிருக்கும் தேயிலைத் தொழிற்சாலைகளை மீள ஆரம்பித்துச் செய்வதில் ஆர்வமுள்ள சிலரையும் அறிமுகப்படுத்தி வைத்தேன். இதனைத் தொடர்ந்து அவர்கள் தம்வசமிருந்த தொழிற்சாலைகளை முயற்சியாளர்களுக்கு வழங்க ஆரம்பித்தார்கள்.

என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட பெருந்தோட்டத் துறையினர் நீங்கள் நல்லதொரு பணியைச் செய்திருக்கிறீர்கள். இதற்குப் பரிகாரமாக உங்களைப் போற்றி ஒரு பரிசை வழங்க வேண்டும் என்றனர். பின்னர் என்னை பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அமைச்சுக்கு அழைத்தார்கள். சில நேர்காணல்களை வைத்தார்கள். தொடர்ந்து என்னை வர்த்தக அரங்குக்கு சிபாரிசு செய்தார்கள். Malaysia Sri Lanka Chamber of Commerce மற்றும் South India Chamber of Commerce ஆகியன இணைந்து எனக்கு வர்த்தகத்துக்கான கலாநிதிப் பட்டத்தை (Honorary Doctor of Business) வழங்கியது. இலங்கையில் 10 பேருக்கு மாத்திரமே இப்பட்டம் வழங்கப்பட்டது. அதில் நானும் ஒருவன் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைத் துறையில் இலங்கை தற்போது எந்த நிலையில் உள்ளது?
கடந்த 18 மாதங்களாக சந்தையில் தேயிலையின் பெறுமதி குறைந்து கொண்டே வந்துள்ளது. நாமும் சில சமயங்களில் நட்டத்திலேயே தேயிலையைச் சந்தைப்படுத்தினோம். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதனைத் தொடர்ந்து சில நாட்களில் தேயிலையின் விலை 100 ரூபாவால் அதிகரித்தது. தற்போது தேயிலையின் விலை அதிகரித்துச் செல்கின்றது. எனவே ஒரு மாற்றத்தைக் காண முடியுமாக இருக்கிறது. முன்பு தேயிலையை உற்பத்தி செய்து அனுப்பாமலும் வைத்திருந்தோம். ஆனால் தற்போது இன்னுமின்னும் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகரித்துள்ளது.

இலங்கைத் தேயிலை அதிகமாக சந்தைப்படுத்தப்படுகின்ற இடங்களை எவை?
இலங்கைத் தேயிலையை மத்திய கிழக்கு நாடுகளே அதிகம் கொள்வனவு செய்கின்றன. அந்நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யா உள்ளது. ஒரு சில ஐரோப்பிய நாடுகளும் எமது தேயிலையை கொள்வனவு செய்கின்றன. அரேபியர்களே இலங்கைத் தேயிலையை தேடிப் பயன்படுத்துகின்றனர். இலங்கைத் தேயிலைக்கு ஒருபோதும் விலை அதிகரிக்கவில்லை. வெளிநாட்டவர்கள் தேயிலையை டொலர்களிலேயே கொள்வனவு செய்கின்றனர். அன்று டொலரில் தான் வாங்கினார்கள். இன்றும் அப்படித்தான்.

150 வருடங்களுக்கு முன்னர் தேயிலை உற்பத்தி செய்யப்பட்ட போது எந்த விலையில் வாங்கினார்களோ அதே அமைப்பில் தான் இன்றும் கொள்வனவு செய்கிறார்கள். ரூபாவின் மதிப்பு குறைந்திருப்பது மாத்திரமே நிகழ்ந்துள்ளது. ஒரு தடவை இவ்விடயத்தை அமைச்சிலும் கதைத்தேன். ஒரு நாளும் எமது தேயிலையின் விலை கூடியதில்லை. வெளிநாட்டவர்கள் அதே டொலரில் தான் இன்னும் வாங்குகிறார்கள். நாங்கள்தான் ரூபாவின் மதிப்பை குறைத்திருக்கின்றோம். டொலர் அடிப்படையில் பார்த்தால் தேயிலையின் சந்தைப் பெறுமதி அதிகரித்ததே இல்லை. இதுவொரு கவலையான விடயமாகும்.

