COVID19 நச்சுயிர் மனித உண்ணல்,உடுத்தல்,உயிர்த்தல், உறவுமுறைகளை,சிறுபராயம் முதலே சொல்லிச் சொல்லி தூசு படிந்த நெறிமுறையை மீளாய்ந்துபாரென தலையில் குட்டிவிட்டுச் சென்றிருக்கிறது. தினசரி அதிகரிக்கும் தொற்றாளர்களால் ஊரடங்கு நீளும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எதுவரை நீளுமென எதிர்வுகூற முடியாது துன்புறுகிறோம்.
கி.பி, கி.மு என காலத்தைக் கணிப்பதுபோல் கோவிட்19 இன் முன் கோவிட்19 இன் பின் என உலகம் பாரிய மாற்றத்திற்காய்த் தன்னைத் தயார்படுத்தி வருகிறது. “வீட்டிலிருந்தே வேலைபார்ப்பது” என்பது பல்கும் என கணிக்கின்றனர். முன்பு இதுபற்றிச் சிந்திக்கா நிறுவனங்கள் தற்போது முடிந்தவரை வைரஸின் பின்னரும் தொடர முயன்று வருகின்றனர். வெளிநாடுசென்று வேலைபார்க்கும் தொழிலாளர்வீதம் வீட்டிலிருந்தே வேலைபார்ப்பதனால் கணிசமாகக் குறையுமென அல்ஜஸீரா குறிப்பிடுகின்றது.ஆகவே மனிதன் இந்த ஊடுபாவுகளை விரும்பியோ விரும்பாதோ ஏற்றாகவேண்டியிருக்கிறான்.
“மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என ஒன்றன்பின் ஒன்றாய் வரும் இந்தப் பேரவலம் முடிவுற, இறைவனைப் பாரார்த்திப்போம். “முடியாத துயரென்று எதுவுமில்லை” என்றார் கவிப்பேரரசு. நித்தியஜீவன் இறைவன் தவிர எல்லாவற்றிற்கும் ஆதி,அந்தமுண்டு. புனித அல்குர்ஆனிலே “ நிச்சயமாக கடினத்தொடு இலகு இருக்கிறது” எனக் குறிப்பிடுகின்றது. கடினமின்றி இலகுவில் கிடைப்பதும் நிலைப்பதில்லை.பரீட்சைக்கு முழு முனைப்போடு தயாராகிறோம். இறுதியில்,எய்திய சித்தி உற்ற துயரை மறைத்து விடுகிறது. மெய்யாக இந்தக் குர்ஆன் வசனம் “ஸம்ஸம்” ஊற்று போன்றது. அள்ள அள்ள அர்த்தங்கள் வெளிவந்துகொட்டேயிருக்கின்றன. ஊரடங்குச் சிறையிலிருந்து விடுதலை பெறுவதே உலக மக்களின் ஒருமித்த வேண்டுதல். இலங்கையிலே ஊரடங்கையும் மீறி செயற்பட்டதால் கைதானோர் அனேகர். ஏப்ரல் நான்கு அன்று நண்பன் கவி நிலவன் பிறந்ததினம். ஸ்கைப்பில் உரையாடும் போது ஊரடங்கு பற்றிப் பேச்செழுந்தது. “சபா....ஹ்.. இப்பவே கண்ணக் கட்டுதே... எப்படிடா பத்து மாதம் வயித்துக்குள்ள இருந்தோம் ” என்றான். அவனை “நிலா” என்றே அழைத்துப்பழகியிருக்கிறேன். நிலா காரணப் பெயர். சூரியன் ஒளியை பூமிக்குப் பிரதிபப்து போல் என்னைப் பலருக்கும் அறிமுகம் செய்திருக்கிறான்.
நச்சுயிர்த் தொற்று நிறைவுற்றபின் வாழ்வை மீளக் கட்டமைக்க வேண்டும்.முடிந்தவரை இவ்வாறான பேரவலம் வருவதினின்று காத்துக்கொள்ள வேண்டும். உலகளவில் வீட்டுப்பயிர்ச்செய்கை செய்வதை ஊக்கப்படுத்தி வருகின்றனர். மீண்டுமொரு இவ்வாறான ஊரடங்கின்,கடைகள் மூடப்பட்டிருக்கையில் வீட்டுப் பயிர்ச்செய்கை நிச்சயம் கைகொடுக்கும்.இளையுதிர்காரத்தின் பின் தளிர்ப்பவைகளே மரங்களாக்க் கொள்ளப்படுகின்றன. உற்ற துயர் பற்றியே சிந்திப்பவனால் முன்னேற முடியாது. ஆனால் அனேகர் மீள்வதைச் சிந்திக்கத் தவறி விடுகின்றனர். அறியாமையில் ஆழ்கின்றனர். மனுஷ்ய புத்திர்ரின் மந்திரக் கவிதை இதன் சாட்சி
”வெளிச்சம் வரும்போது
கூடவே
நிழல்களும்
வந்துவிடுகின்றன
பிறகு நாம்
வெளிச்சத்தைப்
பார்ப்பதேயில்லை
நிழல்களைவிட
அது
அவ்வளவு
பிரகாசமாக இருந்தும்.
இந்தவுலகம் மனிதனைப் போதையிலிருந்து மீட்டிருக்கிறது.மனிதன் தன்னைக் கதாநாயகனாக கற்பனைசெய்துகொண்டு வாழ்ந்து வருகிறான். ஏனைய உயிரினங்களை அடக்கியாண்டு மமதையொடு சுற்றியலைந்தான். கூடுகள் மட்டுமே கட்டத்தெறிந்த குருவிகளை கூண்டிலடைத்தான். ராஜபோதையில் ஆழ்ந்திருந்த மனிதனை அடக்க இயற்கை கைஇலெடுத்த ஆயுதம் வெற்றுக் கண்ணுக்குக் கூடத் தென்படாத உயிரொன்றை. மனிதா பார்.. உன்னை அடக்கியாளும் உயிரிகள் இன்னும் எத்தனையோ..நீ வாழ்ந்துவிட்டுச் சாகும் விழிப்போக்கன் மட்டுமே எனச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. இவைகளை மனிதன் கண்டு கொள்வதேயில்லை. உலக வாழ்வைக் கட்டிப் பிடித்து பற்று வைக்கிறான். உலகம் ஆழ்ந்த போதையில் ஆழ்த்தும் கந்தர்வம் என்பதை உணரும் போது கடைசி மனிதனும் இறந்திருப்பானோ என்னவோ...
(சிபான் - கஹட்டோவிட்ட)