இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தாம் ஏற்கெனவே அறிவித்தபடி தமது சமூக வலைத் தளக் கணக்குகளை சர்வதேசப் பெண்கள் தினமான இன்று 7 பெண் சாதனையாளர்களிடம் ஒப்படைத்தார்.
பிரதமர் நரேந்திர மோதி இன்று காலை தமது சமூக வலைத் தளக் கணக்குகளில் இருந்து லாக் அவுட் செய்வதாகவும், 7 பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை தமது சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பகிரப் போவதாகவும் டிவிட்டரில் அறிவித்தார்.
"சர்வதேசப் பெண்கள் தின வாழ்த்துகள், பெண்களின் ஊக்கத்தையும், சாதனைகளையும் வணங்குகிறேன்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
"இந்தியாவில் தலைசிறந்த பெண் சாதனையாளர்கள் உள்ளனர். பல துறைகளில் இவர்கள் பெரும் சாதனைகள் படைத்துள்ளனர். அவர்களது போராட்டங்களும், விருப்பார்வங்களும் பல லட்சம் பேரை ஊக்குவிக்கின்றன. இத்தகைய பெண்களின் சாதனைகளை தொடர்ந்து கொண்டாடுவோம், அவர்களிடம் இருந்து தொடர்ந்து கற்போம்" என்றும் பிரதமர் ட்வீட் செய்திருந்தார்.
அதன் பிறகு #SheInspiresUs மற்றும் இந்தக் கணக்குகளைக் கையாளும் பெண்களின் பெயர் தாங்கிய ஹேஷ்டேக்குகளுடன் அந்தப் பெண்கள் பதிவிடும் செய்திகள் நரேந்திர மோதியின் சமூக ஊடகக் கணக்குகளில் இருந்து வெளியாகின்றன.
கடந்த திங்கள் கிழமை தமது சமூக வலைத்தளக் கணக்குகளில் இருந்து வெளியேறுவது பற்றி யோசிப்பதாக அதிரடியாக அறிவித்தார் பிரதமர். ஆனால், மேற்கொண்டு விவரம் தெரிவிக்கவில்லை. ஒரு நாள் கழித்துதான், சர்வதேச பெண்கள் தினத்தில் தமது கணக்குகளை சாதனைப் பெண்கள் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கை பற்றி பதிவிட வசதியாக தாம் தமது கணக்குகளில் இருந்து வெளியேறுகிற அறிவிப்பை வெளியிட்டார்.
(பிபிசி)