தற்போதைய காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலை உற்பத்தி எவ்வாறு பங்களிப்புச் செய்கிறது?
நாம் படிக்கின்ற காலத்திலிருந்து இலங்கையின் பிரதான வருமானமாக தேயிலை காணப்பட்டது. ஆனால் தற்போது தேயிலை உற்பத்தி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. உற்பத்திப் பொருளை அனுப்பி பணம் பெறுதல் என்பது இலகுவான விடயமல்ல. இலங்கையிலிருந்து ஏதாவதொரு பொருளை வெளிநாட்டிற்கு அனுப்பி பணத்தைப் பெறுவதாக இருந்தால், நாம் பலமாக இருக்கின்றோம் என்றே அர்த்தம். உதாரணமாக, இன்று என்னுடைய வீட்டில் பணம் இருந்தால் நான் தான் பலமானவனாகக் காணப்படுவேன். அதுபோல் உங்களது வீட்டிற்கு நான் வந்தால் நீங்கள் பலமானவர். நான் பலவீனமானவன். இதுபோன்று எமது நாட்டை ஒப்பிட்டுப் பார்த்தால் எப்பொழுதும் இங்கிருந்து ஒரு பொருளை வெளிநாட்டுக்கு அனுப்பி பணம் பெற்றால் நாம் பலமானவர்கள் தான். பணம் புலக்கத்தில் இருந்தால் எல்லோருடைய கைகளிலும் பணம் இருக்கும்.

புதிதாக வர்த்தகத் துறையில் கால்பதிக்க நினைக்கின்ற இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?
முயற்சியையும் நம்பிக்கையையும் வைக்குமாறு நான் இளைஞர்களுக்கு கூறுகின்றேன். நாம் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் சமகாலத்தில் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு என்னென்ன கருவிகள் உள்ளதோ அவற்றையெல்லாம் பயன்படுத்த வேண்டும். அவையொன்றும் ஹராமானவையல்ல. Marketing Tactics என்பது இதைத்தான். அல்லாஹ் எனக்குத் தருவான் என்று இவ்விடத்தில் அமர்ந்துகொண்டிருந்தால் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. ஒருவன் முகநூல், வாட்சப்பில் ஒரு பொருளை விளம்பரம் செய்து உலக அளவில் பிரபல்யம் அடைகின்றான். இதன் நலவை  அவனே அடைகின்றான். சட்ட ரீதியான அனைத்து வழிமுறைகளையும் நாம் கையாள வேண்டும்.

அதேநேரம் நாம் அல்லாஹ் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். வெற்றி கிடைத்தாலும் நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். தோல்வியடைந்தாலும் அல்லாஹ்விடத்தில் பரிந்துரைக்க வேண்டும். எமது இலக்கை அடையும் வரை நாம் பின்வாங்கக் கூடாது. இஸ்லாத்தில் பணி ஓய்வுக் கொள்கை கிடையாது. இஸ்லாத்தில் வியாபாரம் என்று கூறி வரையறைகளும் கிடையாது. இஸ்லாம் உழைக்குமாறே கூறுகிறது. எவ்வளவு வேண்டுமானாலும் உழையுங்கள். ஸக்காத்தை வழங்குங்கள். நீங்கள் இன் னும் சிறந்த முஸ்லிமாக இருந்தால் ஸதகா கொடுத்துவிட்டு மூன்றில் ஒரு பங்கை சுவனத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். ஒரு நாளும் இதை மறக்கக் கூடாது.

தொழுகையையும் ஸக்காத்தையும் சேர்த்துப் பேசுகின்ற இஸ்லாம் தொழுது விட்டு வந்தால் ஸக்காத்தை வழங்கத் தயாராகுங்கள் எனக் கூறுகிறது. ஸக்காத்தை எப்படி வழங்குவது? ஒரு ஏழையாக இருந்தால் ஸக்காத் கொடுக்க முடியுமா? இஸ்லாம் மறைமுகமாக உழைக்குமாறு கூறுகின்றது.

ஸதகதுல் ஜாரியாவைக் கூட பணமின்றி செய்ய முடியாது. நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்றபோது அங்குள்ள மக்கள் இரண்டு வீடுகள் இருந்தால் ஒரு வீட்டைக் கொடுப்பார்கள். இப்படித்தான் பொருளாதார ரீதியான உதவியிருந்தது. இப்படியான பொருளாதார உதவி இல்லாவிட்டால் நபியவர்கள் அங்கு சென்றிருக்க மாட்டார்கள். நான் இளைஞர்களுக்கு கூறுவதென்றால் அவர்களுக்கென்று ஒரு அடைவு இருக்கும். அந்த அடைவை அடைந்துகொள்ளும் வரை முயற்சி செய்ய வேண்டும்.

