பாலி்ன சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல அது சமூகநீதி.இன்று சர்வதேச மகளிர் தினம் இது கொண்டாட்டமாக கட்டமைக்கப்படுகிறது.ஆனால் இது கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்ட நாள் அல்ல ,ஒரு போராட்டத்திற்கான புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள் டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் 1910ம் ஆண்டு உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் கிளாரா ஜெட்கின் ,அனைத்து நாட்டில் உள்ள பெண்களும் சேர்ந்து தனி சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தினைக் கடைபிடிக்க வேண்டும்,பெண்கள் சந்திக்கும் அனைத்து சவால்களையும் இணைத்து வாக்குரிமை கோரிக்கையும் சேர்த்து விவாதிக்க வேண்டும்,சமஉரிமை கேட்டு போராட வேண்டும் என்ற தீர்மானத்தை வலியுறுத்தினார்.
இதுவே மகளிர் தினம் உருவாவதற்கான அடிப்படை எனினும் அத்தீர்மானத்தில் இந்த நாள் என்று குறிப்பிடவில்லை.அதன் பல நாடுகளிலும் ,பல வேறுபட்ட தேதிகளில் பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.ரஷ்யப் பெண்கள் முதல் உலகப் போர் நேரத்தில் ,அமைதியையும்,சுவரொட்டியையும் வலியுறுத்தி போராட்டம் தொடங்கிய மார்ச் 8ம் திகதி பிறகு சீராக சர்வதேசப் பெண்கள் தினமாக அங்கீகரிக்கப்படத் தொடங்கியது.
1911ம் ஆண்டில் இருந்தே பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு பாலின சமத்துவம் குறித்து பேசி வந்தாலும் இன்னும் ஒவ்வொரு நாளும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறாள்.ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு பெண் வார்த்தை வன்முறையினால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறாள்.பணியிடத்தில் சம உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறாள்,ஒரு ஆண் இன்னொரு ஆணை வசைபாடும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதோ ஒரு பெண் அவமானப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறாள்.
நவீன உலகத்தில் பல துறைகளிலும் பெண்கள் வளர்ந்து வந்தாலும் அவர்களுக்கான அச்சுறுத்தாலும் அதிகமாகியிருக்கின்றன.நவீன உலகில் முகநூல் ,ட்விட்டர் வாயிலாக பெண்கள் மீதும் ,பெண்கள் உடல் மீது வீசப்படும் வன்மம் அதிகம் அலுவலங்களில் வெற்றி பெற்ற பெண்ணை சாய்ப்பதற்கு கூட அவளின் உடலின் மீதான தாக்குதல் தான் முதன்மையாக இருக்கிறது.சமூக ஊடகங்களை பெண்கள் விழிப்புணர்வோடு கையாள வேண்டும்.குடும்ப விஷயங்கள் எல்லாவற்றையும் பொது வெளியில் வைக்கக்கூடாது.முழுமையாக ஒருவரை தெரியாமல் அவரிடம் உரையாடலை நிகழ்த்தக் கூடாது.
பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களின் பட்டியலை சுகாதார தாபனம் வெளியிட்டது.அதில் கர்ப்பப்பை புற்றுநோய்,மார்பக புற்றுநோய் ,பாதுகாப்பற்ற உடல் உறவினால் வரும் பாலியல் நோய்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து மனநல பாதிப்பும் இடம் பெற்று இருந்து.பெண்களின் தற்போதைய மன அழுத்தம் சார்ந்த சிக்கல்கள் ,அதில் இருந்து விடைபெறுவதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படல் அவசியம்.எல்லாக் காலத்திலும் பெண்களுக்கு வாழ்க்கை ரீதியான இடர்கள்,அழுத்தங்கள் இருந்து இருக்கின்றன .எந்தக் காலத்திலும் மன அழுத்தம் அற்றவர்களாக மனிதப் பெண்கள் இருந்தார்கள் என்பதற்கான சான்றுகள் இன்னும் தெரியவில்லை.
