உலகப் பொருளாதாரம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்வதாக ரணில் விக்கிரமசிங்க இறுதியாகப் பிரதமராக இருந்த வேளையில் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருந்தார். உலக நகர்வு இப்பொழுது கிழக்கை நோக்கிப் படையெடுப்பதனை சீனாவின் அசுர வளர்ச்சியையும் இந்தியாவின் போட்டியையும் வைத்து அவதானிக்க முடிகிறது.
ஆசிய பசுபிக் பிராந்தியங்களை உள்ளடக்கிய உலகின் கிழக்குப் பகுதியிலேயே உலக சனத்தொகையில் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். மொத்த முஸ்லிம் சனத்தொகையில் 62 வீதமானவர்கள் இங்கு வாழ்கிறார்கள். உலகில் அதிக முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட இந்தோனேஷியா இந்தப் பிராந்தியத்தில் தான் அமைந்திருக்கின்றது. உலகின் இரண்டாவது அதிக முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இங்கு 20 கோடி முஸ்லிம்கள் சிறுபான்மையினமாக வாழ்கின்றனர். 2060 ஆகும் போது உலக சனத்தொகையில் 11.1 வீத முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வார்கள் என பியூ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்திருக்கிறது. இந்த வகையில் உலகில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இந்தோனேஷியாவைத் தாண்டி இந்தியாவே முதலிடம் வகிக்கப் போகிறது என பியூ ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகமாக காஷ்மீரிலேயே வாழ்கிறார்கள். காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர். இந்தச் சனத்தொகைக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் வகையிலேயே மோடி அரசு 370 சட்டத்தை ரத்து செய்தது. 370 சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த மாநிலத்துக்கு கணிசமான தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்தச் சட்டத்தை மோடி அரசு ரத்து செய்ததன் பின்னர், இந்தியர்கள் எவரும் இங்கு வந்து காணி வாங்கிக் குடியேறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் பெரும்பான்மை காஷ்மீரின் சனத்தொகைக் கட்டமைப்பு மாற்றப்படுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அடுத்த மாநிலமாக அஸாம் விளங்குகிறது. 32 மில்லியன் அஸாம் சனத்தொகையில் மூன்றில் ஒரு வீதம் வாழும் முஸ்லிம்கள் அங்கு இரண்டாவது பெரும்பான்மையாக வாழ்கின்றனர். பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்து சென்றதற்கு முந்திய நாளான 1971 மார்ச் 24 க்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்ததாக ஆதாரத்தை முன்வைப்பவர்களுக்கு மட்டுமே, ஆட்களைப் பதிவு செய்யும் தேசிய குடியுரிமைப் பட்டியலில் (NRC) பெயர் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வாழும் 1.9 மில்லியன் மக்கள் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இந்த நடைமுறையை நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப் போவதாக பிஜேபி அப்பொழுது முதல் அடிக்கடி கூறி வந்தது.
இந்த வரிசையிலேயே இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) வெளிவந்திருக்கிறது. அண்டையிலுள்ள முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டதால் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயினர்கள், பார்சியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் இந்தியக் குடிகளாக இந்தச் சட்டம் அங்கீகரிக்கிறது. ஆனால் முஸ்லிம்களை இந்தச் சட்டம் தடை செய்கிறது. இதன் மூலம் மேலும் இரண்டு மில்லியன் முஸ்லிம்கள் இந்திய குடியுரிமையை இழந்து நாடற்றவர்களாக மாறுகிறார்கள். இந்தச் சட்டத்தின் மூலம் பங்களாதேஷிலிருந்து வந்துள்ள பெருவாரியான இந்துக்கள் இந்தியக் குடியுரிமையைப் பெறவிருக்கிறார்கள். இந்தியாவின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் இந்துக்கள் பெருமளவில் வந்து குடியேறுவதற்கு இந்தச் சட்டம் வாய்ப்பளித்துள்ளது. இதனால் இந்தியாவின் சனத் தொகைக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
உலகின் கிழக்குப் பிராந்தியம் அதிகமாக சமய நம்பிக்கைகளைக் கொண்டது. அதனால் இங்கு மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவது அரசியல்வாதிகளுக்கு தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இலகுவானதாக இருக்கிறது. தனது அதிகார ஆசையைத் தீர்த்துக் கொள்ள இனவாதத்தைப் பயன்படுத்துவது கீழைத்தேச அரசியலின் இயல்பாகியிருக்கிறது. இதற்கென உலக மரபுகளையும் நியதிகளையும் கூட அப்பட்டமாக மீறுவது வழக்கமாகப் போயிருக்கிறது. இதனால் கீழைத்தேச நாடுகளின் அரசியல் நகர்வுகளைப் பற்றி ஏனைய நாடுகள் அவதானமாய் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் பக்கத்து நாட்டின் அதிர்வுகள் சுனாமி அலைபோல ஏனைய இடங்களிலும் தாக்கம் செலுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது.
