வணிக உலகில் நுழைவதற்கும், தற்போதுள்ள வியாபாரத்தை மேம்படுத்துவதற்கும், புதிய வெற்றிகரமான பாதையை அமைப்பதற்கும் தேவையான அறிவையும் அனுபவத்தையும் வழங்கும் நோக்குடன், "வணிங கிளினிக்" நிகழ்வு மேல் மாகாண தொழில்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் வழிகாட்டுதலின் கீழ், அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் அத்தனகல்ல பிரதேச சபையின் ஏற்பாட்டில் அண்மையில் பிரதேச செயலாளர் அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வியாபார வாய்ப்புகளைத் தேடும் இளைஞர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் இந்த இந்நிகழ்வில், தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் ஆரம்ப மூலதனப் பிரச்சினைகள், வியாபாரப் பதிவு முறைகள், தொழில்நுட்பப் பயிற்சி வாய்ப்புகள், அரச கடன் திட்டங்கள் மற்றும் வெற்றிகரமான வியாபார அனுபவங்கள் போன்றவை குறித்து நிபுணர்களால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்வின் முடிவில், வியாபார அனுபவங்கள் மற்றும் வெற்றி குறித்த ஒரு சிறப்புக் கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.
மேலும், வியாபாரத் துறையில் வியாபார சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு தகவல் சாளரமும் இங்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சமய மற்றும் கலாச்சார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ருவன் மாப்பாலகம, அத்தனகல்ல பிரதேச செயலாளர் சம்பத் குணவர்தன ஆகியோர், மேல் மாகாண தொழில்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், ஏற்றுமதி அபிவிருத்தி சபை, வியாபாரப் பெயர் பதிவாளர் அலுவலகம், கட்டுமானம் மற்றும் இயந்திர உபகரணங்கள் திணைக்களம், RDB வங்கி உட்பட பல நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




