👉 முதலாவதாக அனைவரும் அறிந்த ஒரு சில விடயங்கள் இருக்கின்றன.
// திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ‘தஹம்/ ஞாயிறு பாடசாலை’ “மிஹிந்துபுர மஹிந்த வங்ச குனானுஸ்மர்ன” என்ற பாடசாலை பல வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அடிக்கல் நாட்டும் வைபவம் ஒன்று கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.09 என்ற சுப நேரத்தில் திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த பல முக்கிய பௌத்த தேரர்கள் முன்னிலையில் நடைபெற்றது //
// பின்னர் அதே தினத்தில் (16) இரவு நேரம் புத்தர் சிலை ஒன்றினை அந்த இடத்தில் வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றது. அதன் போது போலீசார் பிக்குகள் மற்றும் பொதுமக்களிடையே முரண்பாடு ஒன்றும் ஏற்பட்டது. இறுதியாக போலீசார் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை பாதுகாப்பிற்காக திருக்கோணமலை துறைமுக போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள் //
// ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த கைகலப்பின் போது பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் மற்றும் திருகோணமலை கல்யானவங்சதிஸ்ஸ தேரர் என்பவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். பின்னர் 17ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் ஒரு மணி அளவில் குறித்த புத்தர் சிலையை போலீசார் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டு வந்து அதே இடத்தில் மீண்டும் வைத்தார்கள் //
அடுத்ததாக பலரும் கூறாத ஆனாலும் உண்மையான ஒரு சில விடயங்கள் - Few Unpopular Facts
01. 1951 ஆம் ஆண்டில் இந்த இடத்திலே விகாரை ஒன்றும் ஞாயிறு பாடசாலை ஒன்றும் இருந்துள்ளது. அதற்கான எழுத்து மூல ஆதாரங்கள் காணப்படுகின்றன.
02. ஆனாலும் பிற்காலத்தில் ஏற்பட்ட யுத்த நிலைமைகள் காரணமாக பாதுகாப்பினை கருத்தில் கொண்டு குறித்த விகாரை உட்புறம் காணப்படுகின்ற இராணுவ முகாமுக்கு அருகே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
03. முன்பு இருந்ததாக கூறப்படுகின்ற குறித்த ஞாயிறு பாடசாலையில் கற்ற பௌத்த மாணவர்கள் பலரும் இன்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ளார்கள்.
04. சுனாமி பேரழிவின் போது அந்த இடத்தில் காணப்பட்ட கட்டடம் முழுமையாக அழிந்து சென்றுள்ளது. குறித்த பழைய கட்டடத்தில் இடிபாடுகள் இன்றும் அந்த இடத்தில் காணப்படுகின்றன.
05. அதன்பின்னர் கரையோர பாதுகாப்பு திணைக்களம் குறித்த பிரதேசத்தை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பைன்ஸ் மரங்களை நட்டு பாதுகாத்து வந்துள்ளார்கள்.
06. அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு ‘சிரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்கு’ அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 40 பர்ச்சேஸ் கரையோர பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான நிலத்தினை ‘பூஜா நில ஒப்பு’ என்ற அடிப்படையில் வழங்கியுள்ளார்கள்.
07. நிலத்தின் உரிமை விகாரைக்கு இருந்த போதிலும் அதனை பராமரித்து பாதுகாக்கின்ற பொறுப்பு - கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கே உரியதாக காணப்பட்டுள்ளது. பின்னர் 2016 ஆம் ஆண்டு விகாரை, குறித்த காணியை சுற்றி வேலி ஒன்றினை அமைத்துள்ளார்கள்.
08. இன்றைய தினம் புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்திலிருந்து ஐந்து அடி இடது புறமாக இன்னுமொரு அரச மரமும் இன்னுமோர் புத்தர் சிலையும் காணப்படுகின்றது. மேலும் குறித்த இடத்திற்கு மிக அருகாமையில் இருபுறமும் இரண்டு விகாரைகள் காணப்படுகின்றன. அந்த இரண்டு விகாரைகளும் ஒரு தேரரின் கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளது.
🛑 உண்மையில் இந்தப் பிரச்சினைக்கான காரணம் ஞாயிறு பாடசாலைக்காக புதிதாக அடிக்கல் நாட்டிய சம்பவமோ அல்லது புத்தர் சிலை வைக்கப்பட்டதோ அல்ல. இவை அத்தனைக்கும் முக்கிய காரணம் ஒரு Coffee Shop !!
“ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை பிரதேசத்தின் ஒருங்கிணைப்பாளர் தீபானி லியனகே என்பவரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் நடத்துகின்ற இந்த கடைக்கு ‘Coffee Shop’ எதிராக பலமுறை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐ.தே.கட்சியின் குறித்த ஒருங்கிணைப்பாளருக்கு எதிராக காணப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டு - ‘அப்போதைய ரணில் விக்ரமசிங்க அரசின் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த செந்தில் தொண்டமன் உடன் இணைந்து காணிகளை அபகரிப்பது’ என்பதாகும் - என ஊர் மக்கள் சிலர் குறிப்பிட்டார்கள்…”
எவ்வாறாயினும் குறித்த கடையை நடத்திச் செல்கின்ற L Thilak Perera என்பவரை நாங்கள் சந்தித்து அவருடன் கதைத்தோம். அப்போது இந்த விடயங்களை அவர் கூறினார்.
எமக்கு இந்த காணியை சிரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரை மூலம், குறித்த விகாரையின் நல தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு’ என்ற அடிப்படையில் குத்தகைக்கு தரப்பட்டது. உண்மையில் விகாரைக்கு வருமானங்கள் எதுவும் பெரிதாக இல்லை. ஆகவே இருக்கின்ற இந்த காணியில் இருந்து ஏதேனும் வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காகவே அவ்வாறு செய்தார்கள்.
எங்களுக்கு இந்த கடையை ஆரம்பிக்கும்போது எந்தவிதமான அனுமதி பத்திரங்களும் இருக்கவில்லை. எமக்குத் தெரிந்த ஒரே விடயம் 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய ஒரு பத்திரம் காணப்படுகின்றது, என்பது மட்டுமே. அப்போது நாங்கள் எமது வியாபாரத்தை ஆரம்பிப்பதற்காக அத்திவாரங்களை கட்டி இருந்தோம்.
அவ்வாறிருக்கும்போது கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் நார சபை என்பன வந்து இந்த கட்டுமான பணிகளை நிறுத்தினார்கள். ஏனென்றால் உரிய அனுமதி பெறாமல் அவ்வாறான கட்டுமானங்களை செய்ய முடியாது, என அவர்கள் கூறினார்கள்.
அதன்பின்னர் இவ்வாறான ஒரு கரையோர பிரதேசத்தில் வியாபார நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதாயின் ஆறு நிறுவனங்களின் அனுமதிகள் தேவை என பின்வரும் நிறுவனங்களுக்கு சென்று அனுமதியை பெற்று வருமாறு கூறினார்கள்.
- புத்த சாசன அமைச்சு
- கரையோர பாதுகாப்பு
- மத்திய சுற்றாடல் அதிகார சபை
- கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை
- நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
- வீதி அபிவிருத்தி அதிகார சபை
இந்த ஆறு நிறுவனங்களின் அனுமதியையும் பெற்று நாங்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சென்று Permit இனை பெற்றோம். பின்னர் CCCRN/ADC/6578 - என்ற Permit கிடைத்தது.
அவ்வாறு இருக்கும்போது 2024ஆம் ஆண்டு நகர சபை ‘சட்டவிரோதமான ஒரு கட்டடம்’ என எமக்கு எதிராக ஒரு வழக்கினை தொடர்ந்தார்கள். எல்லையைத் தாண்டி நாங்கள் வியாபாரம் செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
அதன்பின்னர் 2025. 07. 18 கரையோர பாதுகாப்பு திணைக்களம் எமது கடையின் Permit இனை Cancel செய்கின்றார்கள். அதற்கான காரணமாக அவர்கள் கூறிய விடயம் ‘நாங்கள் எமக்கு வழங்கியிருந்த எல்லையை தாண்டி சென்று வியாபாரம் செய்தோம்’ என்பதாகும்.
மேலும் உடனடியாக இந்த இடத்தை விட்டு அகன்று செல்லுமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கிடையே குறித்த கடிதத்தை விகாரை தரப்பினர் மேல்முறையீடு செய்கின்றார்கள். ஆனாலும் அது நிராகரிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமை இயக்குநர் (ஜெனரால்) தமக்கு காணப்படுகின்ற அதிகாரங்களை பயன்படுத்தி போலீசாருக்கு இந்த கடையை அகற்றுவதற்கு பணிக்கின்றார்.
பின்னர் கடந்த நான்காம் திகதி போலீசார் கரையோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து இந்த இடத்தில் உள்ள கடையினை அகற்ற வந்துள்ளார்கள். அப்போது விகாரையின் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஏழு நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார்கள்.
பின்னர் விகாரை தரப்பினர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஏற்கனவே கடை உரிமையாளர் Thilak Perera என்பவருக்கு எதிராக நகர சபை போட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த வழக்குக்கான ஒரே சாட்சி இந்த கடையாகும். ஆகவே இந்த கடை இந்த இடத்தில் இருக்க வேண்டும் என, கூறியுள்ளார்கள்.