இரண்டு விடயங்களை அடிப்படையாகச் செய்ய வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். அல்லாஹ் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். வெற்றி பெற்றால் அல்லாஹ்வைப் புகழ வேண்டும். தோற்றால் அல்லாஹ்வைப் பணிந்து நடக்க வேண்டும். ஆனால் பின்னடையக் கூடாது. முன்னேறிச் செல்ல வேண்டும். பல தடங்கல் வரும். அவற்றைப் படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் பொருளாதார நிலைமை இன்று எப்படிக் காணப்படுகின்றது. அண்மைக் காலமாக முஸ்லிம்களின் பொருளாதாரம் ஒரு சரிவு நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பது தெரிகிறது. இதனை நீங்கள் எப்படிக் காண்கிறீர்கள்?
ஒரு சரிவுநிலை காணப்படுகிறது என்பது உண்மை. அண்மைக் காலத்தில் நடந்த ஒரு சில அசம்பாவிதங்களே அதற்குக் காரணம். இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களின் வரலாறு 1200 வருடங்களையும் விட அதிகம். ஒரு நாளும் இந்நாட்டிற்கு துரோகம் செய்யாத மக்கள் என்றால் முஸ்லிம்களைத் தவிர வேறு யாருமில்லை. ஆனால் அண்மையில் மதுமாதவ அரவிந்த என்கின்ற பாடகர் ஒரு நேர்காணலில் நாம் மாத்திரம் தான் இலங்கை மக்களுக்கு குண்டை சுமந்து தாக்குதல் நடத்தவில்லை. தமிழர்களும், முஸ்லிம்களும் தாக்கினார்கள். நாம் மாத்திரமே தாக்கவில்லை என்றார்.

இது மிகவும் ஆத்திரமூட்டக்கூடிய கருத்தாகும். இலங்கையின் பொருளாதாரத்தை எடுத்துப் பாருங்கள். வரலாற்றில் பொருட்களை நாம் நல்ல விலை கொடுத்தே வாங்கியுள்ளோம். சர்வதேச சந்தைக்கு நல்ல விலைக்கே விற்பனை செய்துள்ளோம். சர்வதேச சந்தைக்கு ஒருவர் செல்வதாக இருந்தால் இரண்டு விடயங்கள் அங்கு நடைபெறுகிறது. ஒன்று சர்வதேச சந்தையை அவர் காட்டிக் கொடுக்கின்றார். மற்றையது அந்த நாட்டுடன் நல்லுறவைப் பேணுகிறார். இலங்கைப் பொருளாதாரத்தைப் பற்றி பேசும்போது நாம் அங்கிருந்து தான் வர வேண்டும். எமக்குத் தனியாக சம்பாதித்து ஓடி விட முடியாது. மன்னர்களோடு இருந்து நாட்டின் பொருளா தாரத்தை முன்னேற்றியுள்ளோம். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக வேண்டி பாடுபட்டவர்கள் தான் முஸ்லிம்கள்.

ஆனால் அண்மைக்காலத்தில் அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வெறுப்புச் பிரச்சாரத்தினால் பெரும்பான்மையினருக்கு மத்தியில் உள்ள சிறுபான்மையினரின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது ஓரளவுக்குப் பரவாயில்லை. பெரும்பான்மையினர் குறுகிய சிந்தனையிலேயே உள்ளார்கள். கொக்காகோலா, பெப்சி போன்ற சர்வதேச உற்பத்திகளுக்கு அதிக பணம் செலவழிக்கிறார்கள். ஆனால் இங்குள்ள முஹம்மட், அஹம்மடின் புடவைக் கடையை பகிஷ்கரிக்கிறார்கள். இது பற்றிக் கதைப்பதென் றால் அது மிகப்பெரும் பகுதியாகும்.