மோடி அரசு ஆட்சிக்கு வரும் போது தனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பாகுபாடும் காட்டப்பட மாட்டாது என்று பல தடவைகள் கூறப்பட்டது. ஆனாலும் அரசியல் யாப்பில் இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று குறித்துரைத்திருப்பதையும் மீறி தற்போது இந்திய முஸ்லிம்கள் மீது மிக மோசமாக பாரபட்சம் காட்டப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் அமைப்பு, இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் சிவில் உரிமைகள், இனம், மதம் சார்ந்த உரிமைகள் எல்லாம் வரையறுக்கப்பட்டு மனித உரிமைகள் பிரகடனம் தயாரிக்கப்பட்ட வேளையிலேயே சர்வதேச பிரகடனங்களின் நலச் செழுமைகளையெல்லாம் உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. வாஜ்பேயி தலைமையிலான பாஜக முதலில் ஆட்சிக்கு வந்த 1997 ஆம் ஆண்டிலேயே இந்த அரசியல் யாப்பில் கைவைக்கத் துவங்கியது. அப்போது வாஜ்பேயிக்கு வழங்கப்பட்ட வரவேற்பு வைபமொன்றில் அவர் உரையாற்றும் போது, இன்று நமக்கு பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை கிடையாது. ஆனால் ஒரு காலத்தில் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவோம். அப்போது நாம் நமது கனவு இந்தியாவை உருவாக்குவோம் என்று முழங்கினார். இனவாத அரசாங்கமொன்றுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்குவதன் விளைவை இந்தியா இப்பொழுது சொல்லித் தருகிறது.
2014 தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனாலும் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வென்றிருந்தது. தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, உலகின் எந்த நாடுகளில் இருந்தும் வருகின்ற யூதர்களுக்கு இஸ்ரேலில் குடியுரிமை வழங்கப்படும் என்கின்ற இஸ்ரேலின் “அலியாஹ்“ கொள்கையை தத்தெடுத்து இந்தியா இப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் அரசியல் சட்ட அடிப்படைகளை பெரும்பான்மையின் அடிப்படையில் மாற்றிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதனால் வேறு வகைகளில் தமது அரசியல் கொள்கைகளை பாஜக நிறைவேற்றி வருகிறது. இஸ்ரேல் பாணியிலான இதுபோன்ற நடவடிக்கைகள் கிழக்குலகில் அதிகரித்து வருகின்றன. மோடி அரசின் இந்த நிலைப்பாடு, இனவாத அரசுகள் தமது இனவாதத்தைப் பிரயோகிப்பதில் அரசியல் யாப்பு போன்ற ஒழுக்கக் கோவைகளுக்கெல்லாம் கட்டுப்படுதில்லை என்பதைப் புலப்படுத்துகின்றன.
இந்த நடவடிக்கைகள் மூலமாக இந்தியக் குடிமக்களில் இருந்து முஸ்லிம்கள் வேறாகப் பிரிக்கப்பட்டு வருகின்றனர் என அ.மார்க்ஸ் எழுதியுள்ள கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். இது பிராந்தியத்தில் மியன்மார் செய்தது போன்ற மற்றுமொரு இனச்சுத்திகரிப்புக்கான அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. அஸாமிலும் காஷ்மீரிலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் இனச் சுத்திகரிப்புக்கு முந்திய கட்டமாகும் என ஜெனோசைட் (இனச்சுத்திகரிப்பு) வொட்ச் அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி க்ரகெரி ஸ்டன்டன், காஷ்மீர் மற்றும் என்ஆர்சி சட்டங்கள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸில் அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் போது தெரிவித்தார். இனச் சுத்திகரிப்புக்கான தயாரிப்புக்களே இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. அதன் அடுத்த கட்டம் இனச்சுத்திகரிப்புத்தான் என அங்கு தெரிவித்த அவர், இனச்சுத்திகரிப்பின் 10 கட்டங்களை தெளிவுபடுத்தினார்.
நாங்கள், அவர்கள் (us and them) என வேறு பிரித்தல்
வெளிநாட்டவர் அல்லது வந்தேறு குடிகள் என அடையாளப்படுத்தல்
பாகுபாடு காட்டுதல் – குடியுரிமை பெறுவதற்கான தகுதியற்றவர்களாக்குதல். பிரஜைகளுக்கான மனித உரிமை, சிவில் உரிமைகளை சட்டரீதியாகவே இல்லாமல் செய்தல்
மனித நேயத்தை மறுத்தல் – இலக்கு வைக்கப்பட்டவர்களை இழிவானவர்களாகக் கருதுதல். அவர்களுக்கு பயங்கரவாதி போன்ற பெயர்களை இடுதல்
இனச் சுத்திகரிப்பைச் செய்வதற்கான நிறுவனமொன்றைத் தயார்படுத்தல். அஸாமிலும் காஷ்மீரிலும் குடிசன மதி்ப்பீட்டாளர்கள் இந்தப் பாத்திரத்தை ஏற்றனர்.
பிரச்சாரங்களின் மூலம் துருவமயப்படுத்தல்
தயாராதல்
துன்புறுத்தல். அஸாமிலும் காஷ்மீரிலும் நடப்பதைப் போன்று.
அடியோடு அழித்தல் (Extermination)– இது தான் இனச்சுத்திகரிப்பு எனப்படுகிறது
மறுத்தல்
இவ்வகையானதொரு இனச்சுத்திகரிப்பையே மியன்மார் 736,000 முஸ்லிம்கள் மீது நடத்தியது. இப்பொழுது இந்தியா இனச் சுத்திகரிப்பின் இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. இதனால் கீழைத்தேசத்தில் இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாக்கும் மனிதாபிமானமற்ற பக்கத்திலுள்ள நாடுகளில் வாழும் சிறுபான்மையினர் தாம் எந்தக் கட்டத்தில் இருக்கிறோம் என்கின்ற பாடத்தை படித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
மீள்பார்வை - 28.12.2019

