இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் புதிய வரவுசெலவுத்திட்டச் சுற்றறிக்கை [08/2025(i)] வெளியிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் இழப்பீடுகளைத் திருத்தம் செய்து, அவற்றை மேலும் திறம்படச் செயற்படுத்துவதே இச்சுற்றறிக்கையின் நோக்கமாகும்.
வீடுகளை இழந்தவர்களுக்கான வாழ்வாதார உதவி:
மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை முழுமையாக இழந்த அல்லது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும். அதன்படி:
* இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு ரூ. 25,000/-
* இரண்டுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு ரூ. 50,000/- உதவித்தொகையாக வழங்கப்படும்.
விவசாயம் மற்றும் கால்நடைத் துறைக்கான இழப்பீடுகள்:
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீள் நடுகைக்காக ஹெக்டேயருக்கு ரூ. 150,000/- முதல் ரூ. 200,000/- வரை மானியம் வழங்கப்படவுள்ளது. மேலும், அனர்த்தத்தினால் உயிரிழந்த கால்நடைகளுக்கும் இழப்பீடு வழங்கப்படவுள்ளது:
* கலப்பின கால்நடைகளுக்கு தலா ரூ. 200,000/- (அதிகபட்சம் ரூ. 2 மில்லியன்).
* ஆடு மற்றும் பன்றி வளர்ப்பிற்கு தலா ரூ. 20,000/-.
* கோழி வளர்ப்பிற்கு (லேயர்) தலா ரூ. 500/- வீதம் அதிகபட்சம் ரூ. 1 மில்லியன் வரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி மற்றும் வணிகத் துறை:
சேதமடைந்த படகுகளை சீனோர் நிறுவனத்தின் மூலம் புதியதாக வழங்க அல்லது பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வலைகளை இழந்த மீனவர்களுக்கு ரூ. 100,000/- பெறுமதியான கூப்பன் பத்திரி வழங்கப்படும். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வணிகக் கட்டிட உரிமையாளர்களுக்கு சேத மதிப்பீட்டின் அடிப்படையில் அதிகபட்சம் ரூ. 5 மில்லியன் வரை இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
வீட்டுப் பழுதுபார்ப்பு மற்றும் மத ஸ்தலங்கள்:
முழுமையாக சேதமடைந்த அல்லது அபாயகரமான வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளைக் கட்ட ரூ. 5 மில்லியன் மானியம் வழங்கப்படும். பகுதியளவு சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்க்க அதிகபட்சம் ரூ. 2.5 மில்லியன் வரை உதவித்தொகை வழங்கப்படும். அத்துடன், பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களைச் சுத்தம் செய்து மறுசீரமைக்க ரூ. 25,000/- ஒரு முறை கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.
இந்த நிவாரணத் திட்டங்களை அந்தந்த அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக விரைவாகச் செயற்படுத்துமாறு திறைசேரியின் செயலாளர் (பதில் கடமை) ஏ.என். ஹபுகல அறிவுறுத்தியுள்ளார்.

