கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தொழில் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க சமூக அபிவிருத்திக்கான இரண்டாவது உலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் (03) கட்டாருக்கு பயணமானார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்ட சமூக அபிவிருத்திக்கான இரண்டாவது உலக மாநாடு இன்று (04) முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை தோஹாவில் நடைபெற உள்ளது.
சமூக அபிவிருத்திக்கான முதல் உலக மாநாடு 1995 ஆம் ஆண்டு டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்றது.
முக்கிய பொறுப்புகள் மற்றும் அர்ப்பணிப்புகளான 10 ஐ அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்த இரண்டாவது மாநாட்டில், வறுமை ஒழிப்பு, முழு வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் துரித மாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.
அத்துடன், சிறந்த வேலைவாய்ப்பை மேம்படுத்துதல், சமூக உள்ளிருத்தல் (Social Inclusion), எவரையும் கைவிடாமை போன்ற விடயங்களுடன் சமூக அபிவிருத்திக்கான உலகளாவிய அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துதல் மற்றும் 2030 நிலைத்த நீடித்த அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்கு புதிய உத்வேகம் அளித்தல் என்பனவும் இந்த மாநாட்டின் மேலும் சில நோக்கங்களாகும்.
ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.
குறித்த மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவுடன் தொழில் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (வெளிநாட்டு அலுவல்கள்) திரு. பி. வசந்தன் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





