ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் 44வது சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து வருகிறது.
இந்த கண்காட்சியில் அமைந்துள்ள எழுத்தாளர் பேரவை அரங்கில் துபாயில் வசித்து வரும் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் பஜிலா எழுதிய ‘ரேட்டட் ஹலால்’ என்ற ஆங்கில நாவல் வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவுக்கு அமீரக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் தலைமை வகித்தார். இம்தாதுல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்.
நூலை தமிழக பிரமுகர் எஸ்.எம். இதாயத்துல்லா வெளியிட முதல் பிரதியை அமீரக கல்வித்துறை அலுவலர் நவால் அலி அல் கிந்தி பெற்றுக் கொண்டார்.
அப்போது பேசிய எஸ்.எம். இதாயத்துல்லா, தமிழக பெண் ஒருவர் ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட நாவல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி அரபகத்தில் வெளியிடுவது பெருமையளிக்கிறது. அவரது நூலை வாங்கி நாம் அனைவரும் உற்சாகப்படுத்த வேண்டும். தொடர்ந்து அவர் பல்வேறு நூல்களை வெளியிட வேண்டும் என்றார்.
அமீரக பிரமுகர் நவால் அலி அல் கிந்தி எழுத்தாளருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஃபாஸ் கூரியர் ஃபாரூக், ஹசன், இல்யாஸ், பசிலா ராணி, கிரீன் குளோப் ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை நிகழ்த்தினர். நூலாசிரியர் பஜிலா ஏற்புரை நிகழ்த்தினார். தனக்கு இந்த நூலை வெளியிட வாய்ப்பு வழங்கிய ஷார்ஜா புத்தக ஆணையத்துக்கு நன்றி தெரிவித்தார். ஷார்ஜா 44வது சர்வதேச புத்தக கண்காட்சி அரங்கில் எனது நூல் வெளியிடப்படுவது எனது வாழ்வில் மறக்கமுடியாத தருணம் என உருக்கமாக குறிப்பிட்டார்.