அதற்கு போலீசார் - அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை, விகாரை - அப்போது எங்களுக்கு இன்னும் ஏழு நாட்கள் தாருங்கள் அதற்குள் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று ஏதேனும் செய்கின்றோம்,
போலீசார் - சரி அதிகபட்சம் ஏழு வேளை நாட்கள் தருகின்றேன்.
சரியாக அவர்கள் வழங்கிய ஏழு நாள் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது. அடுத்து வருகின்ற வேலையினால் இந்த திங்கட்கிழமை. ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக ஒரு புத்தர் சிலை அந்த இடத்திற்கு வருகின்றது. 👀
⏩️ இதுகுறித்து அந்த இடத்திலிருந்து சிரேஷ்ட போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பின்வருமாறு தெளிவு படுத்தினார்.
"....கரையோர பாதுகாப்பு சட்டத்தின் கீழ் யாராவது ஒருவர் கரையோரத்தில் கடைகளை செய்வதாயின் அதற்கான சட்டங்கள் உள்ளன. மேலும் குறித்த Agreement இலேயே, இவ்வளவு காலம் தான் முடியும் என்ற கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. காலம் முடிந்தால் அதனை Renew செய்து கொள்ள வேண்டும்.
/ மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதேச செயலகம் UDA மற்றும் நகர சபை என்பவற்றின் அறிக்கைகள் கட்டாயம் தேவை. மேலும் குறித்த கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லைக்கு அப்பால் செல்லவும் முடியாது. அதுதான் சட்டம்.
/ இந்த இடத்தில் காணப்பட்ட பிரச்சினை இவர்கள் வழங்கப்பட்ட எல்லையையும் தாண்டி சிறிய சிறிய பகுதிகளில் கடைகளை செய்திருந்தார்கள். பின்னர் கரையோர பாதுகாப்பு அதிகார சபை வந்து எச்சரித்து அவற்றை நிறுத்தினார்கள்.
/ பின்னர் மீண்டும் குறித்த Agreement renew செய்யப்பட்டபோது 127 வர்க்க அடிகள் வழங்கப்பட்டிருந்த கடை 400 வர்க்க அடி வரை சென்றிருந்தது.
இதனால் கரையோர பாதுகாப்பு அதிகார சபை இவர்களுடைய Permit இனை Cancel செய்தார்கள். பின்னர் 7 நாட்களுக்குள் இதனை அகற்றுமாறு போலீசார் பணிக்கப்பட்டார்கள்.
/ போலீசார் இங்கு வந்தபோது அவர்களுடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டிற்கு இணங்க கிட்டத்தட்ட இரண்டு முறை ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
குறித்த ஏழு நாட்கள் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. அதற்கிடையே தான் இவர்கள் இந்த புதிய கட்டடத்தை இந்த பக்கம் கட்டியுள்ளார்கள்.
அந்த சந்தர்ப்பத்தில் கரையோர பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இந்த இடத்திற்கு நேற்று காலையில் வந்து இந்த சட்டவிரோதமான கட்டடத்தை அகற்றுமாறு கூறினார்கள்.
/ கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு கீழ் காணப்படுகின்ற எந்த காணியில் எந்த விதமான சட்டவிரோத கட்டிடமாக இருந்தாலும் அதனை கட்டுவதற்கு உரிய அனுமதிகள் பெறப்பட வேண்டும்.
ஆனால் இங்கே அவ்வாறான எந்தவிதமான அனுமதியும் பெற்றெடுக்கவில்லை. அதனாலேயே இதனை அகற்றுமாறு அவர்கள் கூறினார்கள்…”
இதுதான் நடந்த சம்பவம்.
நிலம் என்பது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு விடயம். திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாறான பல சம்பவங்களும் இதற்கு முன்னர் நிகழ்ந்துள்ளன. தொல்பொருள் மற்றும் வன பாதுகாப்பு என்ற பெயரில் மக்களுடைய நிலங்கள் பல வெவ்வேறு அரச நிறுவனங்களினாலும் விகாரைகளாலும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவ்வாறான ஒரு பின்புலத்திலேயே இந்த சம்பவம் இங்கே நடைபெற்றுள்ளது.
அனைவரும் தனக்கு தேவையான பகுதியை மாத்திரம் எடுத்துக் கொண்டு ஓடுகின்றார்கள். ஊடகங்கள் கூட 'ஹிட் ஆகின்ற' பகுதியை மாத்திரமே காட்டுகின்றார்கள். இந்தப் பிரச்சினை இதனோடு முடியப்போவதில்லை. சில வேலை இதுவே ஒரு பெரிய பிரச்சினையின் ஆரம்பமாகவும் இருக்கலாம் !!
-Shabeer Mohamed-







