அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு முஸ்லிம் மீடியா போரம் விஜயம்; நிவாரணப் பணிகளும் முன்னெடுப்பு

Rihmy Hakeem
By -
0


நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் கள விஜயங்களை மேற்கொண்டனர். 


இதற்கமைய, கடந்த டிசம்பர் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கம்பளை மற்றும் கெலிஓயா பிரதேசங்களுக்கான விஜயத்தினை முன்னெடுத்திருந்தனர். 


இதன்போது அப்பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கும் விஜயம் செய்து ஆறுதல் கூறினர். 


இதன்போது, நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற கம்பளை முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் கெலிஓயா அபிவிருத்தி மன்றம் ஆகியவற்றின் முக்கியஸ்தர்களை மீடியா போர பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தேவைகளை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வருவதற்கான  முன்னெடுப்புகளின் அவசியம் குறித்தும் ஆராய்ந்தனர்.


இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் வெல்லம்பிட்டி மற்றும் மெகட கொலன்னாவ பிரதேசங்களில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் பல தடவைகள் விஜயம் செய்து ஆறுதல் கூறியதுடன் அவர்களது வீடுகளை சுத்தப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன. 


கொழும்பு மாவட்ட நிவாரணப் பணிகளுக்கு தலைமை தாங்கி வருகின்ற கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்துடனும் முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் சந்திப்புகளை மேற்கொண்டனர். 


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய ரீதியிலான அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்திற்கும் முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் விஜயம் செய்து கலந்துரையாடினர். 


இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் மள்வானை பிரதேசத்தில் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் கடந்த டிசம்பர் 20ஆம் திகதி விஜயம் செய்தனர். 


இதன்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனர்த்த நிவாரணம் மற்றும் சுத்திகரிப்பு பணிகளை முன்னெடுத்த நபவிய்யா தரீக்கா அமைப்பின் முக்கியஸ்தர்களையும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர். 


மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், பொலன்னறுவை மாவட்டத்தின் கல் எல மற்றும் புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பிரதேசத்திற்கும் அமைப்பின் பிரதிநிதிகள் கள விஜயங்களை மேற்கொண்டனர். 


இந்த விஜயங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் எம்.பி.எம். பைறூஸ், ஸ்தாபக போஷகர் என்.எம். அமீன், பொருளாளர் கியாஸ் ஏ. புஹாரி, பிரதித் தலைவர்களான ஷிஹார் அனீஸ், ஜெம்ஸித் அஸீஸ் தேசிய அமைப்பாளர் றிப்தி அலி, உப செயலாளர் றம்ஸி குத்தூஸ் மற்றும் போரத்தின் உறுப்பினரான சட்டத்தரணி இர்ஹாம் சேகுதாவூத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.


ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நாடளாவிய ரீதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மூவின சமூகங்களையும் சேர்ந்த 35 ஊடகவியலாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான நிவாரண வேலைத்திட்டங்களை கட்டம் கட்டமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)