வரலாற்றில் திறமையுடன் பிறந்தவர்களுக்காக ஒரு பக்கம் ஒதுக்கப்படுகிறது.அதில் சாதித்து தம் பெயர்களைப் பதிப்பவர்கள் ஒரு சிலரே ! ஏனெனில் நம் பெறுமதி நமக்கு புரியாமல் இருப்பதுதான்.எறும்பிற்கே ஆற்றலை வழங்கிய இறைவன் எமக்கு மட்டும் வழங்காமல் விடுவானா?நிச்சயம் எம்மிடம் திறமைகள் இருக்கின்றன.ஆனால் அவை மறைக்கப்பட்டு இருக்கிறது.நபித்தோழிகள் போன்ற தெளிவான சிறந்த ஆளுமைகள் ஏன் எம்மில் உருவாகவில்லை ,அன்னை தெரேசா போன்ற அன்புக்கரசிகளாக ஏன் எம்மால் ஆக முடியவில்லை??மேரி கியூரி ,கல்பனா சௌலா போன்ற மேதைகள் ஏன் எமக்குள் உருவாகவில்லை?மர்யம் ஜமீலாக்களை ஏன் மீண்டும் எம்மால் பார்க்க முடியவில்லை?சிந்திக்க வேண்டிய விடயமாக உள்ளது.உருவாக வேண்டும் இல்லாவிட்டால் உருவாக்கப்பட வேண்டும்.நம் சமூகம் வெற்றிக்கான வேண்டுமெனில் உயிர்த்துடிப்புள்ள பெண்கள் உருவாக வேண்டும்.பெண்களின் தன்னம்பிக்கை இன்று புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளதை காணலாம்.இவை மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் .சமூகத்தில் பெண்கள் பற்றி கொண்டுள்ள குறுகிய மனப்பான்மைகள் ஒழிக்கப்படல் வேண்டும்.ஒரு பெண் சமூகத்தோடு இணைந்து பல விடயங்களை கற்கும் போது அவள் தானாகவே பட்டைத் தீட்டப்படுகிறாள்.அதுமட்டுமல்லாது அவள் வாழ்கின்ற சூழலிற்கேற்ப இசைவடைந்து வாழப் பழகிக் கொள்கிறார்.
தாய்க்கு உள்ள சக்தி இந்த உலகத்தில் எதற்கும் இருப்பதில்லை .இத்தனைக்கும் அவள் ஒரு பெண் உயிர்த்துடிப்புள்ளவளாக அவள் இருந்தாலே ஒரு மடமைச் சமூகம் உருவாவதில் இருந்து பாதுகாக்க முடியும்.
பெண் வர்க்கம் தன்னம்பிக்கையை தம்மில் வளர்த்துக்கொள்ள வேண்டும் .ஆளுமைமிக்கவர்களாக எழுந்து வர வேண்டும்.உடலுறுதி கொண்ட ஆணை விட மனவுறுதி கொண்ட பெண் சிறப்புமிக்கவள் .தாயாக ,மனைவியாக ,தங்கையாக ,மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள்.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான் தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர்.அவ்வாறான பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலக பெண்களுக்கும் இன்றைய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி....
எழுத்தாளர்கள், இசையரசிகள், சொற்பொழிவாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு துறைகளிலும் கொடிகட்டிப் பறப்பது நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமையே !!பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து சாதிப்பதோடு அன்றாடம் ஊடகங்கள் அனைத்தின் மூலமும் போதித்த பெண்ணுரிமையை பேணிக்காக்க அயராது முயல வேண்டும்,நாட்டை ஆட்சி செய்ய மன்னன் இருந்தாலும் ,ஒரு வீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்தான் வேண்டும் என்பது வரலாறு கண்ட உண்மையாகும்..
- அப்ரா அன்ஸார் -

