தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்திற்கு இதுவரை 70ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தின் (CMEV) தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜனாயக தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவை எதுவுமே பாரியளவிலான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அல்ல. சாதாரணமான சம்பவங்களே ஆகும். எனினும் குறிப்பாக பேச்சாளர்கள் வாக்காளர்களுக்கு அதிகமான பொருட்களை விநியோகிப்பதனை இங்கே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அத்துடன் நாடுபூராகவும் பல்வேறு தந்திரோபாயங்களை பயன்படுத்தி அபேட்சகர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
அது எவ்வாறாயினும் தேர்தலுக்கு இன்னும் இருப்பது ஒரு மாதத்தை விட குறைந்த அளவு காலமே ஆகும்.
அத்துடன் இம்முறையும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் அபேட்சகர்களின் செலவுகள் குறித்து ஒரு பரந்த ஆய்வினை மேற்கொள்கின்றனர். குறிப்பாக சென்றமுறை தேர்தலின்போதும் நாங்கள் அவ்வாறானதொரு கணிப்பினை மேற்கொண்டிருந்தோம். எனவே அதன் அடிப்படையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் மற்றும் மொத்தமான செலவுகள் பற்றிய ஒரு அறிக்கையை இம்முறையும் நாங்கள் வெளியிட உள்ளோம்.
அத்துடன் தேர்தல் கண்காணிப்பு நிலையம் என்ற அடிப்படையில் இம்முறை நாங்கள் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பற்றி ஆழமாக ஆராய்கின்றோம். அதன் அடிப்படையில் தற்போது நாங்கள் நூற்றுக்கணக்கான RTI (தகவல் அறியும் சட்டம்) விண்ணப்பங்களை அனுப்பியுள்ளோம்.
அவற்றிற்கான உரிய பதில்களும் எமக்கு கிடைத்த வண்ணம் காணப்படுகின்றது. அதிலே முக்கியமாக, இன்றுவரை நாங்கள் கண்காணித்ததில் எமக்கு தெளிவாக புலப்பட்ட ஒரு விடயம், மத்திய அரசாங்கத்தை விட, உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து, நாம் கோருகின்ற தகவல்களுக்கான பதில்கள் மிகவும் நேர்த்தியான முறையில் கிடைக்கப்பெறுகின்றன.
எனவே இதிலிருந்து தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது, மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அமைச்சுக்களின் தகவல் அலுவலர்களை விட உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றுகின்ற தகவல் அலுவலர்கள் மிகவும் சுறுசுறுப்பான முறையில் தமது பணிகளை ஆற்றுகின்றார்கள்.
(சபீர் காமில்)