பதிவாளர் நாயகத் திணைக்களத்தினால் இலங்கை தபால் கூரியர் சேவை (Sri Lanka Postal Courier Service) மூலம் பிறப்புச் சான்றிதழ்களை தபால் செய்யும் முன்னோடித் திட்டம், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன அவர்களின் தலைமையில், கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நேற்று (12) காலை 8.00 மணிக்கு கம்பஹா மாவட்ட செயலாளர் அலுவலக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "இ-சனத்தொகைப் பதிவுகள் திட்டம்" (e-Janagana Lekhana Programme) இன் கீழ், 2021 ஜனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் காலகட்டத்தில் வழங்கப்பட்ட சான்றிதழ்களைப் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக, துல்லியமாக மற்றும் விரைவாக வழங்குவதற்காக, தபால் திணைக்களத்துடன் இணைந்து "இலங்கை தபால் கூரியர் சேவை"யைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது உரையாற்றிய பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், இத்திட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பணி என்றும், தபால் திணைக்களத்துடன் இணைந்து முறையான விநியோகத்திற்கான முன்னோடித் திட்டமாக இன்று ஆரம்பிக்கப்படும் இப்பணிக்காக தபால் திணைக்களத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
எதிர்கால உலகிற்குத் தேவையான ஆவணம் இதன் மூலம் மிகவும் விரைவாகவும் முறையாகவும் வழங்கப்படுவதாகவும், நாளுக்கு நாள் மாறிவரும் உலகிற்கு ஏற்பச் செயற்பட, டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைந்து பணியாற்ற முடிவது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் அவர் கூறினார். மேலும், பிறப்புச் சான்றிதழின் அதே இலக்கம் 15 வயது பூர்த்தியடையும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டையிலும் கிடைக்கப் பெறும் என்றும், பிறப்புப் பதிவுகளில் இருந்த அத்தியாவசியமற்ற தகவல்களை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட கம்பஹா, அத்தனகல்ல, தெஹிவளை, கடுவெல, களுத்துறை, ஹொரண, பாணந்துறை, குருணாகலை, இரத்தினபுரி மற்றும் வெல்லவாய ஆகிய 10 பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த மாதத்தில் முன்னோடித் திட்டங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் தொழில் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷன கமகே, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார, பதிவாளர் நாயகம் எஸ். ஜலதீபன், தபால் மா அதிபர் ருவன் சத்குமார, கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபர் லலிந்த கமகே, மேலதிக அரசாங்க அதிபர்களான சுகத் கித்சிறி மற்றும் ஆசிரி வீரசேகர, பிரதிப் பதிவாளர் நாயகம் (மேற்குப் பிராந்திய அலுவலகம்) சமன் திஸாநாயக்க, அத்தனகல்ல பிரதேச செயலாளர் எஸ்.பி. குணவர்தன, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிகா மல்லவஆரச்சி, கம்பஹா பிரதேச செயலாளர் நதீஷானி அமரசிங்க, உதவிப் பதிவாளர் நாயகம் (கம்பஹா) ஐரோஷா வீரசிங்க, மேலதிக மாவட்டப் பதிவாளர் திலிப் விக்கிரமசிங்க ஆகியோர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.







