கம்பஹா மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி உபகுழுவின் விசேட கூட்டமானது, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் தொழில் பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க தலைமையில் கடந்த 2 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது அவசர அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களை அடையாளம் காண்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட தரவுக் கட்டமைப்பு குறித்துப் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் கைத்தொழில், சேவை மற்றும் வர்த்தக நிலையங்கள் எனத் தனித்தனியாகப் பெறப்பட்ட தரவுகளை, உரிய கணினி அமைப்பில் உட்சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளமை இங்கு தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கான நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், இதற்கு மேலதிகமாக அரச வங்கிகள் உள்ளிட்ட வங்கிகள் ஊடாக 3 சதவீத சலுகை வட்டி அடிப்படையில் 10 இலட்சம் ரூபா வரை கடன் வசதிகளை வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான கடன் நிவாரணங்கள் தொடர்பான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இங்குத் தெரிவிக்கப்பட்டது.
கம்பஹா மாவட்டத்தின் சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான கைத்தொழில்துறையினரைத் தனித்தனியாக அழைத்து, ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செயற்படுத்துவது குறித்தும் உபகுழுவின் கவனம் ஈர்க்கப்பட்டது. குறிப்பாகக் கைத்தொழில்துறையினருக்கு சர்வதேச அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும், இதற்காக வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் மத்திய வங்கியின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, கம்பஹா மாவட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்றுமதி சந்தைப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துவதும், அவர்களின் உற்பத்தியை வெளிநாட்டுச் சந்தைக்குக் கொண்டு செல்வதும், அதற்காக இணையவழித் தொழில்நுட்பத்தைப் (Online Communication Technology) பயன்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ஹெட்டியாராச்சி, ருவன்திலக்க ஜயகொடி, மாவட்ட செயலாளர் லலிந்த கமகே, உதவி மாவட்ட செயலாளர் நிலாந்தி குமாரி உள்ளிட்டோர் மற்றும் மாவட்டத்தின் கைத்தொழில் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள், அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
தகவல்: மாவட்ட ஊடகப் பிரிவு - கம்பஹா

