RTI கோரிக்கைக்கு தொலைபேசி மூலம் பதில் வழங்கிய அரச நிறுவனம் ; சாதாரண தகவலை பெறுவதற்கும் கொழும்புக்கு செல்ல வேண்டிய நிலையில் பொதுமக்கள்! தீர்வு கிட்டுமா?

Rihmy Hakeem
By -
0
படம் - செயற்கை நுண்ணறிவு 

 (ரிஹ்மி ஹக்கீம்)


நீதிச் சேவை ஆணைக்குழுவின் கீழுள்ள நீதிமன்றங்கள் உட்பட ஏனைய நிறுவனங்களில் தற்போது நிலவும் நீதிமன்ற தட்டெழுத்தாளர் (Court Typist) பதவி வெற்றிடங்கள் தொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழு பதிலளித்துள்ளது. 


கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த ஏ.எச்.ஆர்.மொஹமட் என்ற இளைஞரால் தகவல் அறியும் உரிமை சட்டத்தினைப் (RTI) பயன்படுத்தி அனுப்பப்பட்ட தகவல் அறியும் கோரிக்கைக்கு தொலைபேசி அழைப்பு மூலம் இவ்வாறு பதில் வழங்கப்பட்டுள்ளது.


"தற்போது நீதிச் சேவை ஆணைக்குழுவின் கீழுள்ள நிறுவனங்களில் நீதிமன்ற தட்டெழுத்தாளர் பதவி வெற்றிடங்கள் 180 உள்ளன. மேலும் குறித்த பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை 2026 ஜனவரியில் இடம்பெறவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேற்படி பதவி வெற்றிடங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் ஆணைக்குழுவிலும் இது தொடர்பான விசாரணைகளுக்கு சரியான பதில் வழங்கப்படாத நிலையிலும் மொஹமட் என்பவரால் RTI ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறித்த தகவல் அறியும் விண்ணப்பத்தினை மேற்படி மொஹமட் என்பவர் கடந்த 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி மின்னஞ்சல் ஊடாக விண்ணப்பித்திருந்தார். 


RTI சட்டத்தின் அடிப்படையில் தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு 14 நாட்களுக்குள் பதில் வழங்க வேண்டிய நிலையில் நவம்பர் 27 ஆம் திகதி வரை பதில் கிடைக்காததன் காரணமாக விண்ணப்பதாரியான மொஹமட் மேற்படி தினத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் குறித்துரைக்கப்பட்ட அதிகாரிக்கு (Designated Officer) RTI 10 ஊடாக முறையீடு செய்திருந்தார்.


எனினும் அதற்கும் இருவாரங்களாக பதில் எதுவும் கிடைக்காத நிலையில், நீதிச் சேவை ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கங்களும் இயங்காத நிலையில் டிசம்பர் 11 ஆம் திகதி ஆணைக்குழு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தகவல் அதிகாரியை சந்தித்து மேற்படி விபரங்களை தெரிவித்திருந்தார்.


நீதிச் சேவை ஆணைக்குழு அலுவலகத்தின் கட்டிடம் இடமாற்றப்பட்டுள்ளதால் (இலங்கை சட்டக் கல்லூரிக்கு அருகில்) இணையம்‌ மற்றும் தொலைபேசி இணைப்புக்கள் இதுவரை சரி செய்யப்படாமையே தாமதத்திற்கான காரணம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 


இதற்குப் பதிலளித்த மொஹமட், எனினும் தற்போது தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்வதற்குரிய நாளும் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவரது தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்ட தகவல் அதிகாரி இன்றைய தினம் (டிசம்பர் 12) அவரை தொடர்பு கொண்டு நீதிமன்ற தட்டெழுத்தாளர் பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை மற்றும் போட்டிப் பரீட்சை விபரம் என்பவற்றை அறிவித்துள்ளதுடன், நிலைமை சீரானவுடன் மின்னஞ்சல் ஊடாக பதில் அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தி ஒரு சாதாரண நபர் நாட்டின் முக்கிய ஆணைக்குழு ஒன்றில் இருந்து அதுவும் அந்த அலுவலகம் தற்போது புதிய இடத்தில் சரிவர தமது செயற்பாடுகளை ஆரம்பிக்காத நிலையிலும் தேவையான தகவலைப் பெற்றுக் கொண்டமை இங்கு முக்கிய அம்சமாகும்.


மேலும் பிழையான‌ தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்ததையடுத்து மொஹமட் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பலரது சந்தேகங்கள் தீர்க்கப்பட்டதுடன் மட்டுமல்லாமல் எந்தவொரு அரச அலுவலகத்திலும் நாட்டின் எந்தவொரு பிரஜையாலும் நமக்குத் தேவையான தகவல்களை சரியான முறையில் பெற்றுக் கொள்ள RTI உதவும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.


நீதிச் சேவை ஆணைக்குழுவின் தொலைபேசி இணைப்புக்கள் பல வாரங்களாக இயங்குவதில்லை என்று சேவை பெறுநர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் விசனம்‌ தெரிவித்து வருகின்றனர். உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் நேரடியாக ஆணைக்குழு அலுவலகத்திற்கு வந்து தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறி வருகின்றனர். 


மேற்படி தகவல் கோரிக்கையை சமர்ப்பித்த மொஹமட் என்பவருக்கும் அங்குள்ள தகவல் அதிகாரியின் கையடக்கத் தொலைபேசி மூலமே தகவல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)