அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட்டத்தின் கைத்தொழில் மற்றும் வர்த்தகங்களுக்கான நிவாரணங்கள் வழங்குவது தொடர்பாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுக்கு அறிவூட்டும் நிகழ்வொன்று அண்மையில் (12) கம்பஹா மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், தொழில் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
உற்பத்தித்துறை சார்ந்த தொழில்களுக்காக தொழில்துறை அமைச்சால் நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக ஏற்கனவே ஒரு கூகுள் விண்ணப்பப் படிவம் (Google Form) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் உள்ளடங்காத ஏனைய வணிகங்கள் மற்றும் தொழில்களுக்கான நிவாரணங்கள் வழங்குவது குறித்து, கைத்தொழில் மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கான வளங்கள், தொழில்துறை அமைச்சின் ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் ஆலோசகரான சசிகா டி சில்வாவினால் வழங்கப்பட்டது.
கூகுள் படிவத்தின் மூலம் விவரங்களைச் சமர்ப்பிக்க தகுதி பெறாத வர்த்தகர்களுக்கான நிவாரணங்களைப் பெறுவது பற்றிய வழிமுறைகள் பற்றியும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
தொழிலதிபர்கள் என்றால், சம்பந்தப்பட்ட தகவல்களை டிசம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் கைத்தொழில் அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஏனைய வர்த்தகங்களுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணங்கள் குறித்து மேலும் இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டது:
* உற்பத்தித் தொழில்களுக்கு முதல் கட்டமாகச் சுத்திகரிப்புப் பணிகளுக்காக இரண்டு இலட்சம் ரூபாய் (ரூ. 2 இலட்சம்) வழங்கப்படும்.
* இரண்டாம் கட்டமாக, வணிகங்களுக்கு ஏற்பட்ட சேதம் சர்வதேச தரத்தின்படி கணக்கிடப்பட்டு, உரிய நஷ்ட ஈடுத் தொகை வழங்கப்படும்.
* காப்பீடு செய்துள்ள தொழில்கள் மற்றும் வணிகங்களுக்கான காப்பீட்டு நஷ்ட ஈட்டை பெற்றுத் தருவதில் கைத்தொழில் அமைச்சு தலையிடும்.
* இந்தத் தொழில்கள் மற்றும் வணிகங்களுக்குச் சலுகை வட்டி விகிதத்தில் வங்கிக் கடன்கள் வழங்கவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சிறு, நடுத்தர, நுண் மற்றும் பாரிய அளவிலான வணிகங்களை விரைவாக மீட்டெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், தற்போது வரை, கூகுள் விண்ணப்பப் படிவம் மூலம் சுமார் 2000 உற்பத்தித்துறை சார்ந்த தொழிலதிபர்கள் பதிவு செய்துள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ஹெட்டியாராச்சி, ருவன்திலக்க ஜயகொடி, உதவி மாவட்டச் செயலாளர் நிலாந்தி குமாரி, தொழில்துறை அபிவிருத்தி சபை பிரதிப் பணிப்பாளர் சமிந்த ரணதுங்க, சிறு வணிக அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர்களான அசோகா வணிகநெத்தி, ஸ்ரீமாலி பெரேரா உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் கைத்தொழில் மற்றும் வணிக சங்கப் பிரதிநிதிகள் சுமார் 75 பேர் கலந்துகொண்டனர்.