எமது பொருளாதார பாதிப்புக்கு எமது செயற்பாடுகளும் காரணமாக உள்ளது. எமது சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில வியாபாரிகளது தில்லுமுல்லு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இஸ்லாத்தை நடைமுறையில் சரியாகச்   சொல்லிக் கொடுக்க வேண்டும். வியாபாரம் என்பது சமுத்திரம். அதில் போக முடியும். ஆனால் சரியான பாதையில் செல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் வியாபாரி என்று கூறிக்கொண்டு நாங்கள் வியாபாரம் செய்வது எப்படி? ஒரு கடையை நடத்திச் செல்கின்றோம். ஒரு தேநீர் கடையை செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நபி (ஸல்) அவர்கள் தேநீர் கடையொன்றையும் பெட்டிக் கடையாக வைத்திருந்தார். எமது சமூகம் வியாபார சமூகம் என்கிறோம். ஆனால் வியாபாரத்தின் அடிப்படைகள் வித்தியாசமானவை. மூலப்பொருட்களை நாமே தயாரித்து உற்பத்திப் பொருளையும் நாமே தயாரித்து அதைச் சந்தைப்படுத்தி சந்தையில் வெற்றிபெறுபவரே உண்மையான வியாபாரி.

நாங்கள் வியாபாரிகளல்ல. நடுத்தரத்திலுள்ளவர்கள். சாரமொன்றை ஒருவர் உற்பத்திசெய்கின்றார். நாம் அதை வாங்கி இன்னுமொருவருக்கு விற்பனை செய்கின்றோம். உற்பத்தியாளன் எமக்குத் தராவிட்டால் அல்லது நுகர்வோன் எம்மிடமிருந்து அந்தப் பொருளை வாங்காவிட்டால் எமது வியாபாரம் அத்தோடு முடிவடைந்துவிடும். வியாபாரம் என்பது சர்வதேச வர்த்தகம் என்பதை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மிகப்பெரும் வியாபாரியாவார். அவரது அடிப்படை அல்அமீன், அஸ்ஸாதிக் ஆகும்.

இலங்கையின் பொருளாதாரம் ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கு மாறிச் செல்கின்றது. ஆரம்பத்தில் சிங்களவர்கள் விவசாயம் செய்தார்கள். முஸ்லிம்கள் வியாபாரம் செய்தார்கள். தமிழர்கள் கல்வியில் மேலோங்கிக் காணப்பட்டார்கள். ஆனால் தற்போது விவசாயம் வெற்றியளிக்காத காரணத்தால் சிங்களவர்கள் வேறு வேறு துறைகளை நாடுகின்றார்கள். சிங்களவர்கள் முஸ்லிம்களது வியாபாரத்திலும் உள்நுழையப் பார்க்கின்ற போது மோதல் வெடிக்கின்றது. இந்நிலைமை எதிர்காலத்தில் இன்னுமின்னும் எப்படியான நிலைமைகளை ஏற்படுத்தும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்.
இது மிகப்பெரும் பிரச்சினையாகும். தோட்டத் தமிழர்களை எடுத்துப் பார்த்தாலும் நான் நினைக்கவில்லை அவர்கள் இதற்குப் பின்னர் தோட்டத்தில் வேலை செய்ய ஆர்வம் காட்டுவார்கள் என்று. கடந்த ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து மீண்டும் தமிழ் மக்களை கொண்டு வரப் பார்த்த செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஏனென்றால் தோட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்கள். கொழும்பிலும் சிலர் வேலைபார்க்கின்றனர். இது போன்று தான் சிங்களவர்களிலும் 70 வீத மானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது யாழ்ப்பாண தமிழர்கள் தான் ஒவ்வொரு துறையிலும் பெரிய வர்களாக இருந்தார்கள்.

இதேபோன்றதொரு கட்டத்தை அடையப் போய் தான் தமிழ் மக்களுடன் பிரச்சினைப்பட வேண்டியேற்பட்டது. அது படிப்பு சம்பந்தப்பட்டது. தற்பொழுது வியாபாரப் போட்டி. சிங்களவர்கள் பார்க்கிறார்கள் எல்லா வியாபாரத்தையும் நாங்கள் தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று. இந்த நாட்டில் உண்மையில் கிறிஸ்தவர்களே வியாபாரிகளாவர். எந்தவொரு கம்பனியை எடுத்துப் பார்த்தாலும் கிறிஸ்தவர்கள் இருப்பார்கள். இந்நிலையை நாம் அடைய வேண்டும். இன்று மலையகத் தமிழர்கள் எங்களை விட முன்னோக்கிப் போயுள்ளார்கள். எமது வியாபாரம் பெட்டிக்கடைக்குள் தான் உள்ளது. படிப்பை யாராலும் களவெடுக்க முடியாது. அதை யாராலும் நிறுத்த முடியாது. நாம் மீண்டும் படிப்பின் பக்கம் கவனம் செலுத்த வேண் டும். அப்போது மீண்டும் எம்மால் நாடாள முடியும்.

மீள்பார்வை - 28.12.2019

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